குபந்தி, எத்தனை பேர் இந்த பெயரை கேள்விபட்டிருக்கின்றீர்கள். நான் இன்று தான் இந்த பெயரை கேள்விபடுக்கிறேன். இது ஒரு செடியின் பெயர். இந்த பெயரைத்தான் இப்போ கேள்விப்படுகிறேனே தவிர, எனக்கு இந்த செடி சிறுவயது முதல் பரிச்சயமானது.
எங்கள் பகுதியில் இதனை சொடக்கு தக்காளி என்று தான் சொல்வோம். இதன் காய்/பழத்தை சுற்றி ஒரு பேப்பர் போன்ற அமைப்பு இருக்கும். அதன் கீழ் பகுதி திறந்திருக்கும். அதனை இருக்கமாக மூடினால் பலூனில் காத்து அடைத்திருப்பது போன்று இருக்கும். அதனை நெற்றியில்/தலையில் அடித்தால் பட் என்று சொடக்கு அடிப்பது போன்று சத்தம் வரும். அதனால் தான் இதன் காரணப் பெயர் சொடக்கு தக்காளி. இதன் உள்ளிருக்கும் பழம் ஒரு இலந்தை பழம் அளவுக்கு சிறியதாக தான் இருக்கும். ஆனால் தக்காளி போன்று சாறுடன் விதைகள் நிரம்பி இருக்கும். இதனை சாப்பிடலாம்.
என்னுடைய கிராமத்தில் வீட்டை சுற்றி இந்த செடி நிறைய வளர்ந்திருக்கும். இதன் பழத்தை சுற்றி பேப்பர் போன்று பச்சை நிறத்தில் ஒரு அமைப்பு இருக்கும் என்றேன் அல்லவா? அது சிறிது கடினமாக இருக்கும். ஆனால் இதனை பறித்து கைகள்/விரல்களுக்குள் வைத்து மென்மையாக கசக்கினால்(உள்ளிருக்கும் பழத்திற்கு பங்கம் வராமல்) அந்த சுற்றியிருக்கும் பகுதி மிருதுவாக மாறிவிடும். அதன் பின்னர் அந்த பகுதியை பிரட்டி போட்டால் அதாவது உள்ளிருக்கும் பழத்தை மெதுவாக வெளியே தள்ளி எடுத்துவிடலாம். அப்படி எடுத்தால் அந்த பழம் தலையாகவும், பேப்பர் பகுதி உடல் போன்றும் இருக்கும். அதற்கு கை/கால்கள் ஒட்டவைத்து விளையாடியதாக நினைவிருக்கிறது.
இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் சமீபத்தில் தைவானில் இருக்கும் மிகப்பெரிய காஸ்கோ கடைக்கு (costco) சென்றால் அங்கு பூக்கள் இருக்கும் பகுதியில் இந்த சொடக்கு தக்காளியையும் வைத்திருந்தார்கள். ஆனால் அதன் பழத்தின் அளவானது நம்ம ஊரைல் இருப்பதைவிட 2 அல்லது 3 மடங்கு அளவில் பெரியதாக இருக்கிறது. இங்கு அலங்காரத்திற்கு வாங்குகிறார்கள். விலையோ நம் ஊர் மதிப்பில்சுமார் ரூ500/.
அடடா சின்ன வயசில தேவையில்லாமல் இதனை கசக்கி கசக்கி சொடக்கு போட்டுட்டமே என்று யோசிச்சேன்.
No comments:
Post a Comment