Tuesday, March 20, 2018

குறி கேட்டல் (Jiaobei fortune crescent)


நாம் நினைத்த காரியம் நடைபெறுமா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள எல்லோருக்கும் கொஞ்சம் ஆர்வம் இருக்கும். இதனை தெரிந்து கொள்ள நிறைய பேர் சில நேரங்களில் குறி கேட்க செல்வதும் உண்டு. இந்த வழக்கம் சீன, தைவான் நாடுகளிலும் உண்டு.

அதற்காக நம் ஊர் போல் கள்ளச்சாமி வந்து ஆட்டம் போட்டு குறி சொல்வார்கள் என்று நினைத்தால் அது தவறு. இங்கு சாமியாட்டம் எல்லாம் கிடையாது. இங்கு குறி கேட்பது என்பது கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கும்.


இங்குள்ள கோவில்களில் சிவப்பு நிறத்தில் இரண்டு கட்டைகள் படத்தில் இருப்பது போன்று வைத்திருப்பார்கள். இந்த கட்டைகள் தான் குறி கேட்க பயன்படுத்தும் ஆயுதம். முதலில் நாம் கேட்க போகும் கேள்வியை ஆம், இல்லை என்ற பதில் வரும் வடிவில் மாற்றிக்கொள்ள வேண்டும்.

அதாவது எனக்கு யானை வேண்டும், பூனை வேண்டும் என்று வேண்டிக்கொண்டு குறி கேட்க கூடாது. எனக்கு யானை கிடைக்குமா? என்று ஒரு கேள்விதான் கேட்க வேண்டும். அடுத்த கேள்வியாக எனக்கு பூனை கிடைக்குமா? என்று வேண்டும் என்றால் கேட்கலாம்.

முதலில் எனக்கு யானை வேண்டும் என்பதை நன்றாக மனதில் நிறுத்தி சாமி கும்பிட்டுவிட்டு "எனக்கு யானை கிடைக்குமா?" என்ற கேள்வியை முன்னிறுத்தி (மனதளவில் அங்கிருக்கும் சாமியிடம் கேள்வியை எழுப்ப வேண்டும்) கைகளில் வைத்திருக்கும் சிவப்பு கட்டையை அப்படியே கீழே போடவேண்டும்.

அந்த கட்டையானது ஒரு பக்கம் சப்பையாகவும் ஒரு பக்கம் மேடாகவும் பிறை வடிவில் இருக்கும். அதாவது நம் ஊர் சோழி போன்று நினைத்துக்கொள்ளுங்கள். இதற்கு சீன மொழியில் ஜியோபய் என்று பெயர்.


1. இரண்டு கட்டைகளில் ஒன்று மல்லாக்கவும் ஒன்று குப்பறவும் விழுந்தால் ஆம் என்று அர்த்தம். இதனை சீன மொழியில் ஷெஞ் ஜியாவ் (Shèngjiǎo) என்று சொல்வார்கள்.

2. இரண்டு கட்டைகளும் குப்பற விழுந்தால், இல்லை என்று அர்த்தம். அதாவது இப்படி விழுந்தால் நீங்கள் கேட்ட கேள்விக்காக தெய்வமானது வருத்தப்படுகிறது என்று அர்த்தம். இதனை சீன மொழியில் நூ-ஜியோவ் (Nùjiǎo) என்று சொல்வார்கள்.

3. இரண்டு கட்டைகளுமே மல்லாக்க விழுந்தால் இல்லை என்று அர்த்தம். மேலும் தெய்வங்கள் உங்களுடைய கேள்வியை நினைத்து சிரிக்கிறார்கள் என்று அர்த்தம். கிட்ட தட்ட இதற்கான விடை உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கலாம். இதனை சீன மொழியில் ஷியா ஜியோவ் (Xiàojiǎo) என்று சொல்வார்கள்.

4. ஒரு கட்டையோ அல்லது இரண்டு கட்டையுமோ குப்புறவோ அல்லது மல்லாக்கவோ விழாமல் நட்ட குத்தற நின்றால் நீங்கள் கேட்கும் கேள்வியானது தெய்வத்திற்கு புரியவில்லை என்று அர்த்தம். கேள்வியை வேறு வடிவில் மாற்றி மீண்டும் கேட்க வேண்டும். இதற்கு சீன மொழியில் லீ ஜியாவ் (Lìjiǎo) என்று சொல்வார்கள்.

சரி, இப்போ செயல்முறைக்கு வருவோம். கட்டைகளை கீழே மூன்று முறை போடவேண்டும். மூன்றில் இரண்டு முறை ஆம் என்று வந்துவிட்டால் நீங்கள் கேட்ட கேள்விக்கு ஆம் என்று பதில் வந்துவிட்டது என்று அர்த்தம். அதாவது நீங்கள் கேட்டயானை கிடைக்குமா?’ என்ற கேள்விக்கு ஆம் என்று பதில் வந்துவிட்டது. இரண்டு முறை இல்லை என்று வந்துவிட்டால் மீண்டும் இதே கேள்வியை வேறு வாக்கியங்கள் அமைத்து கேட்களாம். அப்படி மூன்று முறை ஒரே கோரிக்கையை வேறு வேறு வாக்கியங்கள் அமைத்து கேட்களாம். மூன்றிற்கும் இல்லை என்று வந்துவிட்டால் அந்த கோரிக்கையை கைவிட்டுவிட வேண்டும். வேறு கேள்வி இருந்தால் முயற்சி செய்யலாம்.


ஆம் என்று வந்துவிட்டால் அத்தோடு இந்த செயல்முறை முடிந்துவிடாது. பக்கத்தில் கூடையில் நீளமாக நிறைய மூங்கில் குச்சி வைத்திருப்பார்கள். ஒவ்வொரு மூங்கில் குச்சியிலும் ஒரு எண்ணை எழுதி அதில் சீன மொழியில் ஏதோ எழுதியிருப்பார்கள். அதில் கண்களை மூடிக்கொண்டு ஒரு குச்சியை எடுக்க வேண்டும். அந்த எண்ணை நன்றாக உள்வாங்கிக்கொண்டு மீண்டும் சாமியிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். அதாவது யானை கிடைக்குமா என்ற கேள்விக்கான பதில் இந்த எண்ணில் இருக்கிறதா என்று கோரிக்கை வைக்கவேண்டும். அதன் பின்னர் மூன்று முறை சிவப்பு கட்டையை போட்டு ஆம் வருகிறதா என்று கவனிக்க வேண்டும். இரண்டு முறை இல்லை என்று வந்தால் மீண்டும் வேறு ஒரு குச்சியை எடுத்து மீண்டும் அதே கேள்வியை கேட்டு சிவப்பு கட்டையை உருட்ட வேண்டும். இரண்டு முறை ஆம் என்று வந்தால் உங்களுக்கான பதில் இந்த எண்ணில் இருக்கிறது என்ற அர்த்தம்.

கோவிலின் ஒரு பக்கமாக ஒரு சில சாவடிகள் இருக்கும். நிறைய தன்னார்வ தொண்டர்கள் இருப்பார்கள். அவர்களிடம் கொண்டு போய் அந்த எண்ணை சொன்னால் அவர்கள் அதற்குறிய புத்தகத்தில் இருந்து உங்களுக்கு வேண்டியதை படித்து சொல்வார்கள். அதில் பொருள், எண்ணம், செயல் சம்பந்தமாக தனி தனி தலைப்பில் சில வாக்கியம் இருக்கும். உதாரணமாக உனக்கு யானை கிடைக்கும் ஆனால் நிறைய சிக்கல் இருக்கு. அல்லது 6 மாதத்தில் யானை கிடைக்கும். அல்லது 2 வருடம் கழித்து முயற்சி செய், இப்பொழுது வேண்டாம், அல்லது யானைய வாங்கினா அதுக்கு கோவணம் கட்ட கஷ்டப்படுவ  என்பது போன்று படித்து சொல்வார்கள்.

தைபேயில் உள்ள ஷின்டியன் கோவில் இதற்கு பெயர் பெற்றது. இந்த கோவில் பார்க்க புத்தர் கோவில் போல் இருந்தாலும் தாவோ மதத்தவர்களுடைய கோவில்.

ஒருமுறை என்னுடைய தைவான் நண்பர் ஷின்டியன் கோவிலுக்கு குறி கேட்க செல்கிறேன், வருகிறாயா என்று கூப்பிட்டான். அது என்ன என்று தெரிந்துகொள்ள பயங்கர ஆர்வம் எனக்கு. அதனால் நானும் வருகிறேன், என்று ஒட்டிக்கொண்டேன். சென்னையிலிருந்து வந்திருந்த சக ஊழியையும் சேர்ந்துகொண்டார். ஷின்டியன் கோவிலில் வைத்து எனக்கு தைவான் நண்பர் சொன்ன விளக்கம் தான் நீங்கள் மேலே படித்தது. அங்கு சென்றதும் எனக்கும், தோழிக்கும் இதனை முயற்சி செய்து பார்க்கலாம் என்று ஆசை. தோழிக்கு அவர் நினைத்ததை ஒரு 6 மாத காலம் ஒத்திவைத்து முயற்சிக்கும் படி வந்தது.

எனக்கு என்னன்னு தானே கேக்கறீங்க.... இதுல‌ சஸ்பென்ஸ் எல்லாம் இல்லீங்க... 

புத்தர் என்னை பார்த்து நகைத்தார்.

1 comment:

  1. Very interesting news! Enjoyed reading it! Thanks for sharing this!
    -Rohini.

    ReplyDelete