Sunday, January 21, 2018

தைவான் : தைபே ரயில் நிலையம்

ஞாயிறு அன்று தைபே ரயில் நிலையத்தின் உட்கூடத்தில் மக்கள் நிறைந்த காட்சி

தைபேயில் விடுமுறை நாளான ஞாயிறு அன்று மக்கள் கூடும் முக்கியாமான இடங்களில் ஒன்று தைபே ரயில் நிலையம் (Taipei Main Station).   வெளிநாடுகளான பிலிப்பைன், மலேசியா, இந்தோனேசியாவில் இருந்து இங்கு வந்து வேலை பார்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தைவானில் வேலை பார்க்கும் தங்கள் உறவினர்கள், நண்பர்களை சந்திக்கும் ஒரு முக்கியமான பிக்னிக் ஸ்பாட் இந்த ரெயில் நிலையம் தான். தைபே ரயில் நிலையத்தில் தரை தளத்தின் மத்தியில் மிகப்பெரிய கூடம் இருக்கிறது. ஞாயிற்றுகிழமை காலை பத்து மணிக்கே அந்த கூடத்தில் அங்காங்கே மக்கள் கூட ஆரம்பிப்பார்கள். மதியத்திற்கு மேல் அந்த இடத்திற்குள் நம்மால் போகவே முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் இருக்கும். சிறு சிறு குழுக்களாக கூடி தங்களுக்குள் கூடி பேசி, தங்களுடைய உணவுகளை பகிர்ந்து உண்டு, கடந்த நாட்களில் நடந்த சுவராஸ்யமான கதைகள் பேசி இரவு வரைக்கும் அகமகிழ்ந்திருப்பார்கள்

ரயில் நிலையம் மற்றும் அதன் நிலத்தடி பாதைகள்‍ & அங்காடிகள் வரைபடம்



Y-Mall இருந்து விமான நிலையத்திற்கான நுழைவு வாயில் 
தைபே ரயில் நிலையம் என்பது நம்மூர் சென்னை சென்ட்ரல் ஸ்டேசன் மாதிரி மிகப்பெரிய ரயில் நிலையம். இந்த ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வந்து ஒரு நூற்றாண்டு ஆகிறது. ஆம் 1918 ஆம் ஆண்டு தான் முதன் முதலில் திறந்திருக்கிறார்கள். தைவான் முழுவதும் செல்லக்கூடிய எல்லா புற‌ ரயில்களும் இந்த நிலையத்தில் இருந்து புறப்பட்டோ அல்லது இந்த நிலையத்தை தொட்டோ தான் செல்லும்அது போல் தைபேக்குள் இயங்க கூடிய மெட்ரோ ரயில்களின் இரண்டு  பாதைகள் (ரெட், புளு) இந்த நிலையத்தை தொட்டே சொல்லும். ஒவ்வொரு பாதையிலும் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு ரயில் என்ற விகிதத்தில் மெட்ரோ ரயில்கள் செல்லும். சமீபத்தில் இந்த ரயில் நிலையத்தில் இருந்து தவ்யான் பன்னாட்டு விமான நிலையத்திற்கு என்று தனி மெட்ரோ ரயில் விடப்பட்டது. மொத்த தூரம் 51 கிலோ மீட்டர். சுமார் 40 நிமிடங்கள் பயணத்தில் விமான நிலையத்திற்கு சென்றுவிடலாம். அது போல் தெற்கு தைவானின் கெளஷியாங் நகரத்திற்கு அதிவிரைவு ரயில் கூட செல்கிறது. இந்த ரயிலானது 270 முதல் 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. அத்தனை ரயில்களை இயங்கக்கூடிய இந்த ரயில் நிலையம் எந்த அளவுக்கு பரபரப்பாக இயங்கும் என்று நினைத்துப் பாருங்கள்

தைபே ரயில் நிலையத்தின் இரவு நேர வெளிப்புற தோற்றம்
வெளியிலிருந்து பார்த்தால் இந்த ரயில் நிலையம் அவ்வளவு பெரியதாக தெரியாது. இரண்டு மாடி அளவு கொண்ட பெரிய கட்டடம் போன்றே தெரியும். இத்தனை ரயில்களும் தரைக்கு கீழே தான் செல்கிறது. அதில் தரை தளத்தில் பயணச் சீட்டு வாங்கும் இடமும், நிறைய பேக்கரி கடைகளும் இருக்கும். மேல் தளத்தில் உணவகங்களும் இருக்கும். இதில் சிறிது காலம் ஒரு இந்திய உணவகமும் செயல்பட்டுக்கொண்டிருந்ததுஇந்த ரயில் நிலையத்தில் ஆங்காங்கே பாதுகாப்பு பெட்டகம் இருக்கும். பெரிய அளவிலான பெட்டிகளை கூட அதன் உள் பாதுகாப்பாக வைத்துவிடலாம். மேலும் உள்ளேயே ஒரு காவல் நிலையமும் இருக்கிறது.

பாதுகாப்பு பெட்டகம்


பாதாள நகரம் :  Y-Mall அங்காடியின் ஒரு பகுதி

நிலத்தடியில் ரயில் பாதைகள் மட்டும் இல்லை, பேரங்காடித் தெருக்களும் இருக்கிறது. K Mall, Z Mall,  M Mall, Y Mall என்ற பெயரில்  நிலத்தடி அங்காடித் தெருக்கள் இருக்கிறது. அனைத்தும் மிகப் பாதுகாப்பான நிலத்தடி அங்காடிகள். ஒவ்வொரு 50 மீட்டர் தூரத்திற்கும் அவசர கால வெளியேறும் பாதைகள் இருக்கும். இதில் Y Mall என்பது மிகப்பெரிய நிலத்தடி அங்காடித் தெரு. சுமார் இரண்டு கிலோ மீட்டர் நீளம் இருக்கும். அதாவது இந்த ரயில் நிலையத்தில் இருந்து இதற்கு அடுத்த ரயில் நிலையம் வரை இந்த தெரு செல்லும், அதுவும் தரைக்கடியில்.

Y-Mall : குடைகள் மட்டும் விற்பனை செய்யும் தனி அங்காடி

அனைத்து வகையான பைகள்
விற்பனை அங்காடி
இங்கிருக்கும் அங்காடிகளில் பொதுவாக பெண்களுக்கான ஆடைகள் மற்றும் அணிகலன்கள் நிறைய கிடைக்கும். செருப்பு கடைகள் நிறைய உண்டு. அதிலும் பெண்களுக்கு மட்டும் நிறைய மாடல்கள் வைத்திருப்பார்கள். கைப்பைகள் முதல் பெரிய பெட்டிகளுக்கு என்று தனியான கடைகள் நிறைய உண்டு. இங்கு பலதரப்பட்ட குடைகள் கிடைக்கும். நம் ஊர் மதிப்பில் 150 ரூபாயில் இருந்து 1500 ரூபாய் வரைக்கும் குடைகள் உண்டு.
பாதரட்சை/செருப்பு கடை


விளையாட்டு பொம்மைகளுக்கான
தானியங்கி இயந்திரம்
மேலும் அங்காங்கே விளையாட்டுக்கான மென் பொருட்கள் (Software) அடங்கிய தட்டுகள் விற்பனைக்கு கிடைக்கும். மேலும் சிறுவர்களுக்கான விளையாட்டு பொம்மைகள் அதிகம் கிடைக்கும். பாதி தூரம் கடந்ததும் நிறைய உணவகங்கள், குளுகுளு குல்பி(அதாங்க ஐஸ்க்ரீம்), பரோட்டா கடைகள் இருக்கும். ஒரு நாள் முழுவதும் மொத்தமாக செலவு செய்தால் கூட அனைத்து பேரங்காடி தெருக்களுக்கும் செல்ல முடியாது.  அத்தனை பெரிய இடம் நிலத்திற்கு கீழே பாதுகாப்பாக கட்டி வைத்திருக்கிறார்கள்.


பாதாள அங்காடி தெருவை சுத்தம் செய்தல்
ஜேட் கற்கள் விற்பனையகம்
சிறிது காலத்திற்கு முன்னர் வரையிலும் Y மாலில் இந்திய துணிகள் விற்பனை நிலையம் ஒன்று இருந்தது. Y-3 பக்கம் இருக்கும். தற்பொழுது அந்த கடையை மூடிவிட்டார்கள். அது போல் இங்கு ஒரு திபெத்தியன் கடையும் இருந்தது. தற்பொழுது அதனையும் மூடிவிட்டார்கள். இங்கு சில இடங்களில் ஜேட் கற்கள் கிடைக்கும். அது எந்த அளவிற்கு அசலானது என்று தெரியாது. அதுபொல் கத்தரிப்பூ நிறத்தில் நிறைய கற்கள் வைத்திருப்பார்கள்.  Y மாலில் ஒரு நிர்வாக அலுவலகம் இருக்கிறது. அங்கு குழந்தைகளுக்கான தள்ளுவண்டிகள் வாடகைக்கு கிடைக்கும். நம்முடைய புகைப்படம் இருக்கும் ஒரு அடையாள அட்டையை மட்டும் கொடுத்துவிட்டு எடுத்துச் செல்லலாம். அது போல் முதியவர்களுக்கான சக்கர நாற்காலிகளும் கிடைக்கும்.

யாழ் போன்ற சீன இசைக்கருவியை இசைக்கும் இசைக்கலைஞர்

Y3 வாசல் அருகே ஒரு மேடையிருக்கும். அதில் யாராவது ஒருவர் இசைத்துக்கொண்டிருப்பார். விதவிதமான கருவிகளை இசைக்கும் வித்தகர்கள் அங்கு இசைப்பார்கள். அவர்களுக்கு முன்னர் ஒரு சிறிய பெட்டியிருக்கும். அவர்களுடைய இசை நமக்கு பிடித்திருந்தால் பணத்தை அதற்குள் போடலாம்.  அந்த இசையை ரசிக்கும் மனநிலை இல்லை என்றாலும்   தாராளமாகபணம் போடலாம். நேற்றைய தினம் ஒரு வயதான இசைக் கலைஞர் யாழ் போன்ற இசைக்கருவியை இசைத்துக்கொண்டிருந்தார். ஒரு முறை இசைத்ததும் சிறிது ஓய்வெடுக்க செல்லும் போது அவரால் நடக்க முடியாது என்பதை அறிந்தேன்.

"இசைக்கு வயதேது, உடல் ஏது"