Thursday, May 25, 2017

தைவான் லியூ கியூ தீவு (Liu Qiu Island, Taiwan) - பகுதி 1

லியூ கியூ தீவின் ஒரு பகுதி


தைவானின் தென் மேற்கு கடற்கரையில் உள்ள அழகான  தீவின் பெயர் சிறிய லியூ கியூ (Xiao Liu Qiu ‍ ‍ 小刘秋)தீவு. இதற்கு லாமே தீவு என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. தைவானில் உள்ள‌ சுற்றுலா இடங்கள் பற்றி இணையதளத்தில் தேடினால் தெற்கு தைவானில் காளான் போன்ற ஒரு பாறையை காண்பிக்கும். அந்த பாறையானது இந்த தீவில் தான் இருக்கிறது. இந்த தீவானது டொங்காங்(Donggang) துறைமுகத்தில் இருந்து 8 கடல் மைல் அதாவது 15 கிமீ தூரத்தில் இருக்கிறது. மிக மிக சிறிய தீவு. மொத்தமே 6 சதுர கிமீ பரப்பளவு தான்.

Beauty Cave to Sunset pavilion

இந்த தீவில் தங்கும் விடுதி என்ற பெயரில் தனியாக ஏதுமில்லை. எல்லாமே ஹோம் ஸ்டே என்று சொல்லக்கூடிய வீடுகளில் தங்க கூடிய இடம் தான். ஒரு பெரிய வீட்டில் உரிமையாளர் ஒரு படுக்கையறையில் தங்கிக்கொண்டு மீதி அறைகளை நாள் வாடகைக்கு விடுவார்கள்.  அனைத்து தங்கும் வீடுகளும் ஏதாவது ஒரு இணைய‌வலைபதிவு தளத்தில் சேர்ந்து தங்களுடைய விவரங்கள் அனைத்தையும் அதில் பதிவு செய்து வைத்திருப்பார்கள். அந்த தகவல் அனைத்தும் வழக்கம் போல் சீன மொழியிலே இருக்கும். அதனை பார்த்து முதலில் அதன் உரிமையாளரிடம் பேச வேண்டும். அவர் நமக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புவார். அதுவும் சீன மொழியிலே இருக்கும். அதில் அவர்களுடைய வங்கி கணக்கு எண் கொடுப்பார்கள். எத்தனை நாள் தங்க போகிறோமோ அதற்குறிய‌ பணத்தை அவர்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும். அதன் பின்னர் நமக்கு தங்கும் அறையை உறுதிசெய்து மின்னெஞ்சல் அனுப்புவார்கள். இந்த தங்கும் விடுதிகளே இந்த தீவுக்கு வந்து செல்லும் பயணிகள் படகுக்கான பயனச்சீட்டை கொடுத்துவிடுவார்கள். மேலும் தீவில் இறங்கியதும் ஒரு இரு சக்கர மோட்டார் வாகனம் கொடுத்துவிடுகிறார்கள். ஊர் திரும்பும் பொழுது துறைமுகத்தில் கொடுத்துவிட்டால் போதும்.
Donggang Port - Ferry schedule

எங்கள் பயண‌த்தில் இரண்டு நாட்கள் இந்த தீவில் தங்குவதாக திட்டம். அதிவிரைவு ரயில் மூலம் கெளஷியாங் சென்று அங்கிருந்து சாலை வழியாக டொங்காங் (Donggang) துறைமுகம் சென்றோம். துறைமுகத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. இரவில் தங்குபவர்களை விட காலையில்  சென்று மாலையில் திரும்புபவர்கள் அதிகமாக இருந்தனர். போய்வர பயண‌க்கட்டணம்  410 தைவான் டாலர். எங்களுக்கு தங்கும் விடுதியிலிருந்து ஏற்கெனவே பயணச்சீட்டு முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது. சிறிது நேரக் காத்திருப்பிற்கு பின்னர் எங்களுக்கான படகு வந்தது. சுமார் 30 நிமிடப்பயணம். தூரத்தில் லியூ கியூ தீவு தெரிய ஆரம்பித்தது. எங்களுடைய படகு பெய்ஷா(Baisha) துறைமுகத்திற்குள் நுழைந்தது. இந்த தீவில் நிறைய துறைமுகம் இருக்கிறது. பொதுவாக அத்தனையும் மீன் பிடி துறைமுகங்களே. அதில் பெய்ஷா (வெண்மணல் என்று அர்த்தம்) துறைமுகம் பெரியது. பயணிகள் படகையும் உள்ளே அனுமதிக்கிறது. மேலும் லியூ கியூ தீவின் மக்கள் வாழும் பகுதி இந்த துறைமுகத்தை சுற்றியே இருக்கிறது. எங்களுடைய தங்கும் விடுதியின் உரிமையாளர் கையில் என்னுடைய பெயர் தாங்கிய பதாகையுடன் நின்றுகொண்டிருந்தார். நாங்கள் தங்கும் விடுதி துறைமுகத்தை ஒட்டியே இருந்தது. பால்கனியில் நின்று பார்த்தால் துறைமுகம் மொத்தமும் தெரியும். விடுதியில் பெட்டியை வைத்ததும் என்னை மட்டும் அழைத்துக்கொண்டு இரு சக்கர வாகனம் வாடகை விடும் இடத்திற்கு கூட்டி சென்றார். பார்மாலிட்டீஸ் முடித்து எனக்கு 125சிசி வாகனம் ஒன்று கொடுத்தார்கள்.
Liuqiu map

முதலில் இந்த தீவை சுற்றி வர எவ்வளவு நேரம் ஆகிறது என்று பார்க்கலாம் என்று சுற்றிவர ஆரம்பித்தோம். இத்தீவில் இரண்டே இரண்டு சாலைகள் தான், ஒன்று தீவை சுற்றி ஓடுகிறது, அடுத்தது தீவின் குறுக்கு வெட்டாக ஓடுகிறது. ஒரே ஒரு பெட்ரோல் நிலையம் , ஒரு 7/11 அதை சுற்றி சில பரிசுப்பொருள் விற்கும் அங்காடிகள், அங்காங்கு மீன் பிடி துறைமுகங்கள். அவ்வளவு தான்.


Beauty Cave
Beauty Cave


முதல் நாள் மாலையில் தீவை சுற்றிபார்க்க புறப்பட்டோம். முதலில் பியூட்டி கேவ் என்று சொல்லகூடிய ஒரு குகையை பார்க்க சென்றோம்.  இத்தீவானது ஒரு சிறிய மலையில் இருக்கிறது. சுற்றிவர பாறைகள் தான். பாறைகள் கூட மிகவும் உறுதியானவையல்ல.  பொரிப்பாறைகள் என்று சொல்லக்கூடிய உறுதியற்ற பாறைகள். அல்லது கடலுக்குள் இருக்கும் பாறைகள் போன்றவை. ஒரு காலத்தில் கடலுக்குள் இருந்த பாறை குன்றானது வெளிவந்து தீவாகியிருக்கலாம். அதனை உறுதிபடுத்தும் விதமாக கடல் அரிப்பினாலான குகைகள் ஏராளமாக இருக்கிறது. பியூட்டி கேவ்வும் அப்படியொரு குகைதான். பாறை அரிப்புகள் ஏராளமாக இருக்கிறது. உள்ளே செல்ல செல்ல சிறிய அளவில் குகைகள், குடைவு பாதைகள் என்று சுற்றி சுற்றி செல்கிறது.

பதுங்கு குழியின் முகப்பு

அடுத்து ஒரு ராணுவ பதுங்கு குழியிருக்கும் இடத்திற்கு சென்றோம். சீனாவுடனான மோதல் போக்கு உச்சத்தில் இருக்கும்பொழுது இங்கு ஒரு ராணுவ பதுங்குகுழி அமைத்திருக்கிறார்கள். இப்பொழுது அது பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்ப்பட்டுள்ளது. பதுங்கு குழியின் வெளிப்புறம் பச்சை பசேல் என்று வைத்திருக்கிறார்கள். தூரத்தில் இருந்து பார்த்தால் ஒரு பாறை மற்றும் மரங்கள் அடர்ந்த இடமாக தெரியும். பக்கத்தில் போய் பார்த்தால் மட்டுமே இரு வாயில்கள் கடலை கண்காணிக்க அமைக்கப்பட்டிருப்பது தெரியும். இதன் உள்ளே ஒரு சில அறைகள் கூட இருக்கிறது.


வீடு போன்ற கல்லறை
பதுங்குகுழியை பார்த்துவிட்டு வெளியே வந்ததும் எதிர்த்தார்போல் ஒரு சிறிய கட்டடமும் அதனை சுற்றி வளாகமும் இருந்தது. முதலில் ஓர் அறையுடைய வீடு என்று நினைத்தேன். மேலும் சிறிது ஆராய்ந்த போது அது ஒரு கல்லறை என்று தெரிந்தது. சிறிய வீடு போன்று கட்டி சுற்றிவர சுவர் எழுப்பி வைத்திருக்கிறார்கள். தைவானில் கல்லறை சிறப்பாக கட்டுவார்கள். ஆனால் ஒரு வீடு போன்ற கல்லறையை இங்கு தான் முதன்முதலில் பார்க்கிறேன்.

அடுத்து ஜென்பேன் (Genban Bay) கடற்கரைக்கு சென்றோம். சிறிய கடற்கரைதான். ஆனால் சுத்தமாக இருந்தது. கடற்கரையோரம் நிறைய கிளிஞ்சல்கள் ஒதுங்கியிருந்தன. நானும் அமிர்தனும் நிறைய கிளிஞ்சல்கள் சேகரித்தோம். சிறிது நேரம் கடல் விளையாட்டு. அதற்குள் மாலை சூரியன் மேற்கில் இறங்க ஆரம்பித்தது. அதனை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தோம்.

1. கடல் உயிரினத்தின் பாறை படிமம் 2. சிப்பியின் பாறை படிமம்
3. சிப்பி நண்டு 4. பாறை இடுக்கில் வாழும் நண்டு, 5. நிலத்தில் வாழும் நண்டு

இரவு 8 மணிக்கு தங்கும்விடுதி முன்னர் டார்ச்லைட்டுடன் வரச்சொன்னார்கள். அங்கு ஒவ்வொருநாளும் இரவு சுற்றுலாவிற்கு தங்கும் விடுதியிலிருந்து அழைத்துச்செல்கிறார்கள். விடுதியின் நிர்வாகிதான் வழிகாட்டி. விடுதியை தாண்டி சாலைக்கு வந்தால் மையிருட்டு. குடியிருப்பு பகுதியை தவிர  தீவின் மற்ற பகுதியில் மின் விளக்கு ஏதும் இல்லை. இந்த தீவிற்கு தேவையான மின்சாரம் கூட தைவான் தீவிலிருந்தே வருவதாக கூறினார்கள். டார்ச்லைட் உதவியுடனே நடக்க வேண்டும். ஒவ்வொரு விடுதியிலிருந்தும் 10 வண்டிக்கு மேல் அணிவகுத்து செல்கின்றார்கள். முதலில் பியூட்டி கேவ் பகுதிக்கே சென்றோம். அங்கு செல்லும் வழியானது அடைத்து வைத்திருந்தார்கள். எங்கள் வழிகாட்டி தாண்டி குதித்து எல்லோரையும் அப்படியே வரச்சொன்னார். காலையில் மேலோட்டமாக பார்த்ததற்கும் இப்பொழுது பார்ப்பதற்க்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. எங்கள் வழிகாட்டி ஒவ்வொரு இடமாக நின்று விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தார்.  சிப்பி, நண்டு, இறால் என்று அத்தனையும் பாறையில் படிமங்கலாக இருக்கிறது. அது போன்று பாறை இடுக்குகளில் இருக்கும் பூச்சிகள், நண்டு என்று அத்தனையையும் காண்பித்தார். அங்கிருந்து கெளஷியாங் துறைமுகத்தை காண்பித்தார். கடலுக்கு அப்பால் தூரத்தில் விளக்கு வெளிச்சத்தில் மினுமினுத்துக் கொண்டிருந்தது.

No comments:

Post a Comment