கொற்கை 2013 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாவல். புத்தகத்தை பார்த்ததும் மலைப்பாக இருந்தது. தலையனை அளவுக்கு 1130 பக்கங்களுடன் இருந்தது. கல்லூரிகாலமாக இருந்தால் ஒரு வாரத்துக்கு தாங்காது. ஆனால் இப்பொழுதோ படிக்க நேரம் கிடைக்கவில்லை. இதனை படித்துமுடிக்க எத்தனை நாட்களாகுமோ என்று ஒரு பயம் வேறு வந்தது. அதுக்கு காரணமும் இருக்கிறது. சில நேரங்களில் ஆசைப்பட்டு தலையனை அளவு புத்தகங்களை வாங்கி படிக்க ஆரம்பிக்கும் பொழுது சுவராஸ்யம் இல்லாமல் அப்படியே போட்ட புத்தங்கள் பல. அது மாதிரி இதுவும் ஆகிவிடக்கூடாதே என்கிற கவலையும் வந்தது. அவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கிய புத்தகம் இது. சில நேரங்களில் தினமும், சில வாரங்களில் ஒரிருநாட்கள் என்று மூன்று மாதங்கள் எடுத்துக்கொண்டது.
நாவல் என்றதும் உண்மை சம்பவங்களை கற்பனை கதையை சேர்த்து சாண்டில்யன் மாதிரி எழுதியிருப்பார் என்று நினைத்துதான் வாங்கினேன். ஆனால் நான் நினைத்ததற்கு நெர்மாறாக இருந்தது. கிட்டதட்ட இது ஒரு வரலாற்று ஆவணம் போன்று இருந்தது. கொற்கையின் டையரி குறிப்பு என்றே சொல்லலாம். இதற்காக நூல் ஆசிரியர் ஜோ.டி. குருஸின் உழைப்பு இந்த நூலில் வழியாக தெரிகின்றது. கிட்டதட்ட ஐந்தாண்டுகள் உழைத்திருக்கிறார் என்று வலைதளத்தில் படித்தேன்.
உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற ஒரு துறைமுகம் கொற்கை. பாண்டிய சாம்ராஜ்யத்தில் மிகப் பெரிய துறைமுகம். கொற்கை முத்துக்கள் உலகப் புகழ் வாய்ந்தவை. அப்படிப்பட்ட கொற்கையில் கடந்த 20ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட சமூக, பொருளாதார மாற்றங்களை, ஏற்ற தாழ்வுகளை விளக்குவது இந்த நூலின் சிறப்பு.
இந்த நாவலின் நடையானது கொற்கை வட்டார மொழி வழக்கில் குறிப்பாக பரதவர்கள்(மீனவர்கள்) வழக்கில் அமைந்திருக்கிறது. அந்த வட்டார வழக்குச்சொல் தெரியாதவர்களுக்கு புரிந்துகொள்ளும் விதமாக கடைசியில் சில பக்கங்களில் அருஞ்சொற்பொருள் விளக்கம் இருக்கின்றது. படிப்பவர்களுக்கு ஒரு வார்த்தை புரியவில்லை என்றால் பின்னால் சென்று அர்த்தம் புரிந்துகொள்ளலாம். இந்த நூலை வாசிக்க ஆரம்பிக்கும் முன்னர் எக்காரணம் கொண்டும் பின் பக்கம் சென்று அர்த்தம் தேடக்கூடாது என்று முடிவு செய்திருந்தேன், அப்படி போய் பார்த்தால் நான் கொற்கை மண்டலத்தில் பிறந்து வளர்ந்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். 1130 பக்கம் படித்து முடிக்கும் வரைக்கும் அர்த்தம் தேடி பின் பக்கங்களை புரட்டவில்லை. மேசைக்காரன் என்ற ஒரு வார்த்தைக்கு அர்த்தம் புரியவில்லை. ஆனால் என்னால் கெஸ் பண்ண முடிந்தது, கடைசியில் என்னுடைய கெஸ்ஸிங் 90% மேட்ச் ஆகிவிட்டது. இன்னும் எனக்குள் ஊர்வாடை இருக்கின்றது என்பது ஒரு பெருமை தான். மதுரைக்கு வடக்கு பக்கம் இருப்பவர்கள் இந்நூலை படிக்கும் முன்னர் கடைசி பக்கத்தை ஒரு முறை பார்வையிட்ட பின் படிப்பது நன்று.
மேலும் வட்டார பேச்சு மொழியிலே இந்த புதினம் எழுதப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி, திருநெல்வேலியில் இன்றும் ஏதாவது பேசுவதற்கு முன்னர் வக்காலி என்ற வார்த்தையை முன்னர் சேர்த்துதான் பேச ஆரம்பிப்பார்கள். அதே போன்ற நடை எழுத்திலும் இருக்கிறது. இப்புத்தகத்தில் வரும் அனைத்து பாத்திரங்களை பற்றிய குடும்ப விவரங்கள் கடைசி பக்கங்களில் இருக்கிறது. எழுத்தாளர் ஜோ டி குருஸ் அவர்களின் பாட்டி பற்றிய விவரம் கூட இருக்கிறது என்று நினைக்கிறேன். ஏதோ ஒரு இடத்தில் அதை பற்றிய குறிப்பு இருக்கிறது.
பாண்டிய சாம்ராஜ்யத்தில் மீனவ பாண்டியன் என்ற ஒரு சிற்றரசன் கொற்கைக்கு தலைவானாக இருந்தார் என்பதும் அதுவும் 20ஆம் நூற்றாண்டின் மத்தி வரை இருந்தார் என்பதே இந்த புத்தகம் படித்த பின்னர் தான் தெரிந்தது. அவருடைய புகைப்படமும், மீன்வ பாண்டியபதியின் அரண்மனை புகைப்படமும் புத்தகத்தில் இருக்கிறது. கொற்கையில் முத்துக்குளிப்பது வரை மிகுந்த செல்வாக்குடன் இருந்திருக்கிறார். ஆங்கிலேய அரசு முத்துக்குளிப்பை நிறுத்தியதும், அதே கால கட்டத்தில் பரதவ சமுதாயத்தில் நடந்த மத மாற்றங்களாலும் அவருடைய செல்வாக்கு படிப்படியாக குறைந்து முற்றிலும் மறைந்துவிட்டது.
பொதுவாக இதுவரை படித்த புதினங்களில் கதையின் நாயகன் என்று ஒருவர் இருப்பார். அவரை சுற்றியே கதை ஓட்டம் அமைந்திருக்கும். ஆனால் கொற்கை புதினத்தின் பிரதான நாயகன் கொற்கையே. பரதவர்கள், நாடார்கள், ஆங்கிலேயர்கள், பவுல் தண்டல், சண்முகப்பாண்டி நாடார் எல்லாம் அதன் உப பாத்திரங்களே. இந்நாவலின் இரண்டாவது நாயகன் பவுல் தண்டல் என்று சொல்லலாம். சிறிய வயதில் கொற்கைக்கு ஓடி வருவதில் இருந்து கடைசி அத்தியாயம் வரை ஆங்காங்கே வருகின்றார்.
இந்நாவல் ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு அத்தியாயம் என்ற வகையில் 1900 ஆம் ஆண்டில் ஆரம்பித்து 2000 வருடத்தில் முடிவுறுகிறது. இடைப்பட்ட காலத்தில் கொற்கை, தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கையில் நடந்த முக்கியமான சம்பவங்கள் அனைத்தையும் நேரடியாக விவரிக்காமல் கதாபாத்திரங்கள் பேசுவது போன்று நாவலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. உலகப்போர், சுதந்திரம், காந்தி, பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், நேரு, இந்திரா, ராஜீவ்காந்தி பற்றிய செய்திகள் அனைத்தையுமே இரு பாத்திரங்கள் பேசுவது போன்றோ அல்லது ஒரு பாத்திரத்தின் எண்ணமாகவோ நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் சந்திரபாபு (கொற்கை மண்ணின் மைந்த்தன்) பற்றிய சில குறிப்புகளும் இருக்கின்றது.
இலங்கைக்கு தோணிவிடுவது, தூத்துக்குடி மக்கள் வியாபாரம் மூலம் அங்கு குடியேறுவது, அப்பொழுது அங்கு நடக்கும் இனவாத கலவரத்தில் அனைத்தையும் இழந்து மீண்டும் தூத்துக்குடிக்கே திரும்புவது என்று அனைத்தையும் எழுத்தில் கொண்டுவந்திருக்கிறார். நாவலில் தூத்துக்குடி உடன்குடி பயணிகள் புகைவண்டி பற்றிய செய்தி இருக்கிறது. அப்படி ஒரு வழித்தடம் இருந்த செய்தியே நாவலை படித்துதான் தெரிந்துகொள்ள முடிந்தது. இன்று அந்த வழித்தடம் இல்லை. அல்லது திருச்செந்தூரோடு நின்று விட்டது. அது போன்று சென்னையில் ஸ்டீவன் கல்லூரி என்ற ஒன்று இருந்திருக்கிறது. வலைத்தளத்தில் தேடினால் அது பற்றிய செய்திகள் ஏதும் இல்லை.
ஆத்மார்த்த நண்பர்களாக பவுல் தண்டலும், சண்முகப்பாண்டிய நாடாரும் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் சந்தித்து பேசுவது போன்ற காட்சி சில இடங்களில் தான் வருகிறது. ஆனாலும் பவுல் தண்டல் முக்கியமான முடிவுகள் எடுக்கும் முன்னர் தன் நண்பரை கலந்து தான் முடிவுசெய்கிறார். கடைசியாக பவுல் தண்டல் தன்னுடைய ஆத்மார்த்த நண்பரை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் ரயில் ஏறும் பொழுதே அவருக்கு ஏதோ ஒன்று ஆகிவிடுமோ என்று நம்முடைய நெஞ்சம் பதை பதைக்க ஆரம்பிக்கிறது. இதிலிருந்தே ஒரு சூப்பர் ஹீரோவாக இல்லாவிட்டாலும் பவுல் தண்டலை நம்முள் ஊடுருவ விட்டுள்ளார் எழுத்தாளர்.
இந்நாவல் கலப்பு மணம், மறுமணம் என்று அனைத்து விசயங்களையும் பேசுகின்றது. ஆனால் எந்த ஒரு இடத்திலும் அதற்கு பெரிய எதிர்ப்பு இருப்பது போன்ற பதிவுகள் இல்லை. இன்றும் கூட அந்த பகுதியில் அண்ணன் இந்துவாகவும், தம்பி கிருஸ்தவராகவும் ஒரே வீட்டில் வசிக்கும் வழக்கம் இருக்கிறது, பெரிதாக அடிதடி இல்லாமல்.
நாவலில் மத்திய பகுதியில் ஏதும் முக்கியமான நிகழ்வுகள் இல்லை என்பதால் சிறிது தொய்வு ஏற்பட்டாலும் கொற்கை உங்களை காலக்கடலுக்குள் இறக்கி முத்துகுளிக்க செய்யும்.