Thursday, May 25, 2017

தைவான் லியூ கியூ தீவு (Liu Qiu Island, Taiwan) - பகுதி 1

லியூ கியூ தீவின் ஒரு பகுதி


தைவானின் தென் மேற்கு கடற்கரையில் உள்ள அழகான  தீவின் பெயர் சிறிய லியூ கியூ (Xiao Liu Qiu ‍ ‍ 小刘秋)தீவு. இதற்கு லாமே தீவு என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. தைவானில் உள்ள‌ சுற்றுலா இடங்கள் பற்றி இணையதளத்தில் தேடினால் தெற்கு தைவானில் காளான் போன்ற ஒரு பாறையை காண்பிக்கும். அந்த பாறையானது இந்த தீவில் தான் இருக்கிறது. இந்த தீவானது டொங்காங்(Donggang) துறைமுகத்தில் இருந்து 8 கடல் மைல் அதாவது 15 கிமீ தூரத்தில் இருக்கிறது. மிக மிக சிறிய தீவு. மொத்தமே 6 சதுர கிமீ பரப்பளவு தான்.

Beauty Cave to Sunset pavilion

இந்த தீவில் தங்கும் விடுதி என்ற பெயரில் தனியாக ஏதுமில்லை. எல்லாமே ஹோம் ஸ்டே என்று சொல்லக்கூடிய வீடுகளில் தங்க கூடிய இடம் தான். ஒரு பெரிய வீட்டில் உரிமையாளர் ஒரு படுக்கையறையில் தங்கிக்கொண்டு மீதி அறைகளை நாள் வாடகைக்கு விடுவார்கள்.  அனைத்து தங்கும் வீடுகளும் ஏதாவது ஒரு இணைய‌வலைபதிவு தளத்தில் சேர்ந்து தங்களுடைய விவரங்கள் அனைத்தையும் அதில் பதிவு செய்து வைத்திருப்பார்கள். அந்த தகவல் அனைத்தும் வழக்கம் போல் சீன மொழியிலே இருக்கும். அதனை பார்த்து முதலில் அதன் உரிமையாளரிடம் பேச வேண்டும். அவர் நமக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புவார். அதுவும் சீன மொழியிலே இருக்கும். அதில் அவர்களுடைய வங்கி கணக்கு எண் கொடுப்பார்கள். எத்தனை நாள் தங்க போகிறோமோ அதற்குறிய‌ பணத்தை அவர்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும். அதன் பின்னர் நமக்கு தங்கும் அறையை உறுதிசெய்து மின்னெஞ்சல் அனுப்புவார்கள். இந்த தங்கும் விடுதிகளே இந்த தீவுக்கு வந்து செல்லும் பயணிகள் படகுக்கான பயனச்சீட்டை கொடுத்துவிடுவார்கள். மேலும் தீவில் இறங்கியதும் ஒரு இரு சக்கர மோட்டார் வாகனம் கொடுத்துவிடுகிறார்கள். ஊர் திரும்பும் பொழுது துறைமுகத்தில் கொடுத்துவிட்டால் போதும்.
Donggang Port - Ferry schedule

எங்கள் பயண‌த்தில் இரண்டு நாட்கள் இந்த தீவில் தங்குவதாக திட்டம். அதிவிரைவு ரயில் மூலம் கெளஷியாங் சென்று அங்கிருந்து சாலை வழியாக டொங்காங் (Donggang) துறைமுகம் சென்றோம். துறைமுகத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. இரவில் தங்குபவர்களை விட காலையில்  சென்று மாலையில் திரும்புபவர்கள் அதிகமாக இருந்தனர். போய்வர பயண‌க்கட்டணம்  410 தைவான் டாலர். எங்களுக்கு தங்கும் விடுதியிலிருந்து ஏற்கெனவே பயணச்சீட்டு முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது. சிறிது நேரக் காத்திருப்பிற்கு பின்னர் எங்களுக்கான படகு வந்தது. சுமார் 30 நிமிடப்பயணம். தூரத்தில் லியூ கியூ தீவு தெரிய ஆரம்பித்தது. எங்களுடைய படகு பெய்ஷா(Baisha) துறைமுகத்திற்குள் நுழைந்தது. இந்த தீவில் நிறைய துறைமுகம் இருக்கிறது. பொதுவாக அத்தனையும் மீன் பிடி துறைமுகங்களே. அதில் பெய்ஷா (வெண்மணல் என்று அர்த்தம்) துறைமுகம் பெரியது. பயணிகள் படகையும் உள்ளே அனுமதிக்கிறது. மேலும் லியூ கியூ தீவின் மக்கள் வாழும் பகுதி இந்த துறைமுகத்தை சுற்றியே இருக்கிறது. எங்களுடைய தங்கும் விடுதியின் உரிமையாளர் கையில் என்னுடைய பெயர் தாங்கிய பதாகையுடன் நின்றுகொண்டிருந்தார். நாங்கள் தங்கும் விடுதி துறைமுகத்தை ஒட்டியே இருந்தது. பால்கனியில் நின்று பார்த்தால் துறைமுகம் மொத்தமும் தெரியும். விடுதியில் பெட்டியை வைத்ததும் என்னை மட்டும் அழைத்துக்கொண்டு இரு சக்கர வாகனம் வாடகை விடும் இடத்திற்கு கூட்டி சென்றார். பார்மாலிட்டீஸ் முடித்து எனக்கு 125சிசி வாகனம் ஒன்று கொடுத்தார்கள்.
Liuqiu map

முதலில் இந்த தீவை சுற்றி வர எவ்வளவு நேரம் ஆகிறது என்று பார்க்கலாம் என்று சுற்றிவர ஆரம்பித்தோம். இத்தீவில் இரண்டே இரண்டு சாலைகள் தான், ஒன்று தீவை சுற்றி ஓடுகிறது, அடுத்தது தீவின் குறுக்கு வெட்டாக ஓடுகிறது. ஒரே ஒரு பெட்ரோல் நிலையம் , ஒரு 7/11 அதை சுற்றி சில பரிசுப்பொருள் விற்கும் அங்காடிகள், அங்காங்கு மீன் பிடி துறைமுகங்கள். அவ்வளவு தான்.


Beauty Cave
Beauty Cave


முதல் நாள் மாலையில் தீவை சுற்றிபார்க்க புறப்பட்டோம். முதலில் பியூட்டி கேவ் என்று சொல்லகூடிய ஒரு குகையை பார்க்க சென்றோம்.  இத்தீவானது ஒரு சிறிய மலையில் இருக்கிறது. சுற்றிவர பாறைகள் தான். பாறைகள் கூட மிகவும் உறுதியானவையல்ல.  பொரிப்பாறைகள் என்று சொல்லக்கூடிய உறுதியற்ற பாறைகள். அல்லது கடலுக்குள் இருக்கும் பாறைகள் போன்றவை. ஒரு காலத்தில் கடலுக்குள் இருந்த பாறை குன்றானது வெளிவந்து தீவாகியிருக்கலாம். அதனை உறுதிபடுத்தும் விதமாக கடல் அரிப்பினாலான குகைகள் ஏராளமாக இருக்கிறது. பியூட்டி கேவ்வும் அப்படியொரு குகைதான். பாறை அரிப்புகள் ஏராளமாக இருக்கிறது. உள்ளே செல்ல செல்ல சிறிய அளவில் குகைகள், குடைவு பாதைகள் என்று சுற்றி சுற்றி செல்கிறது.

பதுங்கு குழியின் முகப்பு

அடுத்து ஒரு ராணுவ பதுங்கு குழியிருக்கும் இடத்திற்கு சென்றோம். சீனாவுடனான மோதல் போக்கு உச்சத்தில் இருக்கும்பொழுது இங்கு ஒரு ராணுவ பதுங்குகுழி அமைத்திருக்கிறார்கள். இப்பொழுது அது பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்ப்பட்டுள்ளது. பதுங்கு குழியின் வெளிப்புறம் பச்சை பசேல் என்று வைத்திருக்கிறார்கள். தூரத்தில் இருந்து பார்த்தால் ஒரு பாறை மற்றும் மரங்கள் அடர்ந்த இடமாக தெரியும். பக்கத்தில் போய் பார்த்தால் மட்டுமே இரு வாயில்கள் கடலை கண்காணிக்க அமைக்கப்பட்டிருப்பது தெரியும். இதன் உள்ளே ஒரு சில அறைகள் கூட இருக்கிறது.


வீடு போன்ற கல்லறை
பதுங்குகுழியை பார்த்துவிட்டு வெளியே வந்ததும் எதிர்த்தார்போல் ஒரு சிறிய கட்டடமும் அதனை சுற்றி வளாகமும் இருந்தது. முதலில் ஓர் அறையுடைய வீடு என்று நினைத்தேன். மேலும் சிறிது ஆராய்ந்த போது அது ஒரு கல்லறை என்று தெரிந்தது. சிறிய வீடு போன்று கட்டி சுற்றிவர சுவர் எழுப்பி வைத்திருக்கிறார்கள். தைவானில் கல்லறை சிறப்பாக கட்டுவார்கள். ஆனால் ஒரு வீடு போன்ற கல்லறையை இங்கு தான் முதன்முதலில் பார்க்கிறேன்.

அடுத்து ஜென்பேன் (Genban Bay) கடற்கரைக்கு சென்றோம். சிறிய கடற்கரைதான். ஆனால் சுத்தமாக இருந்தது. கடற்கரையோரம் நிறைய கிளிஞ்சல்கள் ஒதுங்கியிருந்தன. நானும் அமிர்தனும் நிறைய கிளிஞ்சல்கள் சேகரித்தோம். சிறிது நேரம் கடல் விளையாட்டு. அதற்குள் மாலை சூரியன் மேற்கில் இறங்க ஆரம்பித்தது. அதனை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தோம்.

1. கடல் உயிரினத்தின் பாறை படிமம் 2. சிப்பியின் பாறை படிமம்
3. சிப்பி நண்டு 4. பாறை இடுக்கில் வாழும் நண்டு, 5. நிலத்தில் வாழும் நண்டு

இரவு 8 மணிக்கு தங்கும்விடுதி முன்னர் டார்ச்லைட்டுடன் வரச்சொன்னார்கள். அங்கு ஒவ்வொருநாளும் இரவு சுற்றுலாவிற்கு தங்கும் விடுதியிலிருந்து அழைத்துச்செல்கிறார்கள். விடுதியின் நிர்வாகிதான் வழிகாட்டி. விடுதியை தாண்டி சாலைக்கு வந்தால் மையிருட்டு. குடியிருப்பு பகுதியை தவிர  தீவின் மற்ற பகுதியில் மின் விளக்கு ஏதும் இல்லை. இந்த தீவிற்கு தேவையான மின்சாரம் கூட தைவான் தீவிலிருந்தே வருவதாக கூறினார்கள். டார்ச்லைட் உதவியுடனே நடக்க வேண்டும். ஒவ்வொரு விடுதியிலிருந்தும் 10 வண்டிக்கு மேல் அணிவகுத்து செல்கின்றார்கள். முதலில் பியூட்டி கேவ் பகுதிக்கே சென்றோம். அங்கு செல்லும் வழியானது அடைத்து வைத்திருந்தார்கள். எங்கள் வழிகாட்டி தாண்டி குதித்து எல்லோரையும் அப்படியே வரச்சொன்னார். காலையில் மேலோட்டமாக பார்த்ததற்கும் இப்பொழுது பார்ப்பதற்க்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. எங்கள் வழிகாட்டி ஒவ்வொரு இடமாக நின்று விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தார்.  சிப்பி, நண்டு, இறால் என்று அத்தனையும் பாறையில் படிமங்கலாக இருக்கிறது. அது போன்று பாறை இடுக்குகளில் இருக்கும் பூச்சிகள், நண்டு என்று அத்தனையையும் காண்பித்தார். அங்கிருந்து கெளஷியாங் துறைமுகத்தை காண்பித்தார். கடலுக்கு அப்பால் தூரத்தில் விளக்கு வெளிச்சத்தில் மினுமினுத்துக் கொண்டிருந்தது.

Wednesday, March 1, 2017

கொற்கை - ஜோ டி குருஸ்


கொற்கை ‍ 2013 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாவல். புத்தகத்தை பார்த்ததும் மலைப்பாக இருந்தது. தலையனை அளவுக்கு 1130 பக்கங்களுடன் இருந்தது. கல்லூரிகாலமாக இருந்தால் ஒரு வாரத்துக்கு தாங்காது. ஆனால் இப்பொழுதோ படிக்க நேரம் கிடைக்கவில்லை. இதனை படித்துமுடிக்க எத்தனை நாட்களாகுமோ என்று ஒரு பயம் வேறு வந்தது. அதுக்கு காரணமும் இருக்கிறது. சில நேரங்களில் ஆசைப்பட்டு தலையனை அளவு புத்தகங்களை வாங்கி படிக்க ஆரம்பிக்கும் பொழுது சுவராஸ்யம் இல்லாமல் அப்படியே போட்ட புத்தங்கள் பல. அது மாதிரி இதுவும் ஆகிவிடக்கூடாதே என்கிற கவலையும் வந்தது. அவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கிய புத்தகம் இது. சில நேரங்களில் தினமும், சில வாரங்களில் ஒரிருநாட்கள் என்று மூன்று மாதங்கள் எடுத்துக்கொண்டது.

நாவல் என்றதும் உண்மை சம்பவங்களை கற்பனை கதையை சேர்த்து சாண்டில்யன் மாதிரி எழுதியிருப்பார் என்று நினைத்துதான் வாங்கினேன். ஆனால் நான் நினைத்ததற்கு நெர்மாறாக இருந்தது. கிட்டதட்ட இது ஒரு வரலாற்று ஆவணம் போன்று இருந்தது. கொற்கையின் டையரி குறிப்பு என்றே சொல்லலாம். இதற்காக நூல் ஆசிரியர் ஜோ.டி. கு
ருஸின் உழைப்பு இந்த நூலில் வழியாக தெரிகின்றது. கிட்டதட்ட ஐந்தாண்டுகள் உழைத்திருக்கிறார் என்று வலைதளத்தில் படித்தேன்.

உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற ஒரு துறைமுகம் கொற்கை. பாண்டிய சாம்ராஜ்யத்தில் மிகப் பெரிய துறைமுகம். கொற்கை முத்துக்கள் உலகப் புகழ் வாய்ந்தவை. அப்படிப்பட்ட‌ கொற்கையில் கடந்த 20ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட சமூக, பொருளாதார மாற்றங்களை, ஏற்ற தாழ்வுகளை விளக்குவது இந்த நூலின் சிறப்பு.

இந்த நாவலின் நடையானது கொற்கை வட்டார மொழி வழக்கில் குறிப்பாக பரதவர்கள்(மீனவர்கள்) வழக்கில் அமைந்திருக்கிறது. அந்த வட்டார வழக்குச்சொல் தெரியாதவர்களுக்கு புரிந்துகொள்ளும் விதமாக கடைசியில் சில பக்கங்களில் அருஞ்சொற்பொருள் விளக்கம் இருக்கின்றது. படிப்பவர்களுக்கு ஒரு வார்த்தை புரியவில்லை என்றால் பின்னால் சென்று அர்த்தம் புரிந்துகொள்ளலாம். இந்த நூலை வாசிக்க ஆரம்பிக்கும் முன்னர் எக்காரணம் கொண்டும் பின் பக்கம் சென்று அர்த்தம் தேடக்கூடாது என்று முடிவு செய்திருந்தேன், அப்படி போய் பார்த்தால் நான் கொற்கை மண்டலத்தில் பிறந்து வளர்ந்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். 1130 பக்கம் படித்து முடிக்கும் வரைக்கும் அர்த்தம் தேடி பின் பக்கங்களை புரட்டவில்லை. மேசைக்காரன் என்ற ஒரு வார்த்தைக்கு அர்த்தம் புரியவில்லை. ஆனால் என்னால் கெஸ் பண்ண முடிந்தது, கடைசியில் என்னுடைய கெஸ்ஸிங் 90% மேட்ச் ஆகிவிட்டது. இன்னும் எனக்குள் ஊர்வாடை  இருக்கின்றது என்பது ஒரு பெருமை தான். மதுரைக்கு வடக்கு பக்கம் இருப்பவர்கள் இந்நூலை படிக்கும் முன்னர் கடைசி பக்கத்தை ஒரு முறை பார்வையிட்ட பின் படிப்பது நன்று. 

மேலும் வட்டார பேச்சு மொழியிலே இந்த புதினம் எழுதப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி, திருநெல்வேலியில் இன்றும் ஏதாவது பேசுவதற்கு முன்னர் வக்காலி என்ற வார்த்தையை முன்னர் சேர்த்துதான் பேச ஆரம்பிப்பார்கள். அதே போன்ற நடை எழுத்திலும் இருக்கிறது. இப்புத்தகத்தில் வரும் அனைத்து பாத்திரங்களை பற்றிய குடும்ப விவரங்கள் கடைசி பக்கங்களில் இருக்கிறது. எழுத்தாளர் ஜோ டி குருஸ் அவர்களின் பாட்டி பற்றிய விவரம் கூட இருக்கிறது 
என்று நினைக்கிறேன். ஏதோ ஒரு இடத்தில் அதை பற்றிய குறிப்பு இருக்கிறது.

பாண்டிய சாம்ராஜ்யத்தில் மீனவ பாண்டியன் என்ற ஒரு சிற்றரசன் கொற்கைக்கு தலைவானாக இருந்தார் என்பதும் அதுவும் 20ஆம் நூற்றாண்டின் மத்தி வரை இருந்தார் என்பதே இந்த புத்தகம் படித்த பின்னர் தான் தெரிந்தது. அவருடைய புகைப்படமும், மீன்வ பாண்டியபதியின் அரண்மனை புகைப்படமும் புத்தகத்தில் இருக்கிறது. கொற்கையில் முத்துக்குளிப்பது வரை மிகுந்த செல்வாக்குடன் இருந்திருக்கிறார். ஆங்கிலேய அரசு முத்துக்குளிப்பை நிறுத்தியதும், அதே கால கட்டத்தில் பரதவ சமுதாயத்தில் நடந்த மத மாற்றங்களாலும் அவருடைய செல்வாக்கு படிப்படியாக குறைந்து முற்றிலும் மறைந்துவிட்டது. 

பொதுவாக இதுவரை படித்த புதினங்களில் கதையின் நாயகன் என்று ஒருவர் இருப்பார். அவரை சுற்றியே கதை ஓட்டம் அமைந்திருக்கும். ஆனால் கொற்கை புதினத்தின் பிரதான நாயகன் கொற்கையே. பரதவர்கள், நாடார்கள், ஆங்கிலேயர்கள், பவுல் தண்டல், சண்முகப்பாண்டி நாடார் எல்லாம் அதன் உப பாத்திரங்களே. இந்நாவலின் இரண்டாவது நாயகன் பவுல் தண்டல் என்று சொல்லலாம். சிறிய வயதில் கொற்கைக்கு ஓடி வருவதில் இருந்து கடைசி அத்தியாயம் வரை ஆங்காங்கே வருகின்றார். 

இந்நாவல் ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு அத்தியாயம் என்ற வகையில் 1900 ஆம் ஆண்டில் ஆரம்பித்து 2000 வருடத்தில் முடிவுறுகிறது. இடைப்பட்ட காலத்தில் கொற்கை, தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கையில் நடந்த‌ முக்கியமான சம்பவங்கள் அனைத்தையும் நேரடியாக விவரிக்காமல் கதாபாத்திரங்கள் பேசுவது போன்று நாவலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. உலகப்போர், சுதந்திரம், காந்தி, பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், நேரு, இந்திரா, ராஜீவ்காந்தி பற்றிய செய்திகள் அனைத்தையுமே இரு பாத்திரங்கள் பேசுவது போன்றோ அல்லது ஒரு பாத்திரத்தின் எண்ணமாகவோ நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் சந்திரபாபு (கொற்கை மண்ணின் மைந்த்தன்) பற்றிய சில குறிப்புகளும் இருக்கின்றது.


இலங்கைக்கு தோணிவிடுவது, தூத்துக்குடி மக்கள் வியாபாரம் மூலம் அங்கு குடியேறுவது, அப்பொழுது அங்கு நடக்கும் இனவாத கலவரத்தில் அனைத்தையும் இழந்து மீண்டும் தூத்துக்குடிக்கே திரும்புவது என்று அனைத்தையும் எழுத்தில் கொண்டுவந்திருக்கிறார். நாவலில் தூத்துக்குடி உடன்குடி பயணிகள் புகைவண்டி பற்றிய செய்தி இருக்கிறது. அப்படி ஒரு வழித்தடம் இருந்த செய்தியே நாவலை படித்துதான் தெரிந்துகொள்ள முடிந்தது. இன்று அந்த வழித்தடம் இல்லை. அல்லது திருச்செந்தூரோடு நின்று விட்டது. அது போன்று சென்னையில் ஸ்டீவன் கல்லூரி என்ற ஒன்று இருந்திருக்கிறது. வலைத்தளத்தில் தேடினால் அது பற்றிய செய்திகள் ஏதும் இல்லை.

ஆத்மார்த்த நண்பர்களாக பவுல் தண்டலும், சண்முகப்பாண்டிய நாடாரும் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் சந்தித்து பேசுவது போன்ற காட்சி சில இடங்களில் தான் வருகிறது. ஆனாலும் பவுல் தண்டல் முக்கியமான முடிவுகள் எடுக்கும் முன்னர் தன்  நண்பரை கலந்து தான் முடிவுசெய்கிறார். கடைசியாக பவுல் தண்டல் தன்னுடைய ஆத்மார்த்த நண்பரை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் ரயில் ஏறும் பொழுதே அவருக்கு ஏதோ ஒன்று ஆகிவிடுமோ என்று நம்முடைய நெஞ்சம் பதை பதைக்க ஆரம்பிக்கிறது. இதிலிருந்தே ஒரு சூப்பர் ஹீரோவாக இல்லாவிட்டாலும் பவுல் தண்டலை நம்முள் ஊடுருவ விட்டுள்ளார் எழுத்தாளர்.

இந்நாவல் கலப்பு மணம், மறுமணம் என்று அனைத்து விசயங்களையும் பேசுகின்றது. ஆனால் எந்த ஒரு இடத்திலும் அதற்கு பெரிய எதிர்ப்பு இருப்பது போன்ற பதிவுகள் இல்லை. இன்றும் கூட அந்த பகுதியில் அண்ணன் இந்துவாகவும், தம்பி கிருஸ்தவராகவும் ஒரே வீட்டில் வசிக்கும் வழக்கம் இருக்கிறது, பெரிதாக அடிதடி இல்லாமல்.

நாவலில் மத்திய பகுதியில் ஏதும் முக்கியமான நிகழ்வுகள் இல்லை என்பதால் சிறிது தொய்வு ஏற்பட்டாலும் கொற்கை உங்களை காலக்கடலுக்குள் இறக்கி முத்துகுளிக்க செய்யும்.