Wednesday, December 14, 2016

காண்டா விளக்கு 3 - உமா சங்கர் IAS

அப்பொழுது நான் திருவாரூரில் ஒரு கூட்டுறவு வங்கிக்காக வேலை செய்துகொண்டிருந்தேன். தினமும் மதிய உணவுக்கு பின்னர் வங்கியின் பின்பக்கம் லோன் செக்சனில் சென்று சிறிது அரட்டை அடிக்கும் பழக்கம் இருந்தது. அப்படி ஒருநாள் லோன் செக்சனில் நின்று கொண்டிருக்கும் பொழுது அசிஸ்டண்ட் மேனஜர் ஒருவர் வந்து கலெக்டர் வந்திருக்கிறார். உதவி செய்லாலர் உங்களை கூப்பிடுகிறார், உடனே வாருங்கள் என்றார்அன்றைய தினம் பொது செயலாலர் விடுப்பில் இருந்தார். நான் செல்லும் பொழுது துனை செயலாலர் வெளியே அறைவாசலில் இருந்தார். கலெக்டர் கம்பியூட்டர் சம்பந்தமாக ஏதோ கேள்வி கேட்கிறார். எங்களுங்கு தெரியவில்லை. நீங்கள் பதில் சொல்லுங்கள் என்று என்னை அறைக்குள் கிட்ட தட்ட தள்ளிவிட்டார்.

திருவாரூர் தனி மாவட்டமாக மாறும் பொழுது அதன் முதல் கலெக்டராக திரு உமா சங்கர் IAS அவர்கள் நியமிக்கபட்டார். அவர் எதற்கு இந்த நேரத்தில் இங்கு வந்திருக்கிறார் என்று எண்ணிக்கொண்டே உள்ளே சென்றேன்.

பின்னாடியே வந்த துனை செயலாலர் இவர் தான் எங்கள் வங்கியின் கணிப்பொறியாலர் என்று என்னை அறிமுகப்படுத்தினார். என்னை எதிர்தார்போல் அமரச்சொன்னார். உடனே அமர்ந்துகொண்டேன். இத்தனைக்கும் துனை செய்லாலர் நின்று கொண்டே இருந்தார். எனக்கு அந்த வயதில் காலாட்டும் பழக்கம் இருந்தது. சைக்கலாஜிக்கல் படி உணர்சிவசப்பட்ட நிலையில் அதனை குறைப்பதற்காக ஒரு சில பேர் காலாட்டுவார்கள் என்று பின்னர் புத்தகத்தில் படித்திருக்கிறேன். பின்னாடி இருந்து ஒருவர் முதுகில் மெதுவாக கிள்ளி, காலை ஆட்டாதே என்று செய்கை செய்தார்.

அப்பொழுதைய திமுக அரசு, மகளீர் சுய உதவிக்குளுக்களை ஊக்குவித்த நேரம். அவர்கள் மகளீருக்கான ஒரு கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தார்கள். தினசரி வியாபரத்திற்கு செல்பவர்கள் கந்து வட்டி காரர்களிடம் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம். இத்திட்டத்தின் படி ஒருவருக்கு 100 ரூபாய் கடன் கொடுத்தால் தினசரி 1ரூபாய் விதம் 130 நாட்கள் வசூலிப்பார்கள். மகளீர் வங்கிக்கு வரவேண்டிய அவசியம் கூட இல்லை. வங்கியில் இருந்தே ஒருவர் போய் வசூல் செய்துவிட்டு வருவார். அருமையான திட்டம். மகளீர் தினமும் காலையில் கந்து வட்டிகார்களிடம் போய் நிக்க வேண்டிய அவசியம் இல்லை. மாலையில் சம்பாத்தியத்தில் பாதியை கந்துவட்டிகாரனுக்கு கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. முதலுக்கான பணம் கடன் திட்டம் மூலம் கிடைக்கும், தினமும் சம்பாத்தியத்தில் இருந்து 1 ரூபாய் கட்டினால் போதும். அன்றைய அரசாங்கம் இந்த திட்டத்தை நடைமுறை படுத்தி உண்ணிப்பாக‌ மேற்பார்வை செய்துகொண்டிருந்தது. அதற்கு தினமும் தேவையான தகவல்களை வங்கியில் இருந்து அரசாங்கத்திற்கு அனுப்ப வேண்டும்.

திருவாரூர் கலெக்டர் திரு உமாசங்கரிடம் ஒரு மென்பொருள் தயாரிக்கும் டீம் இருந்தது. அவர்கள் இந்த மகளீர் கடன் திட்டத்திற்கு ஒரு  மென் பொருள் தயாரித்திருந்தார்கள். நான் இருந்த வங்கி திருவாரூர், நாகப்பட்டணம், தஞ்சாவூர், மாயவரம், கும்பகோணம் பகுதியில் கனிணி மயமாக்களில் மிகவும் பெயர் வாங்கியது. அதனால் முதன் முதலில் நான் இருந்த வங்கியில் அதனை நிறுவி சோதித்து பார்க்கலாம் என்று வந்திருக்கிறார்கள்.

திரு உமாசங்கர் IAS அவர்கள் என்னிடம் ஒரு பிளாப்பியில் சாப்டவர் தருகிறோம். அதனை நிறுவி, டேட்டா இன்புட் செய்து தினமும் எங்களுக்கு டேட்டா அனுப்பவேண்டும் என்றார். நானோ அது ரொம்ப கஷ்டம் என்றேன். சுற்றி நின்ற வங்கி ஊழியர்களுகும், துனை செயலாலரும் கொஞ்சம் ஷாக் ஆகி என்னை பார்த்தார்கள். ஒரு கலெக்டர் சொல்லும் பொழுது சரி என்று சொல்லாமல் முடியாது என்று சொல்கிறானே என்று நினைத்தது அவர்கள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. ஆனால் கலெக்டர் முகத்தில் அதற்கான எந்த ரியாக்ஷனும் இல்லை. ஏன்ன கஷ்டம் என்றார்.

எங்களுடைய சாப்டவர் கோபாலில் எழுதியது. அவருடைய சாப்டவர் விஸ்வல் பேசிக் மற்றும் டேட்டா பேஸ் வைத்து எழுதியது. இரண்டு சாப்ட்வேரையும் லிங் செய்ய முடியாது என்று சொன்னேன். அதில் உள்ள நடைமுறை சிக்கல் மற்றும் வங்கி ஊழியர்களுக்கு ஏற்படும் வேலை சுமை அனைத்தையும் கூறினேன். அவர் அதனை புரிந்து கொண்டார். உங்களுக்கு எந்த பார்மெட்டில் தினசரி டேட்டா வேண்டும் என்று சொன்னால் அந்த பார்மெட்டில் தினமும் அனுப்புகிறென் என்று சொன்னேன். கடைசியில் நான் சொன்னதை ஒத்துக்கொண்டார்.

இதனை நான் ஏன் இவ்வளவு விரிவாக சொல்கிறேன் என்றால், அப்பொழுது நான் வயதில் அனுபவத்தில் எல்லாம் மிகவும் சிறியவன். பார்வைக்கு கூட மிகவும் ஒல்லியாக இருப்பேன். ஒரு பொடியன் நாம் சொல்வதை கேட்கவில்லை என்ற என்னம் எல்லாம் அவரிடம் இல்லை. நடைமுறை சிக்கல்களை சொன்னதும் புரிந்துகொண்டார். அவர்போனதும் வங்கியில் ஆளாளுக்கு என்னை காச்சி எடுத்தது தனிக்கதை. அதன் பின்னர் ஒருமுறை வங்கிக்கு வரும் பொழுது என்னிடம் ஒரு சில வார்த்தைகள் பேசி சென்றார்.

திருவாரூர் கலெக்டராக இருக்கும் பொழுது அவர் செய்தவை (எனக்கு தெரிந்தது)

1. நாம் இப்பொழுது மிக சுலபமாக எடுக்கும் கணினி பட்டா, சிட்டா எல்லாம் திரு உமாசங்கர் IAS மற்றும் அவருடைய டீமும் செய்த மென்பொருளில் தான். அதன் சோதனை ஓட்டம் முதன் முதலில் திருவாரூரில் தான் செய்தார்கள்.

2. சிலபல ஆண்டுகளாக தூர் வாராமல் இருந்த திருவாரூர் கமலாலயம் குளத்தை தூர் வாரினார். 4 வேலி அளவு உள்ளது அந்த குளம். அதன் உள்ளே இருந்த 21 கிணறுகளையும் தேடி கண்டுபிடித்து தூர் வாரவைத்தார்.

3. கமலாலயம் குளத்திற்கு நீர் வந்து/செல்லும் பாதைகளை ஆக்கிறமித்திருந்தார்கள். ஆக்கிறமிப்புகளை அகற்றி கொள்ளிடம் ஆற்று தண்ணீர் தங்கு தடையின்றி குளத்திற்கு வரச்செய்தார்.
 
3. இருபத்தோரு வருடங்கள் ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை சரிசெய்து ஓட வைத்தார். அதுவரை மரத்தினாலான சக்கரம் தான் தேருக்கு இருந்தது. இவர் அதனை இரும்பால் செய்து மாட்டினார்.

4. தேர் புறப்படுவதற்கு முந்தைய இரவு இரு சிறுவர்கள் குளிக்கிறேன் என்று கமலாலயத்தில் மூழ்கிவிட்டனர். அவர்கள் உடல் கிடைக்கும் வரைக்கும் குளத்தின் அருகிலே இருந்து தேடுதலை ஊக்கப்படுத்தினார். உடல் கிடைக்கும் பொழுது காலை 5மணி என்று சொன்னார்கள். ஆறுமணிக்கு தேரோட்டம் தொடங்க செய்தார்.

5. ஒரு முறை புயல் மற்றும் கடும் மழையில் ஆற்றில் நீர்வரத்து அதிகமாகி நீடாமங்கலம் பாலம் உடையப்போகிறது என்று கேள்விப்பட்டு நள்ளிரவில் ஒடிசென்று பார்வையிட்டு பாலம் உடையாமல் இருக்க‌ தேவையான நடவடிக்கைகளை எடுத்தார்.

6. சிறந்த மென்பொருள் டீம் ஒன்று வைத்து அரசாங்கத்துக்கான மென்பொருள் தயாரித்தார்.

இது எல்லாம் எனக்கு தெரிந்த செய்திகள். எனக்கு தெரியாமல் நிறைய இருக்கலாம். அவ்வளவு சிறந்த ஒரு ..பா அவர்களை நம்முடைய அரசாங்கம் சரியாக பயண்படுத்திக்கொள்ள வில்லை.

அவருடைய தற்பொழுதைய பேச்சுக்களை கேட்பவர்கள் இவர் ஒரு காமெடி பீஸ் என்றே நினைக்கிறார்கள். ஆனால் இவர் ஒன்றும் அப்படி சோடையான ஆள் இல்லை.  சுடுகாட்டு ஊழலை கண்டுபிடித்தார். நாம் இதற்கு முன்னர் உபயோகித்த தேர்தல் அட்டை தயாரிப்பிளும் அரசாங்கத்தின் சார்பில் இருந்தார் என்று நினைக்கிறேன்.

அடுத்து அமைந்த அரசாங்கம் அவருக்கு வேலை கொடுக்காமல் காத்திருப்பில் வைத்திருந்தது. மேலும் சில வழக்குகள் தொடுத்தார்கள். அதன் விரக்தியே அவருடைய தற்பொழுதைய நிலமைக்கு காரணம். 

எப்பொழுதாவது யோசித்திருப்பார் "நாம் ஏன் இந்த பாழாய்போன சுடுகாட்டு ஊழலை கண்டுபிடித்தோம்" என்று.

அரசியல் பங்காளிச் சண்டையில் பந்தாடப்பட்ட திறமையான ஒரு அதிகாரி.

2 comments:

  1. அண்ணா, சுவையான வாசிப்பாக இருந்தது. தொடர்ந்து எழுதுங்கள். 2001ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்துக்கான காரணங்கள் என்னவென்றே தெரியவில்லை. திமுக ஆட்சி சிறப்பாகவே இருந்தது. அதிமுகவால் பழிவாங்கப்பட்டு பரிதாபத்துக்குரியவராகிவிட்டார் உமாசங்கர்.

    ReplyDelete