Saturday, December 17, 2016

பொங்கு தீவு, தைவான் - Penghu Island, Taiwan - II

எங்களுடைய இரண்டாம் நாள் பயணத்திட்டத்தில் ஷிமேய்(Qimei / Ximei) தீவு இருந்தது. ஷிமேய் தீவு மாக்கோங் தீவிலிருந்து சுமார் 30 கடல் மைல் தூரத்தில் இருக்கிறது. பயனிகள் படகில் புறப்பட்டால்  சுமார் இரண்டு மணி நேர பயணம். நடுவில் இன்னொரு சிறிய தீவும் இருக்கிறது. அங்கும் படகு நிற்கும். இறங்கி சுற்றிபார்த்துவிட்டு வரலாம். இந்த ஷிமேய் தீவில் தான் பிரசித்தி பெற்ற இரட்டை இதய வடிவம் இருக்கிறது. கடலுக்குள் கற்களை அடுக்கி கட்டிய இரட்டை இதய வடிவம். இதனை பொதுவாக மீன் பிடி கலுங்காக‌ பயன்படுத்துகிறார்கள்.


புகழ்பெற்ற இதய வடிவ மீன்பிடி கலிங்கு : பட உதவி - கூகுள்

முதல் நாள் இரவிலே விடுதியில் ஷிமேய் தீவிற்கு போகவேண்டும் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்க முடியுமா என்று கேட்டோம். கடந்த 2 நாட்களாக கடல் கொந்தளிப்பாக இருக்கிறது. அதனால் எந்த படகும் வெளியில் செல்லவில்லை. அது போல் எந்த படகும் உள்ளே வரவில்லை என்றார்கள். நாளைய‌ நிலமை நாளை காலையில் தான் தெரியும், எதற்கும் காலையில் வந்து விசாரியுங்கள் என்று கூறிவிட்டார். அடுத்த நாள் காலையில் விசாரித்ததில் அன்றும் எந்த பயனிகள் படகும் வெளியே செல்லாது. கடல் கொந்தளிப்பாக இருக்கிறது என்றார்கள். பக்கத்தில் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் ஒரு தீவு இருக்கிறது. அங்கு பாறை படிமங்கள் அதிகம். அங்கு செல்லலாம் என்றால் அங்கும் பயணிகள் படகு செல்லாது என்று கூறிவிட்டார்கள். நீர் விளையாட்டாவது விளையாட முடியுமா என்றால், காலையில் சீதோசன நிலை சரியில்லை. மாலையில் விளையாட முடியுமா என்று 2 மணிக்கு மேல் தான் தெரியும். நீங்கள் வேண்டும் என்றால் கடல் பண்ணைக்கு (ocean farm) செல்கிறீர்களா? இன்று கடல் பண்ணைக்கு படகு செல்கிறது என்றார்.

ஷிமேய் தீவுக்கு செல்லும் வழிகள்
கடல் பண்ணை சுற்றிபார்ப்பது எங்கள் பயனத்திட்டத்தில் இல்லாத ஒன்று. அது எப்படி இருக்கும் என்ற அனுமானம் கூட இல்லை. கடல் சார் உயிரிகளை பண்ணை போல் வைத்து வளர்க்கிறார்கள் என்றே நினைத்தோம். வேறு வழியில்லாமல் சரி என்றோம். உடனே தொலை பேசியில் அழைத்து எங்களுக்காக பதிவு செய்துவிட்டார்கள். மதிய உணவு அங்கேயே கொடுப்பார்கள் என்றார்கள். நான் சைவம் என்றதும் மீண்டும் போன் செய்து பேசிவிட்டு உனக்கு கடல் பாசி போட்டு நூடுல்ஸ் கொடுப்பார்கள் என்றார்கள்.  நாம் எந்த இடத்திலும் பணம் கொடுக்க தேவையில்லை. அனைத்தையும் விடுதியே பார்த்துக்கொள்ளும். மொத்தமாக அறையை காலிசெய்யும் பொழுது கொடுத்தால் போதும். அப்படி ஒரு ஒப்பந்தம் எல்லா இடங்களிலும் வைத்திருக்கிறார்கள்.


காலை 9 மணிக்கு ஒரு வேனில் வந்து எங்களை அழைத்துச் சென்றார்கள். வேனில் ஏற்கெனவே நிறைய பயணிகள் இருந்தார்கள். பேக்டரி போன்ற இடத்திற்கு நம்மை அழைத்து செல்கிறார்கள் என்று நினைத்தோம். சிறிய துறைமுகத்திற்கு அழைத்து சென்று காத்திருக்க சொன்னார்கள். பையன் அதற்குள் தன்னுடைய ரசிகர்களை திரட்டிவிட்டான். ஆளாளுக்கு அவனை எடுத்துக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். அது படகிலும் தொடர்ந்தது.  எங்களுக்கோ படகில் அழைத்து செல்லும் அளவுக்கு இந்த கடல் பண்ணை எங்கு இருக்கிறது. அதில் என்ன இருக்கும் என்ற சஸ்பன்ஸ் அதிகரித்து கொண்டே இருந்தது.
 
கடல் பண்ணை - Ocean farm

நடு கடலில் தெப்பம் போன்று கட்டி மிதக்க விட்டிருக்கிறார்கள். கொஞ்சம் பெரிய சைஸ் தெப்பம். அதில் ஒரு ஓரத்தில் சிறிய வீடு போன்ற அமைப்பு வேறு. சுற்றிலும் பாதுகாப்பு வலை. யாரும் தவறி கடலில் விழுந்துவிடாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள். கடல் அலைகளுக்கு ஏற்ப தெப்பம் அப்படியும் இப்படியும் ஊஞ்சல் ஆடியது. படகு போய் அந்த தெப்பத்தோடு இனைந்ததும் ஒவ்வொருவராக தெப்பத்திற்குள் இறங்கினோம். இப்பொழுது தெப்பம் தெளிவாக தெரிந்தது. தெப்பத்தை நான்கு பகுதியாக பிரித்திருக்கிறார்கள். நடுவில் கடல் நீர். சுற்றி நடைபாதை. ஒவ்வொரு பகுதியிலும் சுறா, திருக்கை, ஸ்குட்(squid) என்று ஒவ்வொருவகையான மீன்கள். அவற்றிற்கு தூண்டில் மூலம் உணவு கொடுக்கலாம். 
தூண்டில் மூலம் சுறாவிற்கு உணவிடும் காட்சி

கைகளால் திருக்கை மீனுக்கு உணவிடும் காட்சி


நாம் இறங்கியதும் நம் கையில் ஒரு தூண்டியலை கொடுத்துவிடுகிறார்கள். முதலில் நிறைய தயக்கம் இருந்தது. அதன் பின்னர் அங்கு வழிகாட்ட வந்தவர் இந்த தூண்டிலில் தூண்டில்-முள் இருக்காது. வெறும் நூல் மட்டும் தான். அங்கு ஒரு வாளியில் மீனுக்கான உணவு இருக்கிறது. அதனை இந்த நூலில் சுற்றி எதாவது ஒரு பகுதில் வீசினால் மீன்கள் பாய்ந்து வந்து அதனை கவ்வி செல்லும். முடிந்தால் வெளியே இழுத்து பார்க்கலாம். ஆனால் எந்த மீனையும் கொல்லக்கூடாது என்றார். அதன் பின்னர் நாங்களும் சிறிது நேரம் மீனுக்கு உணவிட்டோம். முக்கால் மணிநேரம் கழித்து அடுத்த படகு கடல் பண்ணைக்கு வந்தது. நாங்கள் எங்கள் படகில் ஏறி மதிய உணவுக்கான இடத்திற்கு சென்றோம்.


சிப்பி நத்தை - Oysters

உணவு விடுதியும் தெப்பத்தில் தான் கட்டி வைத்திருக்கிறார்கள். ஆனால் அதன் எடையினால் அந்த அளவுக்கு ஆடாமல் இருக்கிறது. அங்கு அனைவருக்கும் நத்தை சிப்பி (oysters) கொடுத்தார்கள். அதனை நெருப்பில் சுட்டு சாப்பிட வேண்டும். எனக்கு கடல் பாசி போட்ட நூடுல்ஸ் வந்தது. மிகவும் கஷ்டப்பட்டு சாப்பிட்டேன். மீண்டும் வேனில் ஏற்றி எங்களை விடுதியில் விட்டுவிட்டார்கள். மாலை 4 மணிக்கு நீர் விளையாட்டு நடக்கும். உங்களுக்கு பதிவு செய்துவிடவா என்று கேட்டார்கள். நீர் விளையாட்டு நடக்கும் கடற்கரை பகுதியை மேப்பில் குறித்துக்கொண்டேன்.

துறைமுக அலுவலகம் மற்றும் வியாபார நிலையம்


சிறிது வீதி உலா செல்லலாம் என்று பக்கத்தில் இருந்த துறைமுக அலுவலகத்துக்கு சென்றோம். கப்பல் போன்ற வடிவில் மிக பிரமாண்டமாக கட்டியிருக்கிறார்கள். அதில் ஒரு சில தளங்களை வியாபாரத்திற்காக விட்டிருக்கிறார்கள். அதில் நிறைய சிறிய கடைகள் இருக்கின்றன. இங்கு செயற்கை முத்துக்கள் கிடைக்கிறது. துறைமுக அலுவலகம் மிக பெரியதாக இருந்தது. அங்கு சிறிது ஓய்வெடுத்து கொண்டிருந்தோம். ஒரு தம்பதியினர் அரக்க பரக்க வந்தனர். இங்கு ஒரு பை இருந்ததா என்றார்கள். அப்படி ஒன்றும் பார்க்க வில்லை என்றோம். அவர்களிடம் பேச்சு கொடுத்ததில் அவர்கள் கப்பல் மூலமாக வந்திருக்கிறார்கள். இரண்டு நாள் முன்னர் அவர்கள் திரும்பி செல்ல வேண்டும். கடல் சீதோசன நிலை சரியில்லாததால் அவர்களால் திரும்பி செல்ல முடியவில்லை. தினமும் வந்து கப்பல் செல்கிறதா என்று விசாரித்துவிட்டு செல்வார்களாம். இன்றைய தினம் வரும் பொழுது அவர்களுடைய பையை மறதியாக எங்கோ வைத்துவிட்டார்களாம். முக்கியமான ஆவணங்கள் எல்லாம் அதில் இருக்கிறது, எல்லாம் தொலைந்துவிட்டது என்றார்கள். இங்கு போலீஸ் அல்லது தகவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள். யாரவது எடுத்து கொடுத்தால் உங்களை தொடர்புகொள்வார்கள் என்று அவர்களை அந்த பக்கம் அனுப்பி வைத்துவிட்டு நீர் விளையாட்டு நடக்கும் இடத்திற்கு செல்ல ஆரம்பித்தோம்

கடற்கரை மர கட்டிடங்கள்

ஆள் அரவம் இல்லாத கடற்கரை. நாங்கள் செல்லும் பொழுது கடலும், சில கட்டிடங்கள் மட்டுமே இருந்தது. சிறிய அலுவலகத்தில் இருந்த ஒருவரிடம், விடுதியிலிருந்து கொடுத்த சீட்டை நீட்டினோம். சிறிது காத்திருக்க சொன்னார். அன்றைய தினம் நீர் சருக்கு விளையாட்டுக்கு சில பேரே வந்திருந்தனர். அதனால் எல்லா விளையாட்டிற்கும் வழக்கமான நேரத்தை விட சிறிது அதிக நேரம் கொடுத்தார்கள். ஆனால் கடற்கரையோராமாகவே விளையாட்டு காட்டினார்கள். மறந்தும் கூட ஆழ்கடலுக்குள் கூட்டி செல்லவில்லை.

கடல் நீர் விளையாட்டு


மாக்கோங் தீவில் இரவு வாழ்கை தைபே போன்று கிடையாது. ஆனால் சுற்றுலா பயணிகள் இரவில் ஸ்குட் மீன் பிடிக்க கடலுக்கு செல்லலாம். பிடித்த உடனே அதனை சமைத்தும் சாப்பிடலாம். மீன் பிடிப்பதில் எனக்கு அந்த அளவிற்கு நாட்டம் இல்லை என்றாலும், அவர்கள் எப்படி ஸ்குட் மீனை பிடிக்கிறார்கள் என்று பார்க்கலாம் என்று நினைத்தேன். இரவில் கடலில் குளிர் அதிகமாக இருக்கும், கை குழந்தையை வைத்துக்கொண்டு இரவில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று விடுதியில் கூறிவிட்டார்கள். அதனால் அதனை கைவிடும்படி ஆகிவிட்டது.

சுற்றுலாவின் மூன்றாம் நாள், மாலையில் தைபே திரும்ப வேண்டும். காலையில் விடுதியை காலி செய்துவிட்டோம். அன்றைய தினம் கடல் சீதோசனநிலை சம நிலைக்கு வந்துவிட்டது. ஆனால் அனைத்து படகுகளும் ஏற்கெனவே புறப்பட்டுவிட்டன. அதனால் எந்த தீவுக்கும் செல்ல முடியாது என்று கூறிவிட்டர்கள். ஒரே வழி சிட்டி டூர் தான். மாக்கோங்கில் இருக்கும் பழமையான கோயில்களை பார்க்காலாம் என்று புறப்பட்டோம்.
 
Suogang Ziwei Temlpe

Suogang Ziwei Temlpe

முதலில் சாஹங் சூவேய்  என்ற கோவிலுக்கு சென்றோம். அந்த கோவில் முகப்பானது மேலிருந்து ஒருவர் பார்ப்பது போன்று இருந்தது. கோவிலின் மேற்கூரையில் ஒரு சிலையை வைத்திருக்கிறார்கள். கோவில் வழக்கம் போல் புத்தர் கோவில் தான். எல்லா கோவிலின் கூரையின் உட்பகுதியிலும் நுணுக்கமான வேலைபாடுகள் இருக்கிறது. அனைத்தையும் சிறப்பாக வர்ணம் பூசி வேறு வைத்திருக்கிறார்கள்.

வானவில் பாலம் - Rainbow Bridge

அதை பார்த்துவிட்டு வானவில் பாலத்திற்கு சென்றோம். அந்த பாலத்திற்கு அருகில் காற்று பலமாக வீசுகிறது. அதில் சில தடுப்பனைகளை கட்டி வைத்து 'கடற்பலகை பாய்மர படகோட்டம்' ("sea board saling" என்பதை இப்படி தான் சொல்ல வேண்டுமா என்று தெரியவில்லை) பயிற்சி செய்துகொண்டிருந்தார்கள். அங்கு நிறைய நாட்டவர்கள், மற்றும் குழுக்கள் தங்கள் பலகையில் பாய்மரத்தை கட்டிக்கொண்டிருந்தார்கள். விசாரித்து பார்த்ததில் அன்றைய தினம் சர்வதேச அளவில் ஒரு பாய்மர‌ பலகை போட்டி நடை பெருகிறது. ஆனால் இன்னும் இரண்டு மணி நேரங்கள் ஆகும் என்றார்கள். அங்கு குழந்தைகள் விளையாட்டு பகுதியிருக்கிறது. பையன் அங்கு கணநேரம் விளையாடிக்கொண்டிருந்தான். பக்கத்திலே சவுக்கு தோப்பு ஒன்று இருக்கிறது. நாள்பட்ட சவுக்கு மரங்கள் அங்கு இருக்கிறது. அந்த தோப்பின் உள்ளே இருக்கைகள் செய்து போட்டிருக்கிறார்கள். கடற்கரை காற்று வாங்கிக்கொண்டே ஓய்வெடுத்தோம்.
Seaboard Sailing


அடுத்து மாசூ என்ற கடல் தேவதை கோவிலுக்கு சென்றோம். தமிழகத்தில் மீனவர் பகுதிக்கு சென்றால் அங்கு கடற்கரை ஓரமாக கடலம்மா என்ற அம்மன் சிலை வைத்து வழிபடுவார்கள். அது போல் இங்கு மாசூ என்ற தேவதையை வழிபடுகிறார்கள். இந்த கோவில் 400 ஆண்டு பழைமையானது. ஒரு சில இடங்கள் இடிந்து விழுகின்ற நிலமையில் இருக்கிறது. அதனால் பார்வையாளர்களுக்கு உள்ளே செல்ல அனுமதியில்லை. வெளியில் இருந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். கோவில் வாசலில் ஒருவர் அன்னாச்சி பழத்திற்கு வர்ணம் தீட்டி வைத்திருந்தார். அதனை எதற்காக உபயோகிப்பார்கள் என்று தெரியவில்லை.

கடல் தேவதைக்கான கோவில் - Matzu / Mazu


மீண்டும் கடைத்தெரு விஜயம், விண்டோ சாப்பிங். மாலை நான்கு மணிக்கு விடுதிக்கு திரும்பினோம். எங்களுடைய விமாணம் மாலை 6 மணிக்கு. வேன் முலம் விடுதியிலிருந்து விமானநிலையத்திற்கு சென்றோம். விமாணத்திற்குள் கடைசியாக நாங்கள் ஏறினோம். எனக்கு முன்னர் ஒரு தைவானிஸ் போய்கொண்டிருந்தார். வெளிநாட்டு பெண்கள் மூன்று பேர் உள்ளே இருந்தார்கள். இவர்கள் மூவரையுமே காலையில் வானவில் பாலத்தின் அருகில் சந்தித்திருந்தோம். அவர்கள் மூன்று பேரும் என்னையும் தைவானிஸ்சையும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். மண்ணின் மைந்தன் அவர்களுடைய இருக்கையை கடந்து சென்று கொண்டிருந்தார். உடனே அவர்களில் இருவர் மூன்றாவதாக தனியாக இருந்த‌ ஒருவரிடம் கைகளை தட்டி கிண்டலடித்து கொண்டார்கள். அவருக்கு அருகில் என்னுடைய இருக்கை இருந்தது. பசங்கள் மட்டும் அல்ல பெண்கள் கூட தன் அருகில் யார் அமர்ந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பார்கள் போலும்.  பின்னர் என் அருகில் அமர்ந்திருந்தவரிடம் பேசியதில் அவர்கள் அனைவரும் கல்லூரி மாணவிகள் என்றும் கலாச்சார பரிமாற்றம் பற்றி தெரிந்துகொள்வதற்காக ஐரோப்பாவில்(ஜெர்மன் என்று நினைக்கிறேன்) இருந்து ஷிஞ்சுவில் உள்ள ஒரு பல்கலைகழகத்திற்கு வந்ததாக சொன்னார்கள். விமானம் மேல் எழும்ப தொடங்கியது. பையன் லஞ் டிரேயை விரித்துவைத்து, விமான சிப்பந்தியிடம் ஜூஸ், ஜூஸ் என்று கேட்க ஆரம்பித்தான்.


முற்றும்.


Wednesday, December 14, 2016

காண்டா விளக்கு 3 - உமா சங்கர் IAS

அப்பொழுது நான் திருவாரூரில் ஒரு கூட்டுறவு வங்கிக்காக வேலை செய்துகொண்டிருந்தேன். தினமும் மதிய உணவுக்கு பின்னர் வங்கியின் பின்பக்கம் லோன் செக்சனில் சென்று சிறிது அரட்டை அடிக்கும் பழக்கம் இருந்தது. அப்படி ஒருநாள் லோன் செக்சனில் நின்று கொண்டிருக்கும் பொழுது அசிஸ்டண்ட் மேனஜர் ஒருவர் வந்து கலெக்டர் வந்திருக்கிறார். உதவி செய்லாலர் உங்களை கூப்பிடுகிறார், உடனே வாருங்கள் என்றார்அன்றைய தினம் பொது செயலாலர் விடுப்பில் இருந்தார். நான் செல்லும் பொழுது துனை செயலாலர் வெளியே அறைவாசலில் இருந்தார். கலெக்டர் கம்பியூட்டர் சம்பந்தமாக ஏதோ கேள்வி கேட்கிறார். எங்களுங்கு தெரியவில்லை. நீங்கள் பதில் சொல்லுங்கள் என்று என்னை அறைக்குள் கிட்ட தட்ட தள்ளிவிட்டார்.

திருவாரூர் தனி மாவட்டமாக மாறும் பொழுது அதன் முதல் கலெக்டராக திரு உமா சங்கர் IAS அவர்கள் நியமிக்கபட்டார். அவர் எதற்கு இந்த நேரத்தில் இங்கு வந்திருக்கிறார் என்று எண்ணிக்கொண்டே உள்ளே சென்றேன்.

பின்னாடியே வந்த துனை செயலாலர் இவர் தான் எங்கள் வங்கியின் கணிப்பொறியாலர் என்று என்னை அறிமுகப்படுத்தினார். என்னை எதிர்தார்போல் அமரச்சொன்னார். உடனே அமர்ந்துகொண்டேன். இத்தனைக்கும் துனை செய்லாலர் நின்று கொண்டே இருந்தார். எனக்கு அந்த வயதில் காலாட்டும் பழக்கம் இருந்தது. சைக்கலாஜிக்கல் படி உணர்சிவசப்பட்ட நிலையில் அதனை குறைப்பதற்காக ஒரு சில பேர் காலாட்டுவார்கள் என்று பின்னர் புத்தகத்தில் படித்திருக்கிறேன். பின்னாடி இருந்து ஒருவர் முதுகில் மெதுவாக கிள்ளி, காலை ஆட்டாதே என்று செய்கை செய்தார்.

அப்பொழுதைய திமுக அரசு, மகளீர் சுய உதவிக்குளுக்களை ஊக்குவித்த நேரம். அவர்கள் மகளீருக்கான ஒரு கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தார்கள். தினசரி வியாபரத்திற்கு செல்பவர்கள் கந்து வட்டி காரர்களிடம் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம். இத்திட்டத்தின் படி ஒருவருக்கு 100 ரூபாய் கடன் கொடுத்தால் தினசரி 1ரூபாய் விதம் 130 நாட்கள் வசூலிப்பார்கள். மகளீர் வங்கிக்கு வரவேண்டிய அவசியம் கூட இல்லை. வங்கியில் இருந்தே ஒருவர் போய் வசூல் செய்துவிட்டு வருவார். அருமையான திட்டம். மகளீர் தினமும் காலையில் கந்து வட்டிகார்களிடம் போய் நிக்க வேண்டிய அவசியம் இல்லை. மாலையில் சம்பாத்தியத்தில் பாதியை கந்துவட்டிகாரனுக்கு கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. முதலுக்கான பணம் கடன் திட்டம் மூலம் கிடைக்கும், தினமும் சம்பாத்தியத்தில் இருந்து 1 ரூபாய் கட்டினால் போதும். அன்றைய அரசாங்கம் இந்த திட்டத்தை நடைமுறை படுத்தி உண்ணிப்பாக‌ மேற்பார்வை செய்துகொண்டிருந்தது. அதற்கு தினமும் தேவையான தகவல்களை வங்கியில் இருந்து அரசாங்கத்திற்கு அனுப்ப வேண்டும்.

திருவாரூர் கலெக்டர் திரு உமாசங்கரிடம் ஒரு மென்பொருள் தயாரிக்கும் டீம் இருந்தது. அவர்கள் இந்த மகளீர் கடன் திட்டத்திற்கு ஒரு  மென் பொருள் தயாரித்திருந்தார்கள். நான் இருந்த வங்கி திருவாரூர், நாகப்பட்டணம், தஞ்சாவூர், மாயவரம், கும்பகோணம் பகுதியில் கனிணி மயமாக்களில் மிகவும் பெயர் வாங்கியது. அதனால் முதன் முதலில் நான் இருந்த வங்கியில் அதனை நிறுவி சோதித்து பார்க்கலாம் என்று வந்திருக்கிறார்கள்.

திரு உமாசங்கர் IAS அவர்கள் என்னிடம் ஒரு பிளாப்பியில் சாப்டவர் தருகிறோம். அதனை நிறுவி, டேட்டா இன்புட் செய்து தினமும் எங்களுக்கு டேட்டா அனுப்பவேண்டும் என்றார். நானோ அது ரொம்ப கஷ்டம் என்றேன். சுற்றி நின்ற வங்கி ஊழியர்களுகும், துனை செயலாலரும் கொஞ்சம் ஷாக் ஆகி என்னை பார்த்தார்கள். ஒரு கலெக்டர் சொல்லும் பொழுது சரி என்று சொல்லாமல் முடியாது என்று சொல்கிறானே என்று நினைத்தது அவர்கள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. ஆனால் கலெக்டர் முகத்தில் அதற்கான எந்த ரியாக்ஷனும் இல்லை. ஏன்ன கஷ்டம் என்றார்.

எங்களுடைய சாப்டவர் கோபாலில் எழுதியது. அவருடைய சாப்டவர் விஸ்வல் பேசிக் மற்றும் டேட்டா பேஸ் வைத்து எழுதியது. இரண்டு சாப்ட்வேரையும் லிங் செய்ய முடியாது என்று சொன்னேன். அதில் உள்ள நடைமுறை சிக்கல் மற்றும் வங்கி ஊழியர்களுக்கு ஏற்படும் வேலை சுமை அனைத்தையும் கூறினேன். அவர் அதனை புரிந்து கொண்டார். உங்களுக்கு எந்த பார்மெட்டில் தினசரி டேட்டா வேண்டும் என்று சொன்னால் அந்த பார்மெட்டில் தினமும் அனுப்புகிறென் என்று சொன்னேன். கடைசியில் நான் சொன்னதை ஒத்துக்கொண்டார்.

இதனை நான் ஏன் இவ்வளவு விரிவாக சொல்கிறேன் என்றால், அப்பொழுது நான் வயதில் அனுபவத்தில் எல்லாம் மிகவும் சிறியவன். பார்வைக்கு கூட மிகவும் ஒல்லியாக இருப்பேன். ஒரு பொடியன் நாம் சொல்வதை கேட்கவில்லை என்ற என்னம் எல்லாம் அவரிடம் இல்லை. நடைமுறை சிக்கல்களை சொன்னதும் புரிந்துகொண்டார். அவர்போனதும் வங்கியில் ஆளாளுக்கு என்னை காச்சி எடுத்தது தனிக்கதை. அதன் பின்னர் ஒருமுறை வங்கிக்கு வரும் பொழுது என்னிடம் ஒரு சில வார்த்தைகள் பேசி சென்றார்.

திருவாரூர் கலெக்டராக இருக்கும் பொழுது அவர் செய்தவை (எனக்கு தெரிந்தது)

1. நாம் இப்பொழுது மிக சுலபமாக எடுக்கும் கணினி பட்டா, சிட்டா எல்லாம் திரு உமாசங்கர் IAS மற்றும் அவருடைய டீமும் செய்த மென்பொருளில் தான். அதன் சோதனை ஓட்டம் முதன் முதலில் திருவாரூரில் தான் செய்தார்கள்.

2. சிலபல ஆண்டுகளாக தூர் வாராமல் இருந்த திருவாரூர் கமலாலயம் குளத்தை தூர் வாரினார். 4 வேலி அளவு உள்ளது அந்த குளம். அதன் உள்ளே இருந்த 21 கிணறுகளையும் தேடி கண்டுபிடித்து தூர் வாரவைத்தார்.

3. கமலாலயம் குளத்திற்கு நீர் வந்து/செல்லும் பாதைகளை ஆக்கிறமித்திருந்தார்கள். ஆக்கிறமிப்புகளை அகற்றி கொள்ளிடம் ஆற்று தண்ணீர் தங்கு தடையின்றி குளத்திற்கு வரச்செய்தார்.
 
3. இருபத்தோரு வருடங்கள் ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை சரிசெய்து ஓட வைத்தார். அதுவரை மரத்தினாலான சக்கரம் தான் தேருக்கு இருந்தது. இவர் அதனை இரும்பால் செய்து மாட்டினார்.

4. தேர் புறப்படுவதற்கு முந்தைய இரவு இரு சிறுவர்கள் குளிக்கிறேன் என்று கமலாலயத்தில் மூழ்கிவிட்டனர். அவர்கள் உடல் கிடைக்கும் வரைக்கும் குளத்தின் அருகிலே இருந்து தேடுதலை ஊக்கப்படுத்தினார். உடல் கிடைக்கும் பொழுது காலை 5மணி என்று சொன்னார்கள். ஆறுமணிக்கு தேரோட்டம் தொடங்க செய்தார்.

5. ஒரு முறை புயல் மற்றும் கடும் மழையில் ஆற்றில் நீர்வரத்து அதிகமாகி நீடாமங்கலம் பாலம் உடையப்போகிறது என்று கேள்விப்பட்டு நள்ளிரவில் ஒடிசென்று பார்வையிட்டு பாலம் உடையாமல் இருக்க‌ தேவையான நடவடிக்கைகளை எடுத்தார்.

6. சிறந்த மென்பொருள் டீம் ஒன்று வைத்து அரசாங்கத்துக்கான மென்பொருள் தயாரித்தார்.

இது எல்லாம் எனக்கு தெரிந்த செய்திகள். எனக்கு தெரியாமல் நிறைய இருக்கலாம். அவ்வளவு சிறந்த ஒரு ..பா அவர்களை நம்முடைய அரசாங்கம் சரியாக பயண்படுத்திக்கொள்ள வில்லை.

அவருடைய தற்பொழுதைய பேச்சுக்களை கேட்பவர்கள் இவர் ஒரு காமெடி பீஸ் என்றே நினைக்கிறார்கள். ஆனால் இவர் ஒன்றும் அப்படி சோடையான ஆள் இல்லை.  சுடுகாட்டு ஊழலை கண்டுபிடித்தார். நாம் இதற்கு முன்னர் உபயோகித்த தேர்தல் அட்டை தயாரிப்பிளும் அரசாங்கத்தின் சார்பில் இருந்தார் என்று நினைக்கிறேன்.

அடுத்து அமைந்த அரசாங்கம் அவருக்கு வேலை கொடுக்காமல் காத்திருப்பில் வைத்திருந்தது. மேலும் சில வழக்குகள் தொடுத்தார்கள். அதன் விரக்தியே அவருடைய தற்பொழுதைய நிலமைக்கு காரணம். 

எப்பொழுதாவது யோசித்திருப்பார் "நாம் ஏன் இந்த பாழாய்போன சுடுகாட்டு ஊழலை கண்டுபிடித்தோம்" என்று.

அரசியல் பங்காளிச் சண்டையில் பந்தாடப்பட்ட திறமையான ஒரு அதிகாரி.