தைவானின்
தென்மேற்கு கடற்கரையோரம் இருக்கின்ற அழகிய தீவுக்கூட்டத்தின் பெயர் பொங்கு. என்னுடைய தைவான் நண்பரிடம் முதன் முதலில் பேசும் பொழுது பென்ங்கு தீவு என்று உச்சரித்தேன். அவருக்கு சுத்தமாக புரியவில்லை. அப்படி ஒரு தீவே தைவானில் இல்லை என்றார். அதன் பின்னர் அவரிடம் மேப் எல்லாம் போட்டு காண்பித்ததும் அது பென்ங்கு அல்ல பொங்கு என்று திருத்தினார். நாமும் இனிமேல் பொங்கு என்றே உச்சரிப்போம்.
தைவான் நாடு இந்தியா போன்று பல தரப்பட்ட நாட்டினரால்
ஆளப்பட்டுள்ளது அதே போன்று பல தரப்பட்ட நாட்டினர்
இங்கு வியாபார நிமித்தமாக தங்கியோ அல்லது கடந்தோ சென்றிருக்கிறார்கள. அவர்களுள் போர்த்துக்கிசியர்கள் இந்த தீவுக்கூட்டத்திற்கு வைத்த பெயர் பெஸ்காடொரெஸ். இதற்கு மீனவர்கள் தீவுக்கூட்டம் என்று அர்த்தம். இந்த பெயர் நாளடைவில் திரிந்து பொங்கு ஆக மாறிவிட்டது. இந்த
தீவுக்கூட்டத்திலே பெரிய தீவு மாக்கோங் தீவு. கிட்டதட்ட இத்தீவுக்கூட்டத்தின் தலைநகரம் போன்றது. இங்கு தான் விமான நிலையம் மற்றும் முக்கியமான நிர்வாக அலுவலங்களும் இருக்கிறது. இந்த தீவை ஒட்டி 5 தீவுக்கள் இருக்கின்றன். அவை அனைத்தையும் சிறிய பாலங்கள் மூலம் இனைத்திருக்கின்றனர். இவை அனைத்தையும் சேர்த்தே மாக்கோங் என்று அழைக்கிறார்கள். இதனை சுற்றி அங்காங்கு சிறிய தீவுகள் இருக்கின்றன. அவை அனைத்தும் மாக்கோங் நகரத்தின் கண்கானிப்பிலே இருக்கிறது.
பொங்கு
தீவுக்கூட்டத்திற்கு செல்ல இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று ஆகாய மார்க்கம், விமானநிலையம் இருக்கின்ற அனைத்து நகரங்களிலிருந்தும் மாக்கோங்கிற்கு உள் நாட்டு விமானம் இருக்கிறது. தைபேயிலிருந்து சுமார் 45 நிமிடம் முதல் 1 மணி நேரம் எடுக்கின்றது. இன்னொன்று கடல் வழிப்பயனம். கெளஸ்யோங், தைனான், சியாயி துறைமுகத்தில் இருந்து பயனிகள் கப்பல் செல்கின்றது. 4 முதல் 6 மணி நேரத்தில மாக்கோங் துறைமுகத்தை அடைந்துவிடலாம். பயனிகள் கப்பலை சீதோசன நிலையை பொருத்தே இயக்குகிறார்கள். தைவானின் கிழக்கு பக்கம் பசிபிக் பெருங்கடலும் மேற்கு பக்கம் சீனக்கடலும் இருப்பதால் எப்பொழுது வேண்டும் என்றாலும் கடல் கொந்தளிப்பு மற்றும் கடல் சீற்றம் ஏற்படலாம். அப்படியாகப்பட்ட நேரத்தில் கப்பல் பயணத்தை முற்றிலும் நிறுத்திவிடுகிறார்கள். கடல் கொந்தளிப்பு அடங்கிய பிறகே மீண்டும் போக்குவரத்தை ஆரம்பிக்கிறார்கள்.
2011 ஆம்
ஆண்டு செப்டம்பர் மாதம் இத்தீவுக்கூட்டதத்திற்கு செல்லலாம் என்று முடிவு செய்ததும் அதற்கான ஆயத்தப் பணிகள் செய்ய ஆரம்பித்தோம். முதலில் தங்கும் விடுதி தேட ஆரம்பித்தோம். தைவான் நண்பன் Pescadores என்ற ஹோட்டலில் முயற்சி செய்ய சொன்னான். அகோடா மூலம் அதனை முன்பதிவு செய்தேன். இங்கு எந்த ஹோட்டல் புக் செய்தாலும் இரண்டு பேருக்கு ஒரு மோட்டார் பைக் கொடுத்துவிடுகிறார்கள். நாம் அதனை அங்கு இருக்கும் வரை உபயோகித்துக்கொள்ளலாம். அடுத்து கூகுளாண்டவர் உதவியுடன் ஏதாவது உணவகம் இருக்கிறதா என்று தேட ஆரம்பித்தோம். மெக்டோனால்ட் இருக்கிறது. ஆனால் இங்கு மெக்டோனால்டில் சைவம் கிடைக்காது. மேலும் தேடியதில் ஹோட்டலில் இருந்து சிறிது தூரத்தில் ஒரு டொமினாஸ் பிஸ்ஸா இருந்தது. மேலும் 7/11 ஒரிரு இடங்களில் இருந்தது. ஓரளவுக்கு சைவம் கிடைக்கும் என்ற நிலை வந்ததும் உணவு பற்றிய கவலை ஒழிந்தது.
முதல்
நாள் காலை 7:30 மணிக்கு தைபேயில் விமாணம் ஏறி மாக்காங் போய் இறங்கினோம். ஹோட்டலில் இருந்து அழைத்துச்செல்ல வேன் வந்திருந்தது. எங்களோடு மேலும் இரு குடும்பம் சேர்ந்துகொண்டது. ஹோட்டல் செக்கின் முடிந்து, அறைகளில் பெட்டிகளை வைத்துவிட்டு அன்றைய சுற்றுலாவினை ஆரம்பித்தோம். எனக்கு ஹோட்டலில் இருந்து ஒரு 50 சிசி வண்டி கொடுத்தார்கள். உள்ளூர் ஓட்டுனர் உரிமம் வைத்திருந்தால் 100 முதல் 125 சிசி வரை கொடுக்கிறார்கள். எங்களுடைய அன்றை திட்டம் மாக்கோங் தீவு கூட்டத்தை சுற்றிப்பார்ப்பது. ஏற்கெனவே சொன்னது போல் இது 5 பெரிய தீவுகளை கொண்டது.
முதலில்
மாக்கோங்கை அடுத்து இருக்கும் ஒரு சிறிய தீவில் இருக்கும் மீன் காட்சிசாலைக்கு செல்வதாக திட்டம். மாக்கோங் தீவிலிருந்து ஒரு பாலம் மூலம் இந்த தீவு இனைக்கபட்டிருக்கிறது. ஹோட்டலில் இருந்து செல்லும் பொழுது நடுவில் வந்த நான்கு வழிப்பதையில் கவனக்குறைவாக வேறு பாதையை தேர்ந்தெடுத்து ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று விட்டோம், பாதை மாறிவிட்டது. ஒரு அம்மா வண்டியில் வந்துகொண்டிருந்தது. அவருக்கு ஆங்கிலம் புரியவில்லை. என்க்கு தெரிந்த ஒரிரு வார்த்தைகளை கூறி, வரைபடத்தில் இருந்த பாலத்தை காண்பித்து இங்கு போக வேண்டும் என்று கூறினோம். அவர் கையோடு எங்களை அழைத்து சென்று பாலம் தொடங்கும் இடத்தில் விட்டு சென்றார். அவருக்கு ஒரு நன்றியை சொல்லிவிட்டு எங்கள் பயனத்தை தொடர்ந்தோம்.
பொங்கு மீன்
காட்சிசாலையானது மிகச்சிறியது. 1997 ஆம் ஆண்டு கடல்வாழ் உயிரின ஆராய்ச்சிக்காக ஆரம்பிக்கப்பட்டது.
சிறிய மீன் இனங்கள் மட்டுமே அங்கு இருந்தன. ஒரு அரை மணி நேரத்தில் அதனை பார்த்துவிட்டு
வெளியே இருந்த கடையில் சில நினைவு பொருட்கள் வாங்கி விட்டு அடுத்த தீவுக்கு சென்றோம்.
அடுத்து பெய்சா
தீவுக்கு சென்றோம். வழியில் பாலத்தின் வழியாக கடலை கடந்து சென்றோம். காற்று மிக பலமாக
வீசியது. சில நேரங்களில் வண்டியை தள்ளவும் செய்தது. பெய்சா தீவில் 300 வருட பழமையான ஆலமரத்தடியில் ஒரு புத்தர் கோவில் இருக்கிறது. பரந்து
விரிந்த ஆலமரம். சுமார் 100 விழுதுகள் நிலத்தில் ஊன்றியிருக்கிறது என்றால் அதன் பரப்பளவு
எவ்வளவு இருக்கும் என்று நினைத்துபாருங்கள். அத்தனை விழுதுகளும் நிலத்தில் ஊன்றி மரம்
போன்றே காட்சி தருகிறது. அதற்கு எதிர்த்தார்போல்
மீன் பிடி துறைமுகம். அதன் உள்ளே வண்டியில் சென்று சில நிழற்படங்கள் எடுத்துக்கொண்டோம்.
பெய்சா தீவிற்கும்
ஷியூ தீவிற்கும் இடைப்பட்ட தூரம் சுமார் இரண்டரை கிலோ மீட்டர். கடல் வழிபாலம் மூலம்
இனைத்திருக்கிறார்கள். இதனை பொங்கு கடல்பாலம் என்று அழைக்கிறார்கள். இதனை 1965 ஆம்
ஆண்டு கட்ட ஆரம்பித்து 1970ல் முடித்திருக்கிறார்கள். சுற்றுலா பயனிகள் இங்கு இறங்கி
சாலையின் நடுவில் நின்று பாலத்தினை புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். மேலும் பாலத்தின்
நடுவில் சில கண்கானிப்பு பகுதிகள் இருக்கின்றது. அதில் சுற்றுலா செல்வோர் அதன் அருகில்
வண்டியை நிறுத்திவிட்டு பாலத்தில் கடல் வந்து மோதுவதை நின்று கவனிக்கலாம். மேலும் பாலத்தின்
தொடக்கத்தில் ஒரு சில கடைகள் இருக்கின்றன. அவற்றில் ஏதாவது வாங்க வேண்டும் என்றாலும்
வாங்கிக்கொள்ளலாம்.
இத்தீவில்
பாறை மடிப்புகள்(basalt) அங்காங்கே கடற்கரையோரமாக இருக்கின்றன. இயற்கையே உளிகொண்டு
பாறைகளை செதுக்கி அடுக்கி வைத்தது போன்று இருக்கிறது. இங்கு செல்வதற்கு இருசக்கர வாகனத்துக்கு
மட்டுமே பாதைகள் இருக்கிறது.
மணி ஐந்தை
நெருங்க ஆரம்பித்துவிட்டது. ஷியூ தீவின் கடைசியில் ஒரு கலங்கரை விளக்கு இருக்கிறது.
அந்த இடம் ஒரு ராணுவ தளத்திற்குள் இருக்கிறது. சுற்றிலும் ராணுவ கண்கானிப்பில் இருக்கும்
இடம். மாலை 5 மணிக்கு மேல் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது. எப்படியாவது
5 மணிக்குள் அங்கு செல்ல வேண்டும் என்று பிரயத்தனம் செய்தேன். அங்கு செல்லும் பொழுது
5.10 மணி. அனுமதி கிடையாது என்று சொல்லிவிட்டார்கள். நான் இந்த தீவை பார்க்க இந்தியாவில்
இருந்து வந்திருக்கிறேன் என்று கப்சா எல்லாம் விட்டு பார்த்தேன். முடியவே முடியாது
என்று அங்கிருந்த வாயிலோன் கூறிவிட்டான். பக்கத்தில் ஒரு பாதையை காண்பித்து இதுவழியாக
போய் வெளிப்பக்கம் பார்த்துக்கொள் என்றான். பாதையின் இரு பகுதியிலும் சப்பை கற்றாழை
செடி. அடிமேல் அடிவைத்து மெதுவாக அந்த இடம் சென்றோம். சூரியன் மேற்குலகிற்கு செல்ல
ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். இளம் ஆரஞ்சு சுடர் சிறிது சிறிதாக மறைந்து இருள் பரவ ஆரம்பித்தது.
அங்கிறிந்து வெளியேற ஆரம்பித்தோம்.
அருகிலே மக்கள்
குடியிருப்பு ஒன்று இருந்தது. அதில் ஒரு 7/11 கடை இருப்பது போன்று தட்டி வைத்திருந்தார்கள்.
காப்பி / டீ குடித்துவிட்டு செல்லலாம் என்று அங்கு வண்டியை திருப்பினோம். அந்த மக்கள்
குடியிருக்கும் பகுதி ரோட்டில் இருந்து சுமார் 10 மீட்டர் பள்ளத்தில் இருந்தது. சாலை சரிவாக இருந்ததால் இலகுவாக
இறங்கிவிட்டோம். ஓய்வெடுத்துவிட்டு சாலைக்கு வரலாம் என்றால் எங்களுடைய வண்டியால் ஒரு
ஆளை வைத்து கூட மேலே ஏறமுடியவில்லை. 10 மீட்டர் தள்ளி மேலே ஏற்றுவதற்குள் குடித்த காப்பி
எல்லாம் ஜீரணமாகிவிட்டது.
இதுவரை சுமார்
40 கிலோ மீட்டர் தூரம் சுற்றிவந்துவிட்டோம். மீண்டும் இரவில் 40 கிலோமீட்டர் சிறு குழந்தையை
கையில் வைத்துக்கொண்டு வண்டியில் செல்ல வேண்டும். சாலையில் வெளிச்சம் கூட கிடையாது.
மாக்கோங் தீவிற்குள் பாலத்தை தாண்டி நுழைந்ததும் மீண்டும் சந்தேகம் எந்த பாதையை தேர்ந்தெடுப்பது
என்று. குத்துமதிப்பாக ஒரு பாதையை தேர்ந்தெடுத்து சென்றோம். வழியில் ஒருவரிடம் விசாரித்ததில்
போகும் பாதை சரிதான், இன்னும் சிறிது தூரம் செல்லவேண்டும் என்றார். சிறிது தூரத்தில்
டொமினாஸ் பிஸ்ஸா பதாகை தெரிந்தது. "கொலைப்பசி", இரை கண்ட புலி போல் எங்களுடைய வண்டி பிஸ்ஸா கடையை நோக்கி ஓடியது.
article is very nice
ReplyDelete