Wednesday, June 29, 2016

கம்போடியா ‍- 5, அங்கோர்வாட் - கமிர் சாம்ராஜ்யம் (Cambodia, Khmer Kingdom)


 
விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட மகிழுந்து நேராக நுழைவுசீட்டு கொடுக்கும் இடத்திற்கு வந்தது. நுழைவுச்சீட்டு இருந்தால் மட்டுமே ஒரு சில கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கிறார்கள். ஒரு நாளைக்கான கட்டணம் 20 அமெரிக்க டாலர். மூன்று நாட்களுக்கு 40$ மற்றும் ஒரு வாரத்திற்கு 60$. மேலும் பணம் செலுத்தியதும் நம்மை புகைப்படம் எடுத்து அதனையும் நுழைவுச்சீட்டில் பிரிண்ட் செய்து கொடுக்கிறார்கள். முன்னர் இந்த வழக்கம் இல்லையாம். சீன, ஜப்பான் மற்றும் கொரியாவில் இருந்து வரும் சுற்றுலா குழுக்கள் ஐம்பது பேர் வந்தால் 20 சீட்டு மட்டுமே வாங்கிக்கொண்டு சுழற்சி முறையில் ஒவ்வொரு கோவிலாக பார்த்துவிட்டு வருவார்களாம். அதனை தடை செய்ய புகைப்படத்துடன் கூடிய நுழைவுசீட்டை கொடுக்கிறார்கள். அதன் ஒரு பக்கம் அங்கோர் கோவிலும் இன்னொரு பக்கம் நம்முடைய புகைப்படமும் இருக்கிறது. ஞாபகார்த்தமாக பத்திரப்படுத்தி கூட வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு கோவிலின் முகப்பிலும் பாதுகாவல‌ர்கள் புகைப்படத்தோடு  நம்மை ஒப்பிட்டு பார்த்தே உள்ளே செல்ல அனுமதிக்கிறார்கள்.

தாஃப்ராம் நுழைவுவாயில்
நுழைவு சீட்டை வாங்கியதும் முதலில் சென்ற கோவில் தா ப்ராம்(Ta Prohm). இதற்கு பரப்பிரம்மம் என்று அர்த்தம். பிரம்மாவுக்காக கட்டப்பட்ட கோவிலாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த கோவில் 7ஆம் ஜெயவர்மனால் அவருடைய தாயார் நினைவாக கட்டப்பட்டது என்று சொல்கிறார்கள். தந்தையின் நினைவாக ஒரு கோவில் "பிரியக் கான்" (Royal Sword) வேறு ஒரு இடத்தில் கட்டியிருக்கிறார். இந்த கோவில் தான் மழைக்காடுகளால் சூழப்பட்டு காட்சியளிக்கிறது. மரங்களின் வேர்கள் ஆக்டபஸ் போன்று கட்டிடத்தை கவ்விப்பிடித்து சுற்றி இருக்கி உடைத்துள்ளன. ஒரு சில மரத்தின் வேர் கட்டிடத்தில் இருப்பது மிகப்பெரிய மலைப்பாம்பு இரையை விழுங்கி அசைவற்று படுத்து கிடப்பது போன்று இருக்கின்றது.  இக்கோவிலில் ஒரு சில இடங்கள் எப்பொழுது வேண்டுமென்றாலும் இடிந்துவிழலாம் என்பதால் பெரும்பான்மையான இடங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. இக்கோவில் ஜப்பான் அரசாங்கத்தின் உதவியுடன் புனர் நிர்மானம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

ஆதுரசாலை ‍- மருத்துவமனை
இக்கோவிலின் முகப்பிற்கு அருகில் ஒரு கட்டிடம் இடிந்து கிடக்கிறது. அதனை ஆதுர்சால் என்று சொல்கிறார்கள். இதற்கு ஆதுர சாலை என்று அர்த்தம், அந்த காலத்து மருத்துவமனை. ஏற்கெனவே சொன்னது போன்று சில வார்த்தைகள் தமிழ் போன்றே இருக்கிறது. ஆனால் அவைகள் பழைய பாலி / சமஸ்கிருத கலப்பாக இருக்கலாம். ஒரு சிலையை காண்பித்து இதனை "கால" என்று சொன்னார். நானும் காலனை அப்படி சொல்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர் காலம் என்று சொன்னார். இன்னும் அப்பகுதி மக்கள் மீனை "மச்ச" என்று தான் சொல்கிறார்களாம். ஆமையை தசாவதார பெயரான கூர்ம என்று தான் சொல்கிறார்களாம்.
மரத்தின் வேர் பாம்பு படுத்திருப்பது போன்ற காட்சி
இக்கோவிலில் ஒரு சிறிய அறைக்கு அழைத்துசென்று என்னை கையை தட்ட சொன்னார். கைதட்டும் ஓசை கேட்டது. அடுத்து இதயம் பகுதியில் நம்முடைய கையால் மெதுவாக தட்ட சொன்னார். மெதுவாக தட்டினால் ம்ம்ம்ம் என்ற அதிர்வில் ஒரு எதிரொலி கேட்க/உணர‌ முடிகிறது. பல முறை சோதித்து பார்த்தேன். இதயம் பகுதியில் மெதுவாக தட்டும் பொழுது மட்டுமே அந்த அதிர்வை உணர முடிகிறது. என்னே! நம் முன்னோர்களின் கட்டடக்கலை அறிவு. நாம் இப்பொழுது அதன் அருகில் கூட செல்லமுடியாது என்றே நினைக்கிறேன்.
துவாரங்கள் உடைய சுவர்
கோவிலின் இன்னொரு அறையின் சுவர் முழுவதும் குறிப்பிட்ட இடைவெளியியில் சிறிய துவாரம் இருக்கிறது. இந்த துவாரங்களில் வைர வைடூரியங்கள் பதித்திருக்கலாம். பின்னர் ஏற்பட்ட மத சண்டையிலும் போர்களிலிலும் இந்த வைர வைடூரியங்கள் திருடு போயிருக்கலாம் என்று நம்ப்பப்படுகிறது. இந்த அறையில் 7ஆம் ஜெயவர்மன் தாயார் சம்பந்த பட்ட ஏதாவது இருந்திருக்கலாம் என்றும் நம்பிக்கை இருக்கிறது.


கோவிலை விட்டு வெளியேவரும் பொழுது ஒரு மரத்தை காண்பித்தார். இந்த மரத்தின் பிசினைதான் இன்றும் சில பழங்குடியின மக்கள் சுளுந்தாக(பந்தமாக) வெளிச்சத்திற்கு உபயோகிக்கின்றார்கள் என்றார். அங்கெல்லாம் மின்சார உபயோகம் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்றார். மேலும் இந்த பிசின் எடுக்கும் கலையை எனக்கு சொல்லிக்கொடுத்தார். அந்த மரத்தின் பட்டையை சிறிது வெட்டி எடுத்துவிட்டு சிறிது நெருப்பை கொண்டு தீச்சிவிட்டால் சிறிது நேரத்தில் மரத்தில் இருந்து பிசின் வழிகிறது. பழங்குடியினர் அதனை எடுத்து சேகரித்து வைத்துக்கொள்வார்களாம். மேலும் இந்த பிசினை மெழுகு போன்றும் உபயோகிக்கின்றனர்.
அங்கோர் தோம் நுழைவுவாயில்

அங்கோர் தோம் நுழைவுவாயில் கோபுரம்

அடுத்து சென்ற இடம் அங்கோர் தோம்(Great City). கிமீர் அரசாங்கம் அங்கோர் பகுதிக்கு இடப்பெயற்ச்சி செய்யும் பொழுது கடைக்கால் போட்ட இடம் அங்கோர் தோம் தான். அரசாங்கத்தை மீண்டும் அங்கோர் பகுதிக்கு மாற்றிய பெருமை இரண்டாம் ராஜேந்திரவர்மனையே சேரும். அங்கோர் தோமின் நுழைவு வாயிலே பிரமாண்டமாக இருக்கிறது. நான்கு பக்கமும் மனித முகத்துடன் கோபுரம் உயர்ந்து நிற்கின்றது. அதன் இரண்டு பக்கமும் வாசுகி பாம்பு படம் எடுத்து நிற்கின்றது. அதன் ஒரு பக்கம் தேவர்களும் அடுத்த பக்கம் அசுரர்களும் நின்று அதனை பிடித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
Elephant Terrace
அதனை தாண்டி உள்ளே சென்றால் முதலில் நமக்கு கண்ணில் படுவது கோட்டை சுவர். இதனை “Elephant Terrace” என்று சொல்கிறார்கள். அங்கங்கே மூன்று யானைகள் இந்த கோட்டையை தாங்கிக்கொண்டிருப்பது போன்று செதுக்கி வைத்திருக்கிறார்கள். அதனால் யானை டெரஸ் என்று பெயர் வந்திருக்கலாம். இந்த கோட்டை சுவர் அப்படி ஒன்றும் உயரமானதாக இல்லை. ஆனால் கோட்டை சுவரின் மீது ஒரு வண்டி தாராளமாக போகும் அளவிற்கு இடம் இருக்கிறது. மேலும் இதன் முன்புறம் உள்ள திறந்த வெளியில் நடக்கும் வீர விளையாட்டுக்களை அரச பரம்பரையினர் அமர்ந்து ரசிக்கும்  இடமாக இருக்கின்றது. கம்போடியாவில் மன்னர்கள் ஏர் பிடித்து உழுவது போன்ற சடங்கு இன்றும் வருடத்திற்கு ஒரு முறை நடைபெருகிறது. அந்த காலத்தில் அந்த சடங்கு இந்த திறந்த வெளியில் நடந்திருக்கலாம் என்று வழிகாட்டி கூறினார்.
இந்த கோட்டை சுவரின் இன்னொரு முனையில் ஒரு மன்னரின் சிலை சிறிது சிதிலமடைந்திருக்கிறது. இதனை முதன் முதலில் பார்த்தவர் இந்த மன்னருக்கு தொழுநோய் வந்திருக்கலாம் என்று LEPER KING என்று அழைத்திருக்கிறார்கள். இன்றும் அந்த சிலை அதே பெயராலே வழங்கப்படுகிறது. அந்த இடமானது மன்னர் பரம்பரையில் யாராவது இறந்துவிட்டால் நீத்தார் கடன் செய்யும் இடமாக இருக்கலாம். அதன் கீழே இரண்டு அறைகள் இருக்கிறது. அந்த அறை இடிந்துவிட வாய்ப்பு இருப்பதால் திறக்கவில்லை. அதனை சுற்றி நிறைய கற்சிலைகள் செதுக்கி வைத்திருக்கிறார்கள். தெய்வங்கள், குடியானவர்கள், அரக்கர்கள், நாகம் என்று வித விதமாக செதுக்கி வைத்திருக்கிறார்கள். நிதானமாக பார்வையிட்டால் 2 மணி நேரம் கூட ஆகலாம். அதன் வெளிப்புறமாக ஒரு சிலையை காண்பித்து இது காலன்(எமன்) என்று சொன்னார். எமன் வித்தியாசமாக நாகத்தின் மீது உட்கார்ந்திருந்தார். மேலும் இந்த கோட்டையில் அந்த காலத்து விளையாட்டுக ளை செதுக்கிவைத்திருக்கிறார்கள்.

பிமியனாகாஷ்
கோட்டைக்குள்ளே பிமியனாகாஷ் என்ற கோவில் இருக்கிறது. இது சிவன் கோவிலாக இருந்திருக்கலாம். இக்கோவில் ராஜேந்திரவர்மனால் கட்டப்பட்டது. அரசாங்கத்தினர் மட்டும் வழிபடும் கோவிலாக இருந்திருக்கலாம். தற்பொழுது கோவிலின் உள்ளே செல்ல அனுமதியில்லை. அங்கோர் பகுதியில் இருக்கும் இந்த கோவில் மட்டும் வித்தியாசமாக இருந்தது. அனைத்து கற்களும் செந்நிறமாக பொரிகற்கள் போன்று இருந்தது. இந்த கற்கள் அந்த பகுதியை சேர்ந்தது இல்லையாம். சுமார் 100 கிமீ தொலைவில் இருந்து கொண்டு வந்திருக்காலாம் என்று நம்புகிறார்கள்.  இந்த கோட்டைக்குள் இருந்த அரண்மனை அழிந்திருக்கலாம். பக்கத்திலே இரண்டு குளங்கள் இருக்கிறன. ஒன்று ஆண்களுக்கு மற்றது பெண்களுக்கு என்று வழிகாட்டி சொன்னார். ஆனால் பாருங்க ரெண்டுமே அடுத்தடுத்து இருக்கிறது. எதுக்கு இப்படி ஆண் பெண் என்று ரெண்டு வெட்டிவச்சாங்க என்று தெரியவில்லை.
Bayon - ஜெய விகார்
கோட்டைக்கு அருகிலே ஒரு உணவு வளாகம் இருக்கிறது. அங்கு அருமையான மதிய உணவு முடித்து பக்கத்தில் இருந்த அடுத்த கோவிலுக்கு சென்றோம். இந்த கோவிலை ஜெய விகார் என்று வழிகாட்டி சொன்னார். அவர்கள் மொழியில் “Bayon” என்று அழைக்கிறார்கள். போரில் வெற்றி பெற்றதனை கொண்டாடுவதற்காக கட்டப்பட்ட கோவில் இது.
கோபுரமுகம்

வெற்றியை குறிக்க ஜெய என்றும், 7ஆம் ஜெயவர்மன் புத்த மதத்தவர் என்பதால் புத்த விகாரமாக கட்டியதாலும் ஜெய விகார் என்று அழைத்திருக்கிறார்கள். இக்கோவிலின் அனைத்து கோபுரங்களும் நான்குபக்கமும் சிரித்த முகத்துடன் காட்சி தருகிறது. மொத்தம் 49 கோபுரங்கள் கட்டியதாகவும் தற்பொழுது 37 கோபுரங்களே அதிக சேதாரம் இல்லாமல் இருப்பதாகவும் கூறினார். ஒவ்வொரு கோபுரத்திலும் நான்கு முகங்கள் இருக்கிறது. சுமார் 200 முகங்கள். வெளிப்பக்க கோபுரமானது முகங்கள் சிரிப்பதுபோலிருந்தாலும் இக்கோபுரங்களானது ஒற்றை கல்லில் செய்தது அல்ல. கற்களை ஒன்றின் மீது ஒன்று அடுக்கி வைத்து கட்டியிருக்கிறார்கள். மேலும் அப்படி அடுக்கும் பொழுது முக அமைப்பை வெளிப்புறம் செதுக்கி வைத்து அழகுகுலையாமல் அடுக்கியிருக்கிறார்கள். இந்த முகங்கள் அனைத்தும் கோபுரத்திற்கு ஏற்றுவதற்கு முன்னரே செதுக்கி முடித்திருக்க வேண்டும். அப்படி என்றால் எவ்வளவு நுணுக்கமாக வேலை செய்திருக்க வேண்டும். 

கோபுரத்தின் உட்புரகட்டுமான அமைப்பு
மேலும் இக்கோபுரத்தின் உட்புரம் கூம்பு வடிவில் பிரமீட்டில் கற்களை அடுக்கியது போன்று இருக்கும். பிரமீட்டின் உள்ளிருந்து பார்த்தால் உட்புரம் கூம்பு வடிவில் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் இங்கு உட்புறகற்கள் சரியாக செதுக்காததால் ஒழுங்கற்ற வடிவில் தெரிகிறது. ஆனால் கிட்ட தட்ட பிரமீடு தொழில்நுட்பத்தை தான் அவர்களும் உபயோகித்திருக்க வேண்டும். முதலில் புத்த விகாரமாக கட்டினாலும் பிற்பாடு இந்து கோவிலாக மற்றம் பெற்றிருக்கிறது. உள்ளே ஒரு சில அறைகளில் சிவலிங்கத்தின் ஆவுடை மட்டும் பெரியதாக இருக்கிறது. அதிலிருந்த லிங்கங்கள் அதன் பின்னர் வந்த புத்த மன்னர்களால் உடைத்தெரியப்பட்டுள்ளது. இக்கோவிலின் ஒரு இடத்தில் இருந்து பார்த்தால் மூன்று கோபுரங்கள் ஒரே நேர்கோட்டில் பார்க்கலாம். மற்ற இடங்கள் எல்லாம் அதிகபட்சம் இரண்டு முகங்கள் மட்டுமே ஒரே பார்வையில் காணக்கிடைக்கும்.

சிவலிங்கத்தின் அடிப்பாகம் - ஆவுடை

முக்கியமான அங்கோர் கோவிலுக்கு சூரியன் மேற்கில் சாயும் வேளையில் சிறிது தாமதமாகவே வந்து சேர்ந்தோம். மாலையில் தான் இங்கு வரவேண்டும் என்று காலையிலே முடிவெடுத்திருந்தாலும் (அப்பொழுதுதான் கோவிலின் பிம்பம் குளத்தில் தெரியும்), மற்ற கோவில்களில் அதிகமான நேரம் நான் செலவிட்டதால் தாமதமாகவே வந்து சேர்ந்தோம். என்னுடைய வழிகாட்டி நேரே உள்ளே செல்லலாம் என்று என்னை அவசரப்படுத்தி வழியில் என்னை நிற்க விடாமல் அழைத்து சென்றார். ஏன் இவ்வளவு அவசரப்படுத்துகிறார் என்று நினைத்துக்கொண்டே சென்றேன். உள்ளே போய் பார்த்தால் இரண்டு வரிசையில் மக்கள் நின்று கொண்டிருந்தார்கள். இந்த கோவிலில் மட்டுமே மேலே கோவிலினுள் சென்று பார்க்க அனுமதியிருக்கிறது. அதுவும் ஒரு நேர்த்தில் 100 நபர்கள் மட்டுமே கோவிலின் மேல் பகுதியில் அனுமதிக்கிறார்கள். மொத்தம் 100 டோக்கன் ஒருவர் வந்து டோக்கனை கொடுத்ததும் அடுத்த நபரிடம் டோக்கனை கொடுத்து அனுப்புகிறார்கள். மிகவும் பழைய கோபுரம் என்பதால் வத வத என்று ஆட்களை அனுப்புவதற்கு பயப்படுகிறார்கள். கோபுர தளம் கிட்டதட்ட 10 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இரும்பு கம்பிகளை கொண்டு ஏணி அமைத்திருக்கிறார்கள். இந்த கோவிலில் மேலே செல்ல பெண்கள் சிலீவ் லெஸ் ஆடை அணிந்து செல்ல அனுமதியில்லை. பக்கத்திலே மெல்லியதாக ஒரு சட்டை வாடைக்கு கிடைக்கும். அதனை அணிந்து மேலே சென்று வெளியே வந்ததும் கொடுத்துவிடவேண்டும். மேல் தளத்தில் அங்கேங்கே பார்வைமாடம்(balcony) இருக்கிறது. அங்கிருந்து கோவிலின் ஒவ்வொரு பகுதியையும் ரசித்து பார்க்கலாம். இக்கோவிலானது இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்டது. இதனை விஷ்ணுவிற்காக கட்டியிருக்கிறார். பின்னர் ஏற்பட்ட மத சண்டையில் அதனை முழுவதுமாக புத்தர் கோவிலாக மாற்றிவிட்டார்கள். கோவிலின் நடுவே இருக்கும் கருவரையில் நின்ற நிலையில் ஒன்றும் அடுத்த பகுதியில் படுத்த நிலையில் ஒன்றுமாக இரண்டு புத்தர் சிலை இருக்கிறது. ஆஞ்சனேயர் உருவமும் ராமன் லட்சுமணன் உருவங்களும் சுவரில் செதுக்கி வைத்திருக்கிறார்கள். ஒரு சில இடங்களில் அதனை கூட சுரண்டி முகங்களை சிதைத்து வைத்திருக்கிறார்கள். கீழே இற‌ங்கும் பொழுது அந்தி சாய ஆரம்பித்துவிட்டது. இன்னும் அதிகமான‌ வரிசையில் ஆட்கள் நின்று கொண்டிருந்தார்கள்.
அங்கோர் கோவில்
இக்கோவில் சுவரில் ராமாயணம் மற்றும் மஹாபாரத்தக்கதைகள் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை சுவர் சிற்பமாக செதுக்கி வைத்திருக்கிறார்கள். ஒட்டு மொத்தமாக பார்க்கும் பொழுது கொச கொச என்று ஒன்றின் மீது மற்றொன்று என்று சிற்பங்கள் இருக்கின்றன. ஆனால் பொறுமையாக பார்த்தால் வித்தியாசமான நிறைய சிற்பங்கள் பார்க்க முடிகிறது. அர்சுனன் ஒரே நேரத்தில் மூன்று அம்புகளை எய்வது போன்ற ஒரு சிற்பம், அம்படி பட்டு படையினர் வீழ்ந்து கிடப்பது, பீஷ்மர் அம்பு படுக்கையில் கிடப்பது தேரில் சென்று போர் புரிவது, வெற்றிக்கொண்டாட்டம் என்று வித விதமாக செதுக்கியிருக்கிறார்கள். சுவரின் இன்னொரு பக்கத்தில் கிமீர் அரசருக்கும் மற்ற மன்னர்களுக்கும் நடந்த சண்டைகள் பற்றிய வரலாற்றை செதுக்கியிருக்கிறார்கள். அதில் தெளிவாக இந்த கோவிலை கட்டியது சூரியவர்மன் என்று எழுதியிருக்கிறார்கள். இவ்வளவு பெரிய கோவிலை எத்தனை வருடங்கள், எவ்வளவு சிரமப்பட்டு கட்டியிருப்பார்கள் என்று நினைக்கும் பொழுது பிரமிப்பாக இருந்தது

மூங்கில் குடுவையில் பதனீர்
கோவில் வளாகத்தில் நிறைய பனைமரம் இருக்கிறாது. அதில் மூங்கில் குடுவை கட்டி பதனீர் இறக்குகிறார்கள். கப் ஒன்று ஒரு அமேரிக்க டாலர். மாலை நேரத்து பதனீர் மிகவும் சுவையாக இனிப்பாக இருந்தது. பனை ஏறுவதற்கு ஏணியை உபயோகிக்கிறார்கள். நம் ஊரை போன்றே சுண்ணாம்பு உபயோகிக்கிறார்கள். வெளி வளாகத்தில் சில நீர் பிரதிபளிப்பு படங்கள் எடுத்துவிட்டு கோவிலை விட்டு வெளியேரும்பொழுது இருள் கவிழ ஆரம்பித்தது. அங்கோர் பகுதியை இன்றும் பழமைமாறாமல் அப்படியே வைத்திருக்கிறார்கள் அதனால் அங்கு மின் விளக்குகள் கிடையாது. எவ்வளவு சீக்கிரம் பார்த்துவிட்டு வெளியே வருகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது.

பத்னீர் விற்கும் பெண்மனி

உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் அங்கோர் பகுதியை ஒரே நாளில் பார்ப்பது என்பது யானை வாய்க்கு சோளப்பொரி போடுவது போன்றது. பொறுமையாக பார்க்க வேண்டும் என்றால் அங்கோர்  பகுதிக்கு மட்டும் குறைந்தது ஒரு வாரம் வேண்டும். பக்கதில் 100 கிமீ தூரத்தில் இன்னொரு கோவில் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஏரியை பார்ப்பதற்கு ஒரு நாள் என்று எடுத்துக்கொண்டாலும் 10 நாட்களாவது அங்கு தங்கி அமைதியாக பொறுமையாக ஒவ்வொன்றையும் பார்த்து ரசிக்கலாம். மேலும் நாம்பென்லிருந்து அங்கோருக்கு சாலைவழியாக வந்தால் வழியில் நிறைய இடங்கள் பார்க்கலாம் என்று சொன்னார்கள். மேலும் பழைய தலைநகரத்தில் கூட நிறைய புரதான கோவில்கள் இருக்கிறது என்று வலைதளத்தில் படித்தேன். யாரேனும் சுற்றுலா செல்ல நினைத்தால் இதனை எல்லாம் மனதில் கொண்டு பயணத்திட்டம் போடுங்கள்.
என்னுடைய விமானம் இரவு 8 மணிக்கு தான். அங்கோரில் ஒரு இரவுசந்தை இருக்கிறது என்றார்கள். பயண நேரம் மட்டும் 1 மணி நேரம் ஆகும் என்றார்கள். ரிஸ்க் எடுக்கவேண்டாம் என்று முடிவு செய்து மகிழுந்தை விமான நிலையத்திற்கே செலுத்த சொன்னேன். அங்கோர் விமானநிலையத்தில் சம்பத்திடம் விடைபெற்று கொண்டு புரதான கால நகரத்தை விட்டு பிரிய மனம் இல்லாமல் விமானநிலையத்திற்குள் செல்ல ஆரம்பித்தேன்


          முற்றும்.

No comments:

Post a Comment