Wednesday, March 9, 2016

கம்போடியா -3, நாம் பென் (Cambodia - Phnom Penh)

   கம்போடியாவின் மிக முக்கியமான நீராதாரங்களில் மேக்காங் ஆறும் ஒன்று. உலகின் மிக நீளமான ஆறுகளில் 12 ஆம் இடத்தில் இருக்கிறது, ஆசியாவில் ஏழாம் இடத்தில் உள்ளது. இதனுடைய தொடக்கம் திபெத்தியன் பீடபூமி. சீனாவில் இருந்து புறப்பட்டு மியான்மர்(பர்மா), லாவோஸ் மற்றும் தாய்லாந்து நாடுகளின் வழியாக ஓடி கம்போடியாவினுல் நுளைகிறது. கம்போடியாவின் குறுக்காக ஒடி வியட்நாமின் கோசிமின் பகுதி வழியாக சுமாராக 4350 கிலோமீட்டர் தூரம் கடந்து சீனக்கடலில் கலக்குறது. இதனுடைய துனை ஆறுகள் எல்லாவற்றிலும் இருந்து வந்து சேருகின்ற நீரினால் எப்பொழுதும் நிறைந்து ஓடுகின்றது. இந்த ஆற்றில் சிறிய அளவினால் ஆன சரக்கு கப்பல்கள் செல்கின்றது. லாவோஸ், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் கம்போடியா சேர்ந்து கூட்டமைப்பு ஏற்படுத்தி இதனை செய்கிறார்கள். இரவில் கூட இந்த ஆற்றின் வழியாக கப்பல்கள் செல்வதை பார்க்க முடிகிறது.
மேக்காங் ஆற்றில் செல்லும் சரக்கு கப்பல்

   கம்போடிய மன்னரின் அரண்மனை மேக்காங் ஆற்றின் கரையோரமாக இருக்கிறது. தலைநகர் நாம்பென் அதனை சுற்றியே கட்டமைக்கப்பட்டுள்ளது. அரண்மனையை சுற்றிலும் கேளிக்கை விடுதிகள் இரவு விடுதிகள் மற்றும் உணவகங்கள் என்று ஒரு சுற்றுலா மையம் போல் வைத்திருக்கிறார்கள். அரண்மனை காலை 8 மணிக்கு திறந்து மாலை 5 மணிக்கு மூடிவிடுகிறார்கள். அரண்மனையில் இன்னும் மன்னர் பரம்பரையினர் வசிக்கின்றனர். உள்ளே சென்று அரண்மனையின் சில பகுதிகளை பார்வையிடலாம். நுளைவுக்கட்டனம் 3USD புகைப்படக்கருவியை கொண்டு செல்ல 2USD. நேரம் ஒத்துழைக்காமையால் உள்ளே சென்று பார்க்கமுடியவில்லை. நம் ஊரினை போன்றே அரண்மனைக்கு முன்னர்  மன்னரின் நிழற்படத்தினை கட்டவுட் போன்று  பிரமாண்டமாக வைத்து மின் விளக்குகளால் அலங்கரித்திரிக்கிறார்கள். அரண்மனை முகப்பு வாயில் கோபுரத்தில் தற்பொழுதைய ராணியின் படம் அலங்கரிக்கிறது. அரண்மணை பக்கத்திலே அருங்காட்சியகமும் இருக்கிறது.

மன்னரின் நிழற்படம் அலங்கார வளைவு
அரண்மனை முகப்பு வாயில்
  கம்போடியாவில் நிறைய பனைமரம் இருக்கிறது. அரண்மனை வளாகத்திற்குள்ளும் சில மரங்கள் நிற்கின்றன. நம் ஊராக இருந்தால் வெட்டி போட்டிருப்பார்கள். ஆனால் அரண்மனையில் உள்ள மரத்தின் மத்திய பகுதியில் வலை போன்ற ஒரு இரும்பு அமைப்பை வட்டமாக மாட்டிவைத்திருக்கிறார்கள். பனை மரத்தில் இருந்து எது விழுந்தாலும் அந்த வலையில் மட்டுமே விழும். தகுந்த பாதுகாப்பு செய்து பனை மரத்தை வெட்டாமல் வைத்திருக்கிறார்கள். வாழ்க கம்போடியா...!

அரண்மனை வளாக பனைமரமும் அதில் உள்ள இரும்பு வலை அமைப்பும்

  ஆற்றங்கரையிலே சிறிது தூரம் நடந்துவந்தால் இரண்டு பேர் குதிரையில் செல்வது போன்ற சிலை இருக்கிறது(Techo Meas and Techo Yot Statue). இவர்கள் இருவரும் 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டின் சிறந்த கம்போடிய தளபதிகள். அவர்களின் நினைவாக கம்போடிய அரசு இந்த சிலையை வடிவமைத்திருக்கிறார்கள். அதை தாண்டி சிறிது தூரம் சென்றால் உன்னலும் கோவில்(WAT unnalom) ப‌கோடா இருக்கிறது. எல்லா கோவிலும் காலை 8 முதல் மாலை 5 வரைக்குமே திறந்திருக்கின்றன.
Techo Meas and Techo Yot Statue
 
WAT unnalom
   அப்படியே ஆற்றங்கரையை விட்டு சிறிது உட்பக்கமாக சென்றால் இரவு சந்தை இருக்கிறது. கம்போடியாவில் இரவு சந்தை மாலை 6 மணிக்கு கூடி இரவு 10 மணியோடு முடிகிறது. நாங்கள் செல்லும் பொழுது நடுவில் இருந்த மேடையில் சந்தைக்கு வந்திருந்த கம்போடியன் ஒருவர் பாடிகொண்டிருந்தார். யார் வேண்டும் என்றாலும் போய் பாடலாம். இங்குள்ள சந்தையில் துணிகள் தான் அதிகம் இருக்கிறது.
இரவு சந்தை

தாய்சீ ஸ்வார்ட் பயிற்சி செய்யும் வெளிநாட்டவர் ‍- மேக்காங் ஆற்றங்கரை
     கம்போடியாவில் இருந்த வரையிலும் உணவுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. அரண்மனையை சுற்றிலும் ஐந்துக்கும் அதிகமான இந்திய உணவகங்கள் இருக்கிறது. அனைத்து உணவகங்களும் பொதுவான ஒரு வலைதளத்தில் தங்களுடைய உணவு வகைகளை விலையோடு பட்டியலிட்டிருக்கிறார்கள். அதனை பார்த்து தொலைபேசி வழியாக நமக்கு தேவையானவற்றை பட்டியலிட்டால் போதும் அடுத்த அரை மணிக்குள் நம்மை தேடி வந்து கொடுக்கிறர்கள். குறைந்த பட்சமாக 5USD-க்கு ஆர்டர் இருக்க வேண்டும். நான் எப்பொழுதும் "வணக்கம் இந்தியா" என்ற உணவகத்திலே ஆர்டர் செய்தேன். அதன் முதலாளி ஒரு மலையாளி, தமிழும் பேசுவார். அதனால் என் தேவைகேற்ற மாதிரி சுவையில் மாற்றம் செய்து கொடுத்தார்.
நாம்பென் அருங்காட்சியகம்


  தலைநகர் நாம்பென்னில் ஒரு இடம் இருக்கிறது. அது ஒரு கொலைக்களம். அங்கு போனால் நிறைய மண்டை ஓட்டை பார்க்காலாம். சுமார் 2 மில்லியன் (20 லட்சம்) மக்களை கொலைசெய்த புதைத்த இடம். இப்பொழுது காட்சியகமாக மாற்றிவைத்திருக்கிறார்கள். இதை பற்றிய கதையை நண்பர் சீதா சொன்னார். கம்போடியாவில் ஏழை குடும்பத்தில் பிறந்த "போல் பாட்" என்பவர் ஃப்ரான்சு நாட்டிற்கு படிக்க செல்கிறார். அங்கு கம்யூனிசத்தின்பால் ஈர்ப்பு ஏற்பட்டு நான்கைந்து பேர் சேர்ந்து ஒரு அமைப்பை ஏற்படுத்துகிறார்கள். படிப்பு முடிந்து நாட்டிற்கு திரும்பிய போல் பாட் அரசியலில் ஈடுபடுக்றார். ஒரு கட்டத்தில் அவர்கள் தங்களுக்கு வேண்டாதவர்களை கடத்தி கொலைசெய்கிறார்கள். சிறிய அளவில் ஆரம்பித்த இந்த நிலை நாளைடைவில் வளர்ந்து தனிப்பட்ட விரோதத்தில் இருந்தவர்களையும் கடத்தி கொலைசெய்கிறார்கள். மேலும் பக்கத்து நாட்டில் இருந்து வந்து கம்போடியாவில் இருந்தவர்களையும் குறிப்பாக வியட்நாம், லாவோஸ், சீன மக்களை இனவழிப்பு செய்திருக்கிறார்கள். இந்த விளையாட்டு சுமார் 5 ஆண்டுகாலம் நடந்திருக்கிறது. மன்னரின் நண்பரும் நாட்டின் தளபதியுமாக இருந்தவர் இந்த கலவரத்தை திறம்பட அடக்கி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறார். பின்னர் அவரையே பிரதமராக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அப்படி கொலை செய்து மொத்தமாக புதைத்த இடத்தை தற்பொழுது அகழாராச்சி செய்து மண்டையோடுகளை எடுத்து அடுக்கி வைத்திருக்கிறார்கள். வலைதளத்தில் "killing fields cambodia" என்று தட்டச்சு செய்து தேடினால் நிறைய படங்கள் வருகிறது.

   அந்த கொலைகளத்தை போய் பார்க்கலாம் வாங்க என்று இளங்கோ அழைத்தார். ஊருக்கு வெளியே இருக்குற சுடுகாட்டு பக்கம் போகனுமின்னாலே ஒரு தடவைக்கு பத்துதடவ யோசிப்பேன். 20 லட்சம் பேரை கதற கதற கொன்று புதைத்த இடத்துக்கு போறதுக்கு எனக்கு என்ன தலையெழுத்தா! முடியாதுன்னு சொல்லிட்டேன்.


என்னோட டார்கெட்ல இருந்தது ஆங்கர் வாட் மட்டுமே.

No comments:

Post a Comment