சியம் ரியப்(Siem
Reap), இந்த பெயரை கேள்விபட்டிருக்கிறீர்களா?. அங்கோர் வாட் என்றதும் நமக்கு உடனே கம்போடியா
என்பது நினைவுக்கு வந்துவிடும். அங்கோர்வாட் கோவில் இந்த சியம் ரியப் நகரத்தில் தான்
இருக்கிறது. இந்த கோவிலுக்கு பெயர்வைக்கும் பொழுது பிற்காலத்தில் இந்த பகுதியே அங்கோர்வாட்
என்று தான் அழைக்கப்படபோகிறது என்று கடுகளவு கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்.
சியம் ரியப் என்பதற்கு அர்த்தம் "defeat of Siem". சியாமீஸ் என்பவர்கள் தாய்லாந்து
நாட்டவர்கள். அவர்களுடன் அடிக்கடி யுத்தம் நடந்து கொண்டே இருந்திருக்கிறது. அதனால்
இந்த இடத்தை சியம் ரியப் என்று அழைத்திருக்கிறார்கள். அதற்கேற்றார் போல் சியம் ரியப்
ஆனது தற்பொழுதைய தாய்லாந்தின் எல்லை பகுதிக்கு அருகிலேயே இருக்கிறது.
தற்பொழுதைய தலைநகர்
நாம்பென்னில் இருந்து சியம் ரியப் சுமார் 320 கிலோ மீட்டர் தூரம். எனக்கு கிடைத்ததோ
சனிக்கிழமை ஒரே ஒரு நாள் மட்டுமே. ஞாயிறு காலையில் எனக்கு தைவான் விமானத்தை பிடிக்கவேண்டும்.
முதலில் சாலை வழியாக சென்று வரலாம் என்று நானும், சீதாவும் விசாரிக்க ஆரம்பித்தோம்.
எல்லோருமே 100 USD கேட்டார்கள். ஆனால் ஒருவழி பயணம் மட்டுமே குறைந்தது ஆறிலிருந்து
ஏழு மணி வரை ஆகும் என்றார்கள். வழியில் சாலை ரொம்பவும் மோசமாக இருக்குமாம். காலையில்
11 லிருந்து 12 மணிக்குள் கொண்டுபோய் சேர்த்துவிடுவோம் என்றார்கள். இது சரிப்பட்டுவராது
என்பதால் விமானத்தில் போய்வரலாம் என்று விசாரித்தால் ஹோட்டலில் 200USD கேட்டார்கள்.
சீதாவின் நண்பர் ஒரு டிராவல் ஏஜென்ஸி நடத்துகிறார். அவர் போய்வர மொத்த கட்டணமுமே
90USD க்குள் முடித்துகொடுத்தார். காலை 7:30-க்கு விமானம், 50 நிமிட பயணம். இரவு 8 மணிக்கு திரும்புவதற்கு விமானம். அங்கு எல்லா
இடங்களையும் சுற்றி காட்டுவதற்கு ஒரு வழிகாட்டி. அங்கோர்வாட்டில் வழிகாட்டுவதற்கு மட்டும்
பதிவுசெய்யப்பட்டவர்களின் என்னிக்கை மூவாயிரத்திற்கும் அதிகமாம். வழிகாட்டி செல்வதற்கு
கார், வேன், மற்றும் டுக் டுக் என்று பிரித்துவைத்திருக்கிறார்கள். அதற்கேற்ப்ப கட்டணமும்
மாறுபடும். அவரவர் வசதிக்கு தகுந்தபடி ஏற்பாடு செய்துகொள்ள வேண்டியது தான். என்னுடன்
வரப்போகிற வழிகாட்டியின் பெயரை இரண்டு நாட்கள் முன்னரே எனக்கு சொல்லிவிட்டார்கள். பெயர்
சம்பத். பெயரை கேட்டவுடனே ஒரு தமிழன் நமக்கு வழிகாட்டியாக வரப்போகிறார் போலும் என்று
நினைத்துக்கொண்டேன்.
கம்போடியாவின்
ஏரிகளிலே மிகப்பெரியது "டோன்லே சப்" (Tonle Sap) ஏரி. இதற்கு பெரிய நன்னீர் ஏரி என்று அர்த்தம்,
சுமாராக 120 கிமீ நீளமுள்ளது. நான் சென்ற விமானம் இந்த ஏரியின் மீது மட்டும் சுமார்
15 நிமிடங்கள் பறந்தது. விமானத்தில் இருந்து பார்தாலே ஏரியை முழுவதுமாக பார்க்கமுடியவில்லை.
மேக்காங்க் ஆறு கூட இந்த ஏரியில் வந்து சேர்ந்து பின் வழிந்து செல்கிறது. நிறைய கால்வாய்கள்,
பாசன வாய்க்கால்கள் என்று கிளை கிளையாக பிரிந்து செல்வதை காணலாம். இந்த ஏரியில் மீன்பிடித்தல்,
படகு வீடுகள், படகு சந்தைகள் என்று ஒரு சுற்றுலாமையமே இயங்குகிறது என்று வழிகாட்டி
சம்பத் சென்னார். சியம்ரியப்லிருந்து 50 கிமீ தூரத்தில் இருக்கிறது. முடிந்தவர்கள்
சென்று வரலாம்.
டோன்லே சப் ஏரியின் ஒரு பகுதி விமானத்தில் இருந்து எடுத்தது |
விமானம் தரையிரங்கும்
சமயத்தில் பின்பக்கமாக இருந்த ஒருவர் என்னை பார்த்து சிரித்தார். தமிழர் மாதிரி இருந்தது.
அதனால் அவரிடம் போய் நலம் விசாரித்தேன். அவருடைய பெயர் விசாகன், தொல்லியல் மற்றும்
மானுடவியல் ஆராய்ச்சியாளர். லண்டனில் வசிக்கும் ஈழத்தமிழர். அவரை வரவேற்க்க வெளியே
ஒரு சென்னை தமிழர் நின்று கொண்டிருந்தார். அவருடைய பெயர் ஞான சேகரன். சியம் ரியப் பகுதியில்
சீனு-ஞானம் என்ற பயனிகள் சேவை நிறுவனம் வைத்து நடத்திக்கொண்டிருக்கிறார்.
ஒரு முறை நித்யானந்தா தன்னுடைய சிஸ்யர்களுடன் (சுமார் 300 பேர் என்றார்) வந்தாராம்
அதனை ஒழுங்குபடுத்தி கொடுத்தது அவர் தான் என்றும் சொன்னார். முடிந்தால் இரவு சந்திக்கலாம்
என்றார்கள். இரவு நான் திரும்புகிறேன் என்று அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டேன்.
சம்பத் விமான நிலையத்தில்
வந்து என்னை வரவேற்றார். அச்சு அசல் கம்போடியன். மருந்துக்கு கூட தமிழ் வாடையில்லை.
"உனக்கு தமிழ் தெரியுமா. உன்னுடய பெயர் தமிழ் பெயராக இருக்கிறதே" இப்படித்தான்
எங்களுடைய சம்பாசனை ஆரம்பித்தது. இல்லை நான் சுத்தமான கம்போடியன் என்றார். கிமீர் அரசர்களின்
மூதாதையர்கள் தமிழர்கள் அல்லாவா என்று என்னுடைய அடுத்த கேள்வியை தொடுத்தேன்.
கம்போடிய வரலாற்று
ஆவனங்களின்படி கமிர் வம்சத்தவர்கள் சுத்தமான அக்மார்க் கம்போடியர்களே. அவர்கள் தமிழகத்தில்
இருந்தோ சோழ தேசத்தில் இருந்தோ வந்தவர்கள் அல்ல. ஆனால் கமிர் வம்சமானது இந்தியர்கள்
போன்ற இந்து மரபை கொண்டது. அவர்கள் பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்ற இந்து கடவுள்களை
வழிபட்டிருக்கிறார்கள். கம்போடியாவில் சில வார்த்தைகள் தமிழ் வார்த்தைகள் போன்றே உச்சரிக்கபடுகின்றது.
ஆனால் அதனை ஆராய்ந்து பார்த்தால் அவைகள் தமிழிலும் கலந்த்துவிட்ட சமஸ்கிருதம் அல்லது
பாலி மொழியாக இருக்கலாம். அவர்கள் அது சம்ஸ்கிருதம் என்று சொல்கிறார்கள். இக்காலத்திலும்
இந்து பெயர்களை தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டுகின்றார்கள். அனால் இந்து வழிபாட்டுமுறை
முற்றிலுமாக இல்லை.
கமிர் வம்சமானது
2ஆம் நூற்றாண்டில் இருந்து இருப்பதாக நம்பப்பபடுகிறது. கிட்ட தட்ட ஆதி சோழர்கள் கால
கட்டம்தான். ஆனால் அதற்குறிய வரலாற்று ஆவனங்கள் இருப்பது போன்று தெரியவில்லை. அதன்
பின்னர் ஓரளவு கமிர் சாம்ராஜ்யம் பெயர் அடிபடுவது 8 ஆம் நூற்றாண்டிற்கு பின்னரே. இரண்டாம்
ஜெயவர்மன் பெயர் தான் ஆரம்பத்தில் இருக்கிறது. கமிர் சாம்ராஜ்யத்தில் ஜெயவர்மன் பெயர்
திரும்ப திரும்ப வருகிறது. எட்டாம் ஜெயவர்மன் வரைக்கும் இருக்கிறது. ஆட்சிசெய்த அரசர்களில்
மிகவும் வலிமையான அரசர்கள் என்றால் இரண்டாம்
சூர்யவர்மன் மற்றும் 7ஆம் ஜெயவர்மன்.
7ஆம் ஜெயவர்மன் |
தற்பொழுதைய வியட்நாம்,
தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா நாடுகளை உள்ளடக்கிய மிகப்பெரிய சாம்ராஜ்யம் கிமீர்.
அந்த காலக்கட்டத்தில் சுமார் 25 மாகணங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இவைகள் அவ்வப்போது
தனிநாடாக அல்லது சுதந்திர நாடாக சண்டை போட்டுக்கொன்டே இருந்திருக்கின்றன. இவைகளை அடக்கி
ஆண்டது இரண்டாம் சூர்யவர்மனும் 7ஆம் ஜெயவர்மனும் மட்டுமே. இருவருமே தனித்தனியாக 30
முதல் 40 ஆண்டுகாலம் ஆட்சிசெய்திருக்கிறார்கள். 8ஆம் ஜெயவர்மன் காலத்திலே வழிமை குன்ற
தொடங்கிவிட்டது. ஒரு பக்கம் உள்நாட்டு கலவரம். இன்னொரு பக்கம் மங்கோலிய சீன அரசாங்கத்தின்
மிரட்டல் காரணமாக மங்கோலிய அரசுக்கு வரி(திறை) கட்ட சம்மதிக்கிறார். அதன் பின்னர் முதலில்
லாவோஸ் தனி நாடாகுகின்றது. அதன் பின்னர் தற்பொழுதைய வியட்நாமின் ஒரு பகுதி அதாவது வட
வியட்நாமின் ஹனாய் மற்றும் அதன் சற்றுப்புற மாகாணங்கள். இதன் தென்பகுதியான வியட்நாமின்
ஹோசிமின் பகுதியானது இரண்டாம் உலகப்போருக்கு பின்னரே விட்டுக்கொடுக்கப்படுகிறது. கடைசியாக
தாய்லாந்த். ஆனாலும் தாய்லாந்தோடு கடைசிவரை சண்டை போட்டுக்கொண்டே இருக்கின்றனர். அந்த சண்டையில் அங்கோர்வாட்டின் பெரும் பகுதி அழிந்துவிடுகிறது.
வேறு வழியில்லாமல் 15ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தற்பொழுதைய தலைநகரான நாம்பென்னிற்கு
தலைநகரை மாற்றுகின்றார்கள்.
ஒருங்கினைந்த கமிர் சாம்ராஜ்யம் |
அதன் பின்னர் அங்கோர் வாட் பகுதியானது தகுந்த பராமரிப்பின்றி கிடக்கிறது. அதற்காக அங்கே யாருமே இல்லை
என்று அர்த்தமில்லை. அங்கு மக்கள் வசிக்கிறார்கள். பராமரிப்பின்மை காரணமாக மேலும் அங்கிருக்கின்ற
கோவில்கள் அனைத்தும் மழைக்காடுகளால்(Rain Forest)
சூழப்படுகிறது. வெளித்தொடர்பு முற்றிலும் இல்லாமல் இருக்கின்றது. ஒருகட்டத்தில்
கம்போடியா பிரன்ஸின் ஆதிக்கத்தில் காலனிநாடாக மாறுகிறது. 1860 ஆம் ஆண்டு பிரான்ஸை சேர்ந்த
ஹென்றி முஹாட் அங்கர் வாட் பகுதியை சுற்றி பார்க்க வருகிறார். அப்பொழுது அங்கோர் கோவிலின்
பிரமாண்டத்தை பார்த்து அதனை ஓவியமாக வரைகிறார். (அவர் வரைந்த ஓவியங்கள் இனையதளத்தில்
இருக்கிறது). அதனை வெளியிடும் போழுது மீண்டும் அங்கோர் வாட் மீது உலகத்தின் பார்வை
பதிகிறது.
பொதுவாக இனையதளங்களில்
காட்டிற்குள் இருந்த அங்கோர்வாட் கோவிலை ஹென்றி முஹாட் கண்டுபிடித்தார் என்றுதான் எல்லோரும்
பதிவுசெய்கிறார்கள். ஆனால் அங்கோர்வாட் பகுதியில் அங்குள்ள ஆதி கமிர் பழங்குடியின மக்கள்
வசித்துவந்திருக்கிறார்கள். அவர்களுடைய வெளித்தொடர்பும் குறைவானதே. அதனால் அங்கோர்வாட்
பற்றிய செய்தி பரவவில்லை. வெளிநாட்டவர் ஒருவர் அதனை ஓவியமாக வரைந்து பரவலாக்கியிருக்கிறார். அதன்பின்னரே நிறைய அன்னிய மக்கள் அங்கு சென்றுவர
தொடங்கியிருக்கிறார்கள். தற்பொழுது பல நாட்டு அரசாங்கங்களும் பணவுதவி செய்து அங்கிருக்கும்
கோவில்கள் அனைத்தையும் புனர் நிர்மானம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
கமிர் அரச பரம்பரையில்
ஒரு பெயர் ராஜேந்திரவர்மன் என்று வருகிறது. 10ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர். அவர் பற்றி
மேலதிக தகவல் ஏதும் இல்லை என்று வழிகாட்டி சொல்லிவிட்டார். அதனால் அவர் தமிழரா அல்லது
கம்போடியரா என்று தெரியவில்லை. கமிர் அரசபரம்பரையிலே நிறைய தாயாதி, பங்காளி சண்டைகள்
நடந்திருக்கிறது. பெண்வழி அரச உரிமை இருந்திருக்கிறது. அதிலும் அதன் சேனாதிபதிகள் அரசர்களை
கொன்று அரசாட்சி செய்திருக்கிறார்கள். அவர்களும் தங்களை கமிர் அரச பரம்பரை என்று தான்
சொல்லியிருக்கிறார்கள். அதனால் சில அரசர்களின் பிறப்பு பற்றிய தகவல்கள் சரியாக கிடைக்கவில்லை.
இப்படி நடந்த தாயாதி சண்டைகளில் சில நேரங்களில் தமிழக மன்னர்கள் தலையிட்டு சமாதனம்
செய்திருக்கிறார்கள் அல்லது ஒருவருக்கு சாதகமாகவும் நடந்திருக்கிறார்கள்.
மேலே பதிவுசெய்தது
அனைத்தும் என்னுடைய வழிகாட்டி என்னுடன் பகிர்ந்துகொண்டவை. அதாகப்பட்டதாவது கம்போடிய
அரசாங்கம் அங்கோர்வாட் வழிகாட்டிகளுக்கு கற்றுக்கொடுத்த கமிர் வரலாறு.
புகைப்பட உதவி : கூகுள்