Sunday, August 2, 2015

கம்போடியா -1, நாம் பென் (Cambodia - Phnom Penh)

 அலுவலக வேலை நிமித்தமாக ஒரு வார காலம் கம்போடிய தலைநகரில் தங்கும் வாய்ப்பு கிடைத்தது.  கம்போடியா என்ற பெயரை கேட்டதும் உடனே நமக்கு நினைவுக்கு வருவது ஆங்கர் வாட் தான். இதுவரைக்கும் அதோட தலைநகர் பெயர் என்ன என்று கூட தெரியாது. வலைத்தளத்தில் தான் தேடினேன். Phnom Penh என்று வந்தது. எப்படி உச்சரிச்சாலும் தப்பாவே உச்சரிக்கிறமாதிரி இருந்தது. ரிஸ்க் எடுக்க வேண்டாம். நேரடியா கம்போடியா போய் அங்கேயே எப்படி உச்சரிக்கிறது என்று கேட்டுக்களாம் என்று முடிவு செய்திருந்தேன். இந்திய தூதரகத்தில் வேலை பார்க்கும் நண்பரிடம்  கம்போடியாவிற்கு ஒரு வார காலம் அலுவலக வேலை விசயமாக போக வேண்டியது இருக்கிறது என்றவுடன். "நாம் பென்" க்கா போகிறீர்கள் என்று கேட்டார். ஒகோ அந்த பெயரை இப்படித்தான் உச்சரிக்கனுமா என்று நினைத்துக்கொன்டே வெளியே காண்பித்துக்கொள்ளாமல் ஆமாம் அங்கேதான் போகிறேன் என்று சொல்லிவிட்டேன். 
'நாம் பென்' விமான நிலையம்


 ஒரு ஞாயிறு மதியம் 'நாம் பென்' விமான நிலையத்தில் போய் இறங்கியாகிவிட்டது. இந்தியர்களுக்கு அங்கு போய் இறங்கியதும் கடவு சீட்டு(விசா) வாங்கும் வசதியிருக்கிறது. 30 அமெரிக்க டாலர். 30 நாட்கள் தங்குவதற்கு அனுமதி கொடுக்கிறார்கள். சன்வே ஹோட்டலில் தான் தங்க வைக்கப்பட்டிருந்தேன். நேர் எதிராக பச்சை பசேல் என்று அமேரிக்க தூதரகம். நான்கு மூலையிலும் துவாரபாலகர்கள் நின்று கொண்டிருந்தார்கள். எந்த நாட்டில் சென்று அமெரிக்க தூதரகத்தை பார்த்தாலும் இந்த காட்சி மட்டும் மாற்றம் இருக்காது என்று நினைக்கிறேன். உள்ளே நிறைய பனை மரம் அதுவும் முறையாக வளர்தது போன்று கட்டம் போட்டு அதற்குள்ளே இருந்தது. பனைமரம் உயரமாக வளரக்கூடிய மரம். மழை பெய்து மின்னல் தாக்கினால் உடனே தீ பற்றி எரியக்கூடியது. அதனால் ஊருக்குள் பனைமரம் வளர்க்கும் வழக்கம் தமிழகத்தில் கிடையாது. ஆனால் கம்போடியாவில் எங்கெங்கு நோக்கினும் பனைமரம் கண்ணுக்கு தெரிந்தது.பக்கத்திலே ஒரு பகோடா. உயரமாக இருந்தது. ஒரு முறை போய் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன்.
அடைமழைக்கு முன்னர்

 ஏற்கெனவே அங்கு தங்கியிருந்த அலுவலக நண்பர்கள் பிற்பகல் 2 மணிக்கு ரஷ்யன் சந்தைக்கு அழைத்து செல்வதாக சொல்லியிருந்தார்கள். அடை மழை பெய்ததால் புறப்படுவதற்கு 4 மணி ஆகிவிட்டது. கன்னடியன் வங்கியில் வேலை செய்யும் உள்ளூர் நண்பர் சீதா எங்களை தன்னுடைய மகிழுந்துல் அழைத்துசென்றார். சீதா என்ற பெயரை அவரோட தாத்தா பாட்டி தேர்ந்தெடுதார்களாம். கம்போடிய மக்கள் நிறைய இந்திய பெயர் சூட்டுகிறார்கள். ஹோட்டல் ரிசப்சனிஸ்ட் பெயர் கூட ஷிவா. முப்பது சதவிகித மக்களின் முகங்கள் கிட்ட தட்ட தமிழர்கள் முக அமைப்பிலே இருக்கிறது. போகும் வழியில் ஒரு  பெண்மனியின் சிலை நின்று கொண்டிருந்தார். ரொம்பவும் புகழ்வாய்ந்த பெண். இவரோட பெயர் பென்(Penh) என்றார். அதற்கு மேல் அவருக்கு விபரம் தெரியவில்லை. ஒருவாரம் கழித்து ஆங்கர் வாட்டில் என்னுடைய வழிகாட்டி ஒருவர் அதனை விவரித்தார். மகிழுந்து ரஷ்யன் சந்தைக்கு செல்லுவதற்குள் பென் விவகாரம் என்ன என்று பார்த்துவிட்டு வந்துவிடுவோமா!


 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தற்பொழுதைய  ‘நாம் பென்’ தலைநகராக இல்லை. சிற்றூராக இருந்திருக்கலாம். அங்கு ஒரு வசதிபடைத்த, நல்ல பெயரெடுத்த ஒரு பெண்மனி இருந்திருக்கிறார். அவருடைய பெயர் பென்(Penh). சுற்று வட்டார மக்கள் அவர் சொல்லுக்கு மறு பேச்சு பேசுவதில்லை. ஒரு நாள் மேக்காங் ஆற்றுப்பகுதியில் சென்றுகொண்டிருந்த போது பரந்து விரிந்த அரசமரம் ஒன்றின் நடுவே வெண்கலத்தால் ஆன நான்கு புத்தர் சிலைகளை கண்டெடுத்திருக்கிறார். இதனை மலை போன்ற உயர்ந்த இடத்தில் வைத்து பூஜை செய்ய வேண்டிய சிலைகள் என்று முடிவெடுத்த பென், மனித சக்தியை கொண்டு சிறிய குன்றை செயற்கையாக உருவாக்கி அதன் மீது கோவிலை கட்டி வைத்திருக்கிறார். அந்த கோவிலோட பெயர் 'வாட் நாம்'. கம்போடிய மொழியில் வாட் என்றால் கோவில், நாம் என்றால் குன்று என்று அர்த்தம்.
'வாட் நாம்' - Wat Phnom


  15ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசியல் உட்பூசல் மற்றும் அண்டை நாடுகளிடையேயான தொடர்ந்த சண்டையின் காரணமாக 'கமிர்' அரசாங்கமானது தன்னுடைய தலைநகரை சிம் ரிப்(ஆங்கர் வாட்)ல் இருந்து வேறு இடத்திற்கு மாற்றும் பொழுது தேர்ந்தெடுத்த இடம் தான் தற்பொழுதைய நகரம். அவர்கள் லேடி பென்னிற்கு மரியாதை செய்யும் விதமாக தற்பொழுதைய நகருக்கு "நாம் பென்" என்ற பெயர் வைத்து, அந்த இடத்தை தலைநகராக கொண்டு இன்னும் ஆட்சி செய்துகொண்டிருக்கிறார்கள். கம்போடியர்கள் அவரை பாட்டி பென் (Daun Penh) என்று அழைக்கிறார்கள்.  அவருடைய சிலையை 'வாட் நாம்' பகோடாவிற்கு நேர் எதிரெ அதை நோக்கி பார்த்துக்கொண்டிருக்கும் வண்ணம் வைத்து வழிபடுகிறார்கள்.
'பென்' பாட்டியின் நினைவிடம்


பாட்டி 'பென்'

ரஷ்யன் சந்தைக்கு போய் சேரும் பொழுது மணி நான்கரை. சென்னையில் இருக்கும் ரிச்சி ஸ்ட்ரீட் மாதிரி கொச கொச என்று இருந்தது. ரஷ்யன் சந்தை என்றதும் ரஷ்யன் பொருட்கள் எல்லாம் கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் உள்ளூர் பொருட்கள் மட்டுமே கிடைத்தது. பெயர் மட்டும் ரஷ்யன் சந்தை என்று இருக்கிறது. கம்போடியாவில் இருக்கும் சந்தைகளிலே பெரிய சந்தை இது தான் என்றார்கள். இங்கிருந்தே மொத்த கொள்முதல் எடுத்து மற்ற ஊர்களுக்கு செல்லுமாம். அனைத்தும் தரமாகவும் மலிவாகவும் கிடைக்கிறது. பேரம் பேசவேண்டும்.

 முக்கியமான விசயம் சொல்ல மறந்துவிட்டேன். கம்போடியாவில் இரண்டு பணப் பரிமாற்றம் (டுயல் கரன்ஸி) உபயோகத்தில் இருக்கிறது. ஒன்று கம்போடியாவின் சொந்த பணம். அதன் பெயர் ரியல்(Riel). அடுத்தது அமேரிக்காவின் டாலர். கிட்டத்தட்ட உள்ளூர் பணம் போன்றே கொடுக்கல் வாங்கலில் உபயோகிக்கிறார்கள். ஒரு அமெரிக்க டாலருக்கும் குறைவாக இருந்தால் மட்டுமே ரியலில் கொடுக்கிறார்கள். ஒரு அமெரிக்க டாலருக்கு குத்துமதிப்பாக நான்காயிரம் ரியல் என்ற மதிப்பில் பணப்பரிவர்தனை நடக்கிறது. ரியலின் குறைந்த பட்ச பண மதிப்பே 100 தான். இங்கு நாணயம் உபயோகத்தில் இல்லை.

 மீண்டும் ரஷ்யன் சந்தைக்கே வருவோம். 5 மணிக்கே எல்லா கடையும் அடைக்க ஆரம்பித்துவிட்டார்கள். விசாரித்தால் கம்போடியா முழுவதுமே காலை ஏழரை முதல் மாலை ஐந்து மணிவரைக்குமே கடைகள் திறந்திருக்குமாம். அதன் பின்னர் உணவுக்கடைகள் மற்றும் இரவு கேளிக்கை விடுதிகள் மட்டுமே திறந்திருக்கின்றன. வேறு எங்கு செல்லலாம் என்று கேட்டால் யாருக்கும் எதுவும் தோன்றவில்லை. சுற்றுலா இடங்கள், கடைகள் எல்லாம் 5 மணிக்கே மூடினால் எங்கு தான் செல்வது. கடைசியாக கம்போடியாவின் மிகப்பெரிய அங்காடி (AEON shopping mall) செல்லலாம் என்று ஒருமித்த முடிவு எடுத்து அங்கு சென்றோம். மிகப்பெரிய அங்காடி, கம்போடிய ஜப்பானிய கூட்டுறவில் உருவானது. பசிபிக் ஆசிய பகுதியில் உள்ள நாடுகள் அனைத்திலும் ஜப்பான் தன்னுடைய சந்தையை இப்படி பரப்பி இருக்கிறது. சிறிது நேரம் சுற்றிபார்த்துவிட்டு  ஹோட்டல் திரும்பி ஓய்வெடுக்க ஆரம்பித்தோம்.

1 comment: