Thursday, May 21, 2015

ஹயவதனா (Hayavadana)



       சமீபத்தில் ஹயவதனா என்ற நாடகம் பார்க்க சென்றிருந்தேன். இந்த நாடகம் சீன மொழியில் தான் இருக்கும் ஆனால் முகமூடி அணிந்து இருப்பார்கள், நடனமும் இருக்கும் என்று நண்பர் சொல்லியிருந்தார். வடமொழியில் ஹய என்றால் குதிரை, வதனா என்றால் முகம், குதிரைமுகம்.  ‍ இந்த நாடகத்தின் ஒரு பாத்திரத்துக்கு குதிரை தலையும் மனித உடம்புமாக இருக்கும். இதனை எழுதியது எழுத்தாளர், கவிஞர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இயக்குனர் என்று பல்முகம் கொண்ட , Girish Karnad அவர்கள். இவர் தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். இதனை சீன மொழியில் எழுதி இயக்கியவர் Chongtham Jayanta Meeteiமனிப்பூரை சேர்ந்தவர், தைவானில் வசிக்கிறார் என்று சொன்னார்கள். 

இந்த கதை ஏற்கெனவே விக்கிரமாதித்தனுக்கு வேதாளம் சொன்ன கதையில் வருவதுதான். அதனால் தான் சீன மொழியில் இருந்தாலும் நன்றாக புரிந்த‌து. வேதாளம் சொல்லும் கதையில்  ஒரு கேள்வி பதிலோடு நின்றுவிடும். ஆனால் இதில் அதற்கும் அப்பால் என்ன நடக்கிறது என்று காண்பிக்கிறார்கள். மனதுக்கும் உடலுக்கும் இடையில் நடக்கும் போராட்டமே இக்கதையின் கரு.

ஒரு ஊரில் ஒரு இளவரசன் இருக்கிறான். அவனுக்கு குதிரை மேல் ரொம்ப பிரியம். சந்தர்பவசத்தால் கந்தர்வன் ஒருவனால் சாபம் அடைந்து குதிரை தலையோடும் மனித உடம்போடும் அலைகிறான். . சாப விமோசனத்துக்கு அலையும் பொழுது சாது ஒருவரை சந்திக்கிறான். அவர் அவனுக்கு ஒரு கதை சொல்கிறார்.

ஒரு ஊரில் ஒரு ராஜா மாதிரி ஒருத்தர் இருக்கிறார். அவருக்கு ஒரு நண்பன். நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஒரு பெண் பாடுவது கேட்கிறது. ராஜா அந்த பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்படுகிறார். அவருக்காக நண்பன் சென்று அந்த பெண்ணிடம் பேசி இருவருக்கும் திருமணம் செய்துவைக்கிறார். சிறிது நாள் கழித்து மூன்றுபேரும் ரொம்ப தூரத்தில் உள்ள ஒரு இடத்துக்கு காடு, மேடு, மலை கடந்து செல்கின்றார்கள். ராஜாவுக்கு காவியங்களில் அதிக ஈடுபாடு. அதனால் சின்ன சின்ன விசய்ங்களை அவள் நண்பனிடம் செய்ய சொல்கின்றார்ள். தனக்காக தொலைவில் தெரிகின்ற பூவை பறித்துவர சொல்கின்றால். அவனும் பரித்துவருகின்றான். இதனை பார்த்த ராஜா உள்ளூர அசூயை கொள்கிறான். ராஜாவிடமும் நண்பனிடமும் காட்டிற்குள் கொஞ்சம் உலா போய்விட்டு வரலாம் என்கிறாள். ராஜா நான் வரவில்லை, நீங்கள் இருவரும் செல்லுங்கள் என்கிறான். வேண்டாம் என்று சொல்லாமல் இருவரும் உடனே புறப்பட்டதும் ராஜாவுக்கு வாழ்க்கையே வெறுத்துவிடுகிறது. அவர்கள் சென்ற திசைக்கு எதிர் திசையில் ஒடுகிறான். அங்கு ஒரு காளி கோவிலை பார்க்கிறான். பலிபீடத்தில் ஒரு வாள் இருக்கிறது. அதனை எடுத்து தன்னுடைய தலையை துண்டித்து கொள்கிறான். உலா போய்விட்டு வந்த ராணியும், நண்பனும் ராஜாவை காணாமல் தேடுகிறார்கள். ராணியை அங்கேயே வைத்துவிட்டு நண்பன் மட்டும் ராஜாவை தேடிவருகிறான். ராஜா தலை வெட்டு பட்டு கிடப்பதை பார்த்து அழுது புலம்பி அவனும் அதே கத்தியை எடுத்து தன்னுடைய தலையை வெட்டிக்கொள்கிறான். இருவரையும் காணாமல் ராணி தேடிவருகிறாள். இருவர் தலையை வெட்டு பட்டுகிடப்பதை பார்த்து வேதனை தாளாமல் அவளுடைய தலையையும் வெட்ட போகிறாள். அப்பொழுது காளி அவள் முன் தோன்றி தலையை உடம்போடு ஒட்டவை நான் அவர்களுக்கு உயிர் கொடுக்கிறேன் என்கிறாள். பதட்டத்தில் ராணி, நண்பனின் தலையை எடுத்து கணவரின் உடலிலும், கணவனின் தலையை எடுத்து நண்பனின் உடலிலும் வைத்துவிடுகின்றாள். இருவருக்கும் உயிர்வந்துவிடுகின்றது. இந்த உருவ மாற்றத்தை முதலில் விரும்பினாலும், யாருக்கு ராணி சொந்தம் என்ற பிரச்சனை எழுகிறது. அப்பொழுது அங்கு வந்த சாது, தலை எந்த உடம்பில் இருக்கிறதோ அதுவே அவன். அதனால் கணவனின் தலை உள்ள உடம்பில் இருப்பவனே ராஜா என்கிறார். ராணி அவனோடு செல்கிறாள். கணவனின் உடம்பு மனிதனோ ரொம்ப சோகமாக அந்த இடத்தை விட்டு செல்கிறான். விக்கிரமாதித்தனுக்கு வேதாளம் சொல்லும் கதை இந்த இடத்தில் நின்றுவிடும். இதற்கு மேல் என்ன நடக்கிறது என்பதுதான் இக்கதையின் முக்கியமான கரு.

ராணி கர்பமாகி, குழந்தை பிறக்கிறது. ஒரு சில நிகழ்ச்சிகள் அவளுக்குள் சலனத்தை உண்டாக்குகின்றது. தான் விரும்பியது மனதையா உடலையா என்று குழப்பமடைகிறாள். ஒரு நல்ல நாளில் குழந்தையை தூக்கிகொண்டு நண்பனின் தலை உள்ள மனிதனை கான ஓடி வருகிறாள். முதலில் தடுத்தாலும் பின்னர் அவளை ஏற்றுக்கொள்கிறான். ராணியை காணாமல் ராஜா கோபப்பட்டு வாளை சுழட்டிக்கொண்டு வருகிறான். நண்பர்கள் இருவருக்கும் போர் நடக்கிறது. ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவர் தலையை ஒருவர் வெட்டிக்கொண்டு விழுகிறார்கள். ராணியும் தன்னுயிரை விட்டுவிடுகின்றாள்.

இக்கதையை ஹயவதனாவுக்கு சொன்ன சாது நீயும் அந்த கோவிலுக்கு போய் வேண்டிக்கொள், சாப விமோச்சனம் கிடைக்கும் என்கிறார். காளி கோவிலுக்கு வரும் ஹயவதனா தனக்கு "முழுமை" வேண்டும் என்று வேண்டுகிறார். அவருடைய "முழுமை" கோரிக்கையை ஏற்ற காளி தேவியும் அவருடைய உருவத்தை முழுவதுமாக குதிரையாக மாற்றுகின்றார். அவருடைய குரல் மட்டும் மனிதனுடைய குரலாக இருக்கிறது.  ....சுபம்....

 நாடகத்தை பற்றிய சில துளிகள்...

* இந்த நாடகம் சீன மொழியில் இருந்தாளும் ஏற்கெனவே விக்கிரமாதித்தன் கதை தெரிந்திருந்ததால் நன்றாகவே புரிந்தது. ஆனால் இரண்டாம் பகுதி புரிய கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.

* இந்த நாடகத்தில் மொத்தமே 6 பேர் தான் நடித்திருந்தார்கள். முக்கிய பாத்திரங்களான, ராஜா, ராணி, நண்பன், சாது தவிர ஒரு பெண், ஒரு ஆண். இதில் அந்த பெண், 3 வேடங்களில் மாறி மாறி நடித்தார். சாதாரண பெண், காளி, பெண் பொம்மை, மீண்டும் சாதரண பெண். அது போன்று அந்த ஆண் ஹயவதானா, ஆண் பொம்மை, மீண்டும் முழுமையான குதிரை என்ற மாறி மாறி நடித்தார்கள். ஒரு பாத்திரத்தின் நிழல் கூட அடுத்த பாத்திரத்தில் வராத அளவுக்கு கன கச்சிதமான நடிப்பு. அனைவரும் தொழில் முறை நடிகர்கள் என்று நினைக்கிறேன். 

* ஹயவதான பாத்திரம் மேடையில் நடக்கும் பொழுது உண்மையாகவே ஒரு குதிரையின் அலட்சியமான நடை போன்றிருந்தது. அவர் பிரத்தியோகமாக இதற்காக பயிற்சி எடுத்தாரா அல்லது எனக்கு மட்டும் தான் அப்படி தோன்றியதா என்று தெரியவில்லை.

* மேடையில் நடிகர்கள் யாரும் மைக் உபயோகிக்கவில்லை. அவர்களுடைய குரல் கணீரென்று காதில் விழுந்தது. மேலும் அவர்கள் அனைவருக்குமே நன்றாக பாட வருகின்றது. நாடகத்தில் வரும் சில பாடல்களை அவர்களே பாடினார்கள்.

* தலையை வெட்டிக்கொண்டு சாகும் போது, அவர்களுடைய கிரீடத்தை தனியாக கழட்டி வைத்துவிடுகின்றார்கள். பின்னர் தலைமாறும் பொழுது கிரீடத்தை மட்டும் அடுத்தவருடைய தலையில் மாற்றி வைக்கிறார்கள். அதன்பின்னர் அந்த நபர் தன்னுடைய பாத்திரத்தை மாற்றி அது போன்றே பேசுகிறார். அதாவது அதுவரை ராஜாவாக நடித்தவர் கிரீடம் மாறிய பின்னர்
நண்பன் போன்று நடிக்கிறார், நண்பன் ராஜா போன்று நடிக்கிறார்.

* ஆறு நடிகர்களை கொண்டு 2 மணி நேரம் ஒரு நாடகத்தை சலிப்பே இல்லாமல கொண்டு செல்வது என்பது நிச்சயமாக ஒரு சாதனைதான்.

சீன மொழி தெரிந்திருந்தாள் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

வாய்ப்பு கிடைப்பவர்கள் இந்த நாடகத்தை பாருங்கள்.

2 comments: