சங்கதாரா
ஆசிரியர் - "காலசக்கரம்" நரசிம்மா
சங்கதாரா எனும்
இப்புத்தகம் ஒரு தோலா வழாக்கு பற்றி பேசுகின்றது. புத்தகத்திற்குள் செல்வதற்கு முன்னர்
தோலா வழக்கு என்றால் என்ன என்று தெரிந்து கொண்டால் நல்லது. நிலுவையில் உள்ள, முடியவே
முடியாத, தீர்ப்பில் சந்தேகம் உள்ள வழக்கு என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார். தோலா
வழக்கு என்றால் உடனே புரிந்துகொள்ள சமீபத்தில் 25 வருடங்களுக்குள் நடந்த ஒரு நிகழ்வு
இருக்கின்றது. முன்னால் பாரத பிரதமர் ராஜூவ் காந்தியின் கொலை வழக்கு. குண்டு வெடித்து
ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டார். அப்பொழுது எடுத்த புகைப்படம் வைத்து வழக்கு விசாரனையை
நடத்தி சிலரை குற்றவாளிகளாக தீர்ப்பும் வாசித்தாகிவிட்டது. ஆனாலும் இன்னும் அந்த வழக்கு
சம்பந்தமாக அங்கும் இங்குமாக பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். 28 பாய்ண்டுகளை அடிக்கி
பேஸ்புக்கில் சில பதிவுகள் எல்லாம் வந்தது. அவரை விசாரிக்கவில்லை அவர்தான் குற்றவாளி,
இவரை விசாரிக்கவில்லை இவர்தான் குற்றவாளி, ஏன் சோனியாவை விசாரிக்கவில்லை சோனியாவுக்கு
இந்த கொலையை பற்றி முன்னமே தெரியும் என்று கூட எழுதிகொண்டிருக்கின்றார்கள். உண்மையான
குற்றவாளி தண்டிக்கப்பட்டும் இருக்கலாம், தப்பித்தும் இருக்கலாம். நான் இங்கு குறிப்பிட்ட
ராஜிவ் காந்தி வழக்கு ஒரு உதாரணம் மட்டுமே. இப்படி பட்ட வழக்கு பெயர்தான் தோலா வழக்கு
என்று ஆசிரியர் சொல்கிறார்.
சங்கதாரா புத்தகம்
எந்த தோலா வழக்கை பற்றி பேசுகின்றது என்று பார்த்துவிடுவோம். தமிழ் வாசகர்களில் நிறைய
பேர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் படித்திருப்போம். அதில் பொன்னியின் செல்வனுக்கு(ராஜராஜ
சோழன்க்கு) ஒரு அண்ணன் இருப்பார். அவரோட பெயர் ஆதித்த கரிகாலன். இந்த ஆதித்த கரிகாலன்
தான் பாண்டிய மன்னன் வீரபாண்டியனுடைய தலையை வெட்டி பந்தாடியது. வடதிசையில் எதிரிகளை
ஓட ஓட விரட்டியது. அப்படிபட்ட வீரனுடைய அகால மரணம் சம்புவரையர் மாளிகையில் நடக்கின்றது.
அதுவும் அரசியல் சூழ்ச்சியால். அவருடைய மரணத்துக்கு யார் காரணம் என்று எங்குமே சரியான
குறிப்புகள் கிடையாது. ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வந்த பின்னர் ஆதித்த கரிகாலனின் கொலை
சதியில் ஈடுபட்ட குற்றத்திற்காக சிலபேருக்கு தண்டனை கிடைக்கிறது. அதுவும் மரண தண்டனை
கிடையாது, அவர்கள் சொத்துக்களை அரசாங்கம் எடுத்துக்கொண்டு அவர்களை நாட்டை விட்டு அனுப்பிவிடுகின்றார்கள்.
அதுவும் ஆதித்த கரிகாலன் இறந்து சுமார் 20 வருடங்கள் கழித்து(உத்தம சோழர் 14 ஆண்டுகள்
ஆட்சி செய்த பின்னர் ராஜ ராஜ சோழன் ஆட்சிக்கு வருகிறார், ஆட்சிக்கு வந்து 5 வருடங்களுக்குள்
இது நடந்ததாக கொண்டாலும் தோராயமாக 20 வருடம்). அந்த செய்தி சோழர்கள் கால கல்வெட்டுகளில்
/செப்பேடுகளில் இன்னமும் இருக்கின்றது.
பொன்னியின் செல்வனில்
கல்கி இதனை ஒரு சஸ்பன்ஸாவே விட்டுவிடுவார். யாருடைய வாள் கரிகாலனை குத்தி கொலைசெய்தது
என்பதை எங்குமே எழுதியிருக்க மாட்டார். கதை முடிவுரையில் ராஜ ராஜன் ஆட்சிக்கு வந்ததும்
நந்தினியை தனியாக சந்தித்து கொலையாளி யார் என்று தெரிந்துகொண்டார் என்று கூறி விட்டுவிடுவார்.
இந்த கொலைக்கு இன்னொருவரும் தண்டனை அனுபவித்திருக்கிறார். உத்தமசோழரின் ஆட்சி காலத்தில்
10 ஆண்டுகள் வந்தியத்தேவன் இதே குற்றசாட்டுக்காக சிறையில் இருப்பார். (இந்த செய்தி
கல்வெட்டில் இருக்கிறதா என்று தெரியவில்லை, ஆனால் நந்திபுரத்து நாயகி புத்தகத்தில்
இந்த செய்தி வருகின்றது) இந்த வந்தியத்தேவன் தான் ராஜராஜ சோழனின் அன்பு தமக்கை குந்தவையின்
கணவர்.
சரி மேலே உள்ள
முன்கதையை தெரிந்து கொண்டு சங்கதாராவுக்குள் செல்வதே உத்தமம். பொன்னியின் செல்வன் ஒருமுறை
படித்துவிட்டு இந்த புத்தகம் வாசித்தால் அதி உத்தமம். முன்னுரையில் ஆதித்த கரிகாலனே
ஆவியாக வந்து தனது தரப்பு வாதத்தை கூறி வழக்கை துவங்கி வைக்கிறார். தான் பொன்னியின்
செல்வனைவிட வீர தீரம் நிறைந்தவன். சரித்திர ஆசிரியர்கள் வேண்டும் என்றே தன்னுடைய கொலை
வழக்கை சரியாக விசாரிக்காமல் எழுதிவிட்டார்கள். தன்னை கொலை செய்ததாக தண்டிக்கப்பட்ட
பாண்டிய ஆபத்துதவி ரவிதாசன் உண்மையில் பாண்டியனே அல்ல. யாரையோ காப்பாற்ற அவன் மேல் பழிசுமத்தி தண்டித்துவிட்டார்கள்.
நீங்களாவது உண்மையை ஊருக்கு சொல்லுங்கள் என்று தன்னுடைய வாதத்தை காலச்சக்கரம் நரசிம்மா
அவர்களிடம் கூறி ஆரம்பித்துவைக்கிறார்.
இக்கதையும் கல்கியின்
பொன்னியின் செல்வனை அடியொற்றியே நடக்கின்றது. அதாவது பொன்னியின் செல்வனில் வரும் காட்சிகளை
வேறு மாதிரி விளக்குகிறார். அவரா இவரா என்று எல்லோரையும் சந்தேகப்படும் படியாக கதையை
கொண்டு செல்கின்றார். ஆனால் கல்கி உபயோகித்த சில கற்பனை பாத்திரங்களை சரித்திரத்தில்
வேறு பெயரில் இருந்தார்கள் என்று கூறுகின்றார். அதில் ஒன்று நந்தினி. நந்தினியை நந்தாவிளக்கு
என்று வேறு பெயரில் காண்பிக்கிறார். எனக்கு
தெரிந்து இன்னொன்று மந்தாகினி. அவரை தான் தேவியம்மான் என்று கூறுகிறார் என்று நினைக்கிறேன்.
கானாதகுறைக்கு ஸ்ரீவிஜயம் நாட்டிலிருந்தும் இரண்டுபேரை தன் கட்சியை வலுவூட்ட கொண்டு
வருகின்றார். மற்ற வரலாற்று ஆசிரியர்கள் போல் பூசி மெழுகாமல் சந்தேகத்தின் பலனை குற்றவாளிக்கு
பாதகமாக்கி(சாதகமாக அல்ல பாதகமாக்கி என்றே எழுதியிருக்கிறேன்) இவர்தான் குற்றவாளி
என்று சொல்லிவிடுகின்றார்.
இந்த நாவலுக்கான
பெயருக்கும் இந்த வழக்குக்கும் ஒரு சம்பந்தமும் இருப்பது போன்று தெரியவில்லை. சங்கதாரா
என்றால் ஒரு கட்டிடம் என்கின்றார். சோழர்கள் முடிசூடும் போது புரச இலை, புரச மர குச்சியை
கையிலேந்த பாஞ்சசன்ய சங்கில்(இதற்கு பெயர் தலைச்சங்கு) நீர் எடுத்து தலையில் ஊற்றுவார்களாம். கரிகால சோழன்(கல்லனை கட்டியவர்)
ஏன் ஒவ்வொரு முறையும் உண்மையான இலையையும் குச்சியையும் தேடி ஓட வேண்டும். தங்கத்திலே
செய்திடலாம் என்று தங்கத்தில் செய்து வைத்திருக்கிறார். அதனை வைத்திருக்கின்ற ஒரு இடத்திற்கு
தலைசங்கம் என்று பெயர். இன்னொரு இடத்திற்கு சங்கதாரா என்று பெயர்.
ஆசிரியர் ரொம்ப
சுவராஸ்யமாகவே இக்கதையை எழுதியிருக்கிறார். ஆனால் வரலாற்றை தனக்கு ஏற்றதாக திரித்து
எழுதிவிட்டாரோ என்ற அய்யம் எனக்கு இருக்கின்றது.
1) புரசங்கநாடு
என்ற ஒன்று மலேசியாவில் இருந்தது. அது ஆதி சோழர்களின் ஒரு பிரிவினரால் (கரிகாலச்சோழனின்
பேரன்களால் பங்காளி சண்டையில் ஓடியவர்கள்) அரசாட்சி செய்யப்பட்டது என்று எழுதியிருக்கிறார்.
கூகுளில் தேடினால் அப்படி ஒரு நாடு 2ஆம் நூற்றாண்டில் இருந்து 11 ஆம் நூற்றாண்டுவரை
இருந்ததாக தகவல் இருக்கிறது. அது எந்த அளவுக்கு சரித்திர உண்மை என்று தெரியவில்லை.
2) புரசங்க நாட்டை
ராஜராஜ சோழன் படைஎடுத்து சென்று அழித்துவிட்டார் என்று கூறுகிறார். ராஜ ராஜ சோழனின்
மகன் ராஜேந்திர சோழன் தான் கங்கை, கடாரம், ஸ்ரீவிஜயம் போன்ற நாடுகளை எல்லாம் வென்றார்
என்று படித்திருக்கிறேன். விக்கிபீடியாவும் அதைதான் சொல்கின்றது. ராஜராஜ சோழன் இந்த
நாடுகளை எல்லாம் வென்றாரா என்று தெரியவில்லை.
3) சங்கதாரா கட்டிடம்
புரஸநாட்டு மன்னர்களால்(மலேயா), கோடியக்கரைக்கு அருகில் உள்ள ஒரு தீவில் சோழர்களுக்கு
தெரியாமலே கட்டியிருக்கிறார்கள் என்று அடித்து விடுகின்றார்.
இன்னும் முக்கியமான
சில சந்தேகங்கள் எல்லாம் இருக்கின்றது. அதை பற்றி விவாதித்தால் இந்த புத்தகத்தை படிப்பவர்களுக்கு
கதையோட சுவராஸ்யம்/சஸ்பன்ஸ் போய்விடும் என்பதால் இக்கட்டுரையை இத்தோடு முடிப்பதே உத்தமம்.