Sunday, August 2, 2015

கம்போடியா -1, நாம் பென் (Cambodia - Phnom Penh)

 அலுவலக வேலை நிமித்தமாக ஒரு வார காலம் கம்போடிய தலைநகரில் தங்கும் வாய்ப்பு கிடைத்தது.  கம்போடியா என்ற பெயரை கேட்டதும் உடனே நமக்கு நினைவுக்கு வருவது ஆங்கர் வாட் தான். இதுவரைக்கும் அதோட தலைநகர் பெயர் என்ன என்று கூட தெரியாது. வலைத்தளத்தில் தான் தேடினேன். Phnom Penh என்று வந்தது. எப்படி உச்சரிச்சாலும் தப்பாவே உச்சரிக்கிறமாதிரி இருந்தது. ரிஸ்க் எடுக்க வேண்டாம். நேரடியா கம்போடியா போய் அங்கேயே எப்படி உச்சரிக்கிறது என்று கேட்டுக்களாம் என்று முடிவு செய்திருந்தேன். இந்திய தூதரகத்தில் வேலை பார்க்கும் நண்பரிடம்  கம்போடியாவிற்கு ஒரு வார காலம் அலுவலக வேலை விசயமாக போக வேண்டியது இருக்கிறது என்றவுடன். "நாம் பென்" க்கா போகிறீர்கள் என்று கேட்டார். ஒகோ அந்த பெயரை இப்படித்தான் உச்சரிக்கனுமா என்று நினைத்துக்கொன்டே வெளியே காண்பித்துக்கொள்ளாமல் ஆமாம் அங்கேதான் போகிறேன் என்று சொல்லிவிட்டேன். 
'நாம் பென்' விமான நிலையம்


 ஒரு ஞாயிறு மதியம் 'நாம் பென்' விமான நிலையத்தில் போய் இறங்கியாகிவிட்டது. இந்தியர்களுக்கு அங்கு போய் இறங்கியதும் கடவு சீட்டு(விசா) வாங்கும் வசதியிருக்கிறது. 30 அமெரிக்க டாலர். 30 நாட்கள் தங்குவதற்கு அனுமதி கொடுக்கிறார்கள். சன்வே ஹோட்டலில் தான் தங்க வைக்கப்பட்டிருந்தேன். நேர் எதிராக பச்சை பசேல் என்று அமேரிக்க தூதரகம். நான்கு மூலையிலும் துவாரபாலகர்கள் நின்று கொண்டிருந்தார்கள். எந்த நாட்டில் சென்று அமெரிக்க தூதரகத்தை பார்த்தாலும் இந்த காட்சி மட்டும் மாற்றம் இருக்காது என்று நினைக்கிறேன். உள்ளே நிறைய பனை மரம் அதுவும் முறையாக வளர்தது போன்று கட்டம் போட்டு அதற்குள்ளே இருந்தது. பனைமரம் உயரமாக வளரக்கூடிய மரம். மழை பெய்து மின்னல் தாக்கினால் உடனே தீ பற்றி எரியக்கூடியது. அதனால் ஊருக்குள் பனைமரம் வளர்க்கும் வழக்கம் தமிழகத்தில் கிடையாது. ஆனால் கம்போடியாவில் எங்கெங்கு நோக்கினும் பனைமரம் கண்ணுக்கு தெரிந்தது.பக்கத்திலே ஒரு பகோடா. உயரமாக இருந்தது. ஒரு முறை போய் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன்.
அடைமழைக்கு முன்னர்

 ஏற்கெனவே அங்கு தங்கியிருந்த அலுவலக நண்பர்கள் பிற்பகல் 2 மணிக்கு ரஷ்யன் சந்தைக்கு அழைத்து செல்வதாக சொல்லியிருந்தார்கள். அடை மழை பெய்ததால் புறப்படுவதற்கு 4 மணி ஆகிவிட்டது. கன்னடியன் வங்கியில் வேலை செய்யும் உள்ளூர் நண்பர் சீதா எங்களை தன்னுடைய மகிழுந்துல் அழைத்துசென்றார். சீதா என்ற பெயரை அவரோட தாத்தா பாட்டி தேர்ந்தெடுதார்களாம். கம்போடிய மக்கள் நிறைய இந்திய பெயர் சூட்டுகிறார்கள். ஹோட்டல் ரிசப்சனிஸ்ட் பெயர் கூட ஷிவா. முப்பது சதவிகித மக்களின் முகங்கள் கிட்ட தட்ட தமிழர்கள் முக அமைப்பிலே இருக்கிறது. போகும் வழியில் ஒரு  பெண்மனியின் சிலை நின்று கொண்டிருந்தார். ரொம்பவும் புகழ்வாய்ந்த பெண். இவரோட பெயர் பென்(Penh) என்றார். அதற்கு மேல் அவருக்கு விபரம் தெரியவில்லை. ஒருவாரம் கழித்து ஆங்கர் வாட்டில் என்னுடைய வழிகாட்டி ஒருவர் அதனை விவரித்தார். மகிழுந்து ரஷ்யன் சந்தைக்கு செல்லுவதற்குள் பென் விவகாரம் என்ன என்று பார்த்துவிட்டு வந்துவிடுவோமா!


 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தற்பொழுதைய  ‘நாம் பென்’ தலைநகராக இல்லை. சிற்றூராக இருந்திருக்கலாம். அங்கு ஒரு வசதிபடைத்த, நல்ல பெயரெடுத்த ஒரு பெண்மனி இருந்திருக்கிறார். அவருடைய பெயர் பென்(Penh). சுற்று வட்டார மக்கள் அவர் சொல்லுக்கு மறு பேச்சு பேசுவதில்லை. ஒரு நாள் மேக்காங் ஆற்றுப்பகுதியில் சென்றுகொண்டிருந்த போது பரந்து விரிந்த அரசமரம் ஒன்றின் நடுவே வெண்கலத்தால் ஆன நான்கு புத்தர் சிலைகளை கண்டெடுத்திருக்கிறார். இதனை மலை போன்ற உயர்ந்த இடத்தில் வைத்து பூஜை செய்ய வேண்டிய சிலைகள் என்று முடிவெடுத்த பென், மனித சக்தியை கொண்டு சிறிய குன்றை செயற்கையாக உருவாக்கி அதன் மீது கோவிலை கட்டி வைத்திருக்கிறார். அந்த கோவிலோட பெயர் 'வாட் நாம்'. கம்போடிய மொழியில் வாட் என்றால் கோவில், நாம் என்றால் குன்று என்று அர்த்தம்.
'வாட் நாம்' - Wat Phnom


  15ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசியல் உட்பூசல் மற்றும் அண்டை நாடுகளிடையேயான தொடர்ந்த சண்டையின் காரணமாக 'கமிர்' அரசாங்கமானது தன்னுடைய தலைநகரை சிம் ரிப்(ஆங்கர் வாட்)ல் இருந்து வேறு இடத்திற்கு மாற்றும் பொழுது தேர்ந்தெடுத்த இடம் தான் தற்பொழுதைய நகரம். அவர்கள் லேடி பென்னிற்கு மரியாதை செய்யும் விதமாக தற்பொழுதைய நகருக்கு "நாம் பென்" என்ற பெயர் வைத்து, அந்த இடத்தை தலைநகராக கொண்டு இன்னும் ஆட்சி செய்துகொண்டிருக்கிறார்கள். கம்போடியர்கள் அவரை பாட்டி பென் (Daun Penh) என்று அழைக்கிறார்கள்.  அவருடைய சிலையை 'வாட் நாம்' பகோடாவிற்கு நேர் எதிரெ அதை நோக்கி பார்த்துக்கொண்டிருக்கும் வண்ணம் வைத்து வழிபடுகிறார்கள்.
'பென்' பாட்டியின் நினைவிடம்


பாட்டி 'பென்'

ரஷ்யன் சந்தைக்கு போய் சேரும் பொழுது மணி நான்கரை. சென்னையில் இருக்கும் ரிச்சி ஸ்ட்ரீட் மாதிரி கொச கொச என்று இருந்தது. ரஷ்யன் சந்தை என்றதும் ரஷ்யன் பொருட்கள் எல்லாம் கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் உள்ளூர் பொருட்கள் மட்டுமே கிடைத்தது. பெயர் மட்டும் ரஷ்யன் சந்தை என்று இருக்கிறது. கம்போடியாவில் இருக்கும் சந்தைகளிலே பெரிய சந்தை இது தான் என்றார்கள். இங்கிருந்தே மொத்த கொள்முதல் எடுத்து மற்ற ஊர்களுக்கு செல்லுமாம். அனைத்தும் தரமாகவும் மலிவாகவும் கிடைக்கிறது. பேரம் பேசவேண்டும்.

 முக்கியமான விசயம் சொல்ல மறந்துவிட்டேன். கம்போடியாவில் இரண்டு பணப் பரிமாற்றம் (டுயல் கரன்ஸி) உபயோகத்தில் இருக்கிறது. ஒன்று கம்போடியாவின் சொந்த பணம். அதன் பெயர் ரியல்(Riel). அடுத்தது அமேரிக்காவின் டாலர். கிட்டத்தட்ட உள்ளூர் பணம் போன்றே கொடுக்கல் வாங்கலில் உபயோகிக்கிறார்கள். ஒரு அமெரிக்க டாலருக்கும் குறைவாக இருந்தால் மட்டுமே ரியலில் கொடுக்கிறார்கள். ஒரு அமெரிக்க டாலருக்கு குத்துமதிப்பாக நான்காயிரம் ரியல் என்ற மதிப்பில் பணப்பரிவர்தனை நடக்கிறது. ரியலின் குறைந்த பட்ச பண மதிப்பே 100 தான். இங்கு நாணயம் உபயோகத்தில் இல்லை.

 மீண்டும் ரஷ்யன் சந்தைக்கே வருவோம். 5 மணிக்கே எல்லா கடையும் அடைக்க ஆரம்பித்துவிட்டார்கள். விசாரித்தால் கம்போடியா முழுவதுமே காலை ஏழரை முதல் மாலை ஐந்து மணிவரைக்குமே கடைகள் திறந்திருக்குமாம். அதன் பின்னர் உணவுக்கடைகள் மற்றும் இரவு கேளிக்கை விடுதிகள் மட்டுமே திறந்திருக்கின்றன. வேறு எங்கு செல்லலாம் என்று கேட்டால் யாருக்கும் எதுவும் தோன்றவில்லை. சுற்றுலா இடங்கள், கடைகள் எல்லாம் 5 மணிக்கே மூடினால் எங்கு தான் செல்வது. கடைசியாக கம்போடியாவின் மிகப்பெரிய அங்காடி (AEON shopping mall) செல்லலாம் என்று ஒருமித்த முடிவு எடுத்து அங்கு சென்றோம். மிகப்பெரிய அங்காடி, கம்போடிய ஜப்பானிய கூட்டுறவில் உருவானது. பசிபிக் ஆசிய பகுதியில் உள்ள நாடுகள் அனைத்திலும் ஜப்பான் தன்னுடைய சந்தையை இப்படி பரப்பி இருக்கிறது. சிறிது நேரம் சுற்றிபார்த்துவிட்டு  ஹோட்டல் திரும்பி ஓய்வெடுக்க ஆரம்பித்தோம்.

Thursday, May 21, 2015

ஹயவதனா (Hayavadana)



       சமீபத்தில் ஹயவதனா என்ற நாடகம் பார்க்க சென்றிருந்தேன். இந்த நாடகம் சீன மொழியில் தான் இருக்கும் ஆனால் முகமூடி அணிந்து இருப்பார்கள், நடனமும் இருக்கும் என்று நண்பர் சொல்லியிருந்தார். வடமொழியில் ஹய என்றால் குதிரை, வதனா என்றால் முகம், குதிரைமுகம்.  ‍ இந்த நாடகத்தின் ஒரு பாத்திரத்துக்கு குதிரை தலையும் மனித உடம்புமாக இருக்கும். இதனை எழுதியது எழுத்தாளர், கவிஞர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இயக்குனர் என்று பல்முகம் கொண்ட , Girish Karnad அவர்கள். இவர் தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். இதனை சீன மொழியில் எழுதி இயக்கியவர் Chongtham Jayanta Meeteiமனிப்பூரை சேர்ந்தவர், தைவானில் வசிக்கிறார் என்று சொன்னார்கள். 

இந்த கதை ஏற்கெனவே விக்கிரமாதித்தனுக்கு வேதாளம் சொன்ன கதையில் வருவதுதான். அதனால் தான் சீன மொழியில் இருந்தாலும் நன்றாக புரிந்த‌து. வேதாளம் சொல்லும் கதையில்  ஒரு கேள்வி பதிலோடு நின்றுவிடும். ஆனால் இதில் அதற்கும் அப்பால் என்ன நடக்கிறது என்று காண்பிக்கிறார்கள். மனதுக்கும் உடலுக்கும் இடையில் நடக்கும் போராட்டமே இக்கதையின் கரு.

ஒரு ஊரில் ஒரு இளவரசன் இருக்கிறான். அவனுக்கு குதிரை மேல் ரொம்ப பிரியம். சந்தர்பவசத்தால் கந்தர்வன் ஒருவனால் சாபம் அடைந்து குதிரை தலையோடும் மனித உடம்போடும் அலைகிறான். . சாப விமோசனத்துக்கு அலையும் பொழுது சாது ஒருவரை சந்திக்கிறான். அவர் அவனுக்கு ஒரு கதை சொல்கிறார்.

ஒரு ஊரில் ஒரு ராஜா மாதிரி ஒருத்தர் இருக்கிறார். அவருக்கு ஒரு நண்பன். நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஒரு பெண் பாடுவது கேட்கிறது. ராஜா அந்த பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்படுகிறார். அவருக்காக நண்பன் சென்று அந்த பெண்ணிடம் பேசி இருவருக்கும் திருமணம் செய்துவைக்கிறார். சிறிது நாள் கழித்து மூன்றுபேரும் ரொம்ப தூரத்தில் உள்ள ஒரு இடத்துக்கு காடு, மேடு, மலை கடந்து செல்கின்றார்கள். ராஜாவுக்கு காவியங்களில் அதிக ஈடுபாடு. அதனால் சின்ன சின்ன விசய்ங்களை அவள் நண்பனிடம் செய்ய சொல்கின்றார்ள். தனக்காக தொலைவில் தெரிகின்ற பூவை பறித்துவர சொல்கின்றால். அவனும் பரித்துவருகின்றான். இதனை பார்த்த ராஜா உள்ளூர அசூயை கொள்கிறான். ராஜாவிடமும் நண்பனிடமும் காட்டிற்குள் கொஞ்சம் உலா போய்விட்டு வரலாம் என்கிறாள். ராஜா நான் வரவில்லை, நீங்கள் இருவரும் செல்லுங்கள் என்கிறான். வேண்டாம் என்று சொல்லாமல் இருவரும் உடனே புறப்பட்டதும் ராஜாவுக்கு வாழ்க்கையே வெறுத்துவிடுகிறது. அவர்கள் சென்ற திசைக்கு எதிர் திசையில் ஒடுகிறான். அங்கு ஒரு காளி கோவிலை பார்க்கிறான். பலிபீடத்தில் ஒரு வாள் இருக்கிறது. அதனை எடுத்து தன்னுடைய தலையை துண்டித்து கொள்கிறான். உலா போய்விட்டு வந்த ராணியும், நண்பனும் ராஜாவை காணாமல் தேடுகிறார்கள். ராணியை அங்கேயே வைத்துவிட்டு நண்பன் மட்டும் ராஜாவை தேடிவருகிறான். ராஜா தலை வெட்டு பட்டு கிடப்பதை பார்த்து அழுது புலம்பி அவனும் அதே கத்தியை எடுத்து தன்னுடைய தலையை வெட்டிக்கொள்கிறான். இருவரையும் காணாமல் ராணி தேடிவருகிறாள். இருவர் தலையை வெட்டு பட்டுகிடப்பதை பார்த்து வேதனை தாளாமல் அவளுடைய தலையையும் வெட்ட போகிறாள். அப்பொழுது காளி அவள் முன் தோன்றி தலையை உடம்போடு ஒட்டவை நான் அவர்களுக்கு உயிர் கொடுக்கிறேன் என்கிறாள். பதட்டத்தில் ராணி, நண்பனின் தலையை எடுத்து கணவரின் உடலிலும், கணவனின் தலையை எடுத்து நண்பனின் உடலிலும் வைத்துவிடுகின்றாள். இருவருக்கும் உயிர்வந்துவிடுகின்றது. இந்த உருவ மாற்றத்தை முதலில் விரும்பினாலும், யாருக்கு ராணி சொந்தம் என்ற பிரச்சனை எழுகிறது. அப்பொழுது அங்கு வந்த சாது, தலை எந்த உடம்பில் இருக்கிறதோ அதுவே அவன். அதனால் கணவனின் தலை உள்ள உடம்பில் இருப்பவனே ராஜா என்கிறார். ராணி அவனோடு செல்கிறாள். கணவனின் உடம்பு மனிதனோ ரொம்ப சோகமாக அந்த இடத்தை விட்டு செல்கிறான். விக்கிரமாதித்தனுக்கு வேதாளம் சொல்லும் கதை இந்த இடத்தில் நின்றுவிடும். இதற்கு மேல் என்ன நடக்கிறது என்பதுதான் இக்கதையின் முக்கியமான கரு.

ராணி கர்பமாகி, குழந்தை பிறக்கிறது. ஒரு சில நிகழ்ச்சிகள் அவளுக்குள் சலனத்தை உண்டாக்குகின்றது. தான் விரும்பியது மனதையா உடலையா என்று குழப்பமடைகிறாள். ஒரு நல்ல நாளில் குழந்தையை தூக்கிகொண்டு நண்பனின் தலை உள்ள மனிதனை கான ஓடி வருகிறாள். முதலில் தடுத்தாலும் பின்னர் அவளை ஏற்றுக்கொள்கிறான். ராணியை காணாமல் ராஜா கோபப்பட்டு வாளை சுழட்டிக்கொண்டு வருகிறான். நண்பர்கள் இருவருக்கும் போர் நடக்கிறது. ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவர் தலையை ஒருவர் வெட்டிக்கொண்டு விழுகிறார்கள். ராணியும் தன்னுயிரை விட்டுவிடுகின்றாள்.

இக்கதையை ஹயவதனாவுக்கு சொன்ன சாது நீயும் அந்த கோவிலுக்கு போய் வேண்டிக்கொள், சாப விமோச்சனம் கிடைக்கும் என்கிறார். காளி கோவிலுக்கு வரும் ஹயவதனா தனக்கு "முழுமை" வேண்டும் என்று வேண்டுகிறார். அவருடைய "முழுமை" கோரிக்கையை ஏற்ற காளி தேவியும் அவருடைய உருவத்தை முழுவதுமாக குதிரையாக மாற்றுகின்றார். அவருடைய குரல் மட்டும் மனிதனுடைய குரலாக இருக்கிறது.  ....சுபம்....

 நாடகத்தை பற்றிய சில துளிகள்...

* இந்த நாடகம் சீன மொழியில் இருந்தாளும் ஏற்கெனவே விக்கிரமாதித்தன் கதை தெரிந்திருந்ததால் நன்றாகவே புரிந்தது. ஆனால் இரண்டாம் பகுதி புரிய கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.

* இந்த நாடகத்தில் மொத்தமே 6 பேர் தான் நடித்திருந்தார்கள். முக்கிய பாத்திரங்களான, ராஜா, ராணி, நண்பன், சாது தவிர ஒரு பெண், ஒரு ஆண். இதில் அந்த பெண், 3 வேடங்களில் மாறி மாறி நடித்தார். சாதாரண பெண், காளி, பெண் பொம்மை, மீண்டும் சாதரண பெண். அது போன்று அந்த ஆண் ஹயவதானா, ஆண் பொம்மை, மீண்டும் முழுமையான குதிரை என்ற மாறி மாறி நடித்தார்கள். ஒரு பாத்திரத்தின் நிழல் கூட அடுத்த பாத்திரத்தில் வராத அளவுக்கு கன கச்சிதமான நடிப்பு. அனைவரும் தொழில் முறை நடிகர்கள் என்று நினைக்கிறேன். 

* ஹயவதான பாத்திரம் மேடையில் நடக்கும் பொழுது உண்மையாகவே ஒரு குதிரையின் அலட்சியமான நடை போன்றிருந்தது. அவர் பிரத்தியோகமாக இதற்காக பயிற்சி எடுத்தாரா அல்லது எனக்கு மட்டும் தான் அப்படி தோன்றியதா என்று தெரியவில்லை.

* மேடையில் நடிகர்கள் யாரும் மைக் உபயோகிக்கவில்லை. அவர்களுடைய குரல் கணீரென்று காதில் விழுந்தது. மேலும் அவர்கள் அனைவருக்குமே நன்றாக பாட வருகின்றது. நாடகத்தில் வரும் சில பாடல்களை அவர்களே பாடினார்கள்.

* தலையை வெட்டிக்கொண்டு சாகும் போது, அவர்களுடைய கிரீடத்தை தனியாக கழட்டி வைத்துவிடுகின்றார்கள். பின்னர் தலைமாறும் பொழுது கிரீடத்தை மட்டும் அடுத்தவருடைய தலையில் மாற்றி வைக்கிறார்கள். அதன்பின்னர் அந்த நபர் தன்னுடைய பாத்திரத்தை மாற்றி அது போன்றே பேசுகிறார். அதாவது அதுவரை ராஜாவாக நடித்தவர் கிரீடம் மாறிய பின்னர்
நண்பன் போன்று நடிக்கிறார், நண்பன் ராஜா போன்று நடிக்கிறார்.

* ஆறு நடிகர்களை கொண்டு 2 மணி நேரம் ஒரு நாடகத்தை சலிப்பே இல்லாமல கொண்டு செல்வது என்பது நிச்சயமாக ஒரு சாதனைதான்.

சீன மொழி தெரிந்திருந்தாள் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

வாய்ப்பு கிடைப்பவர்கள் இந்த நாடகத்தை பாருங்கள்.

Tuesday, March 31, 2015

சங்கதாரா - ஒரு தோலா வழக்கு

சங்கதாரா  
ஆசிரியர் ‍ - "காலசக்கரம்" நரசிம்மா


சங்கதாரா எனும் இப்புத்தகம் ஒரு தோலா வழாக்கு பற்றி பேசுகின்றது. புத்தகத்திற்குள் செல்வதற்கு முன்னர் தோலா வழக்கு என்றால் என்ன என்று தெரிந்து கொண்டால் நல்லது. நிலுவையில் உள்ள, முடியவே முடியாத, தீர்ப்பில் சந்தேகம் உள்ள வழக்கு என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார். தோலா வழக்கு என்றால் உடனே புரிந்துகொள்ள சமீபத்தில் 25 வருடங்களுக்குள் நடந்த ஒரு நிகழ்வு இருக்கின்றது. முன்னால் பாரத பிரதமர் ராஜூவ் காந்தியின் கொலை வழக்கு. குண்டு வெடித்து ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டார். அப்பொழுது எடுத்த புகைப்படம் வைத்து வழக்கு விசாரனையை நடத்தி சிலரை குற்றவாளிகளாக தீர்ப்பும் வாசித்தாகிவிட்டது. ஆனாலும் இன்னும் அந்த வழக்கு சம்பந்தமாக அங்கும் இங்குமாக பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். 28 பாய்ண்டுகளை அடிக்கி பேஸ்புக்கில் சில பதிவுகள் எல்லாம் வந்தது. அவரை விசாரிக்கவில்லை அவர்தான் குற்றவாளி, இவரை விசாரிக்கவில்லை இவர்தான் குற்றவாளி, ஏன் சோனியாவை விசாரிக்கவில்லை சோனியாவுக்கு இந்த கொலையை பற்றி முன்னமே தெரியும் என்று கூட எழுதிகொண்டிருக்கின்றார்கள். உண்மையான குற்றவாளி தண்டிக்கப்பட்டும் இருக்கலாம், தப்பித்தும் இருக்கலாம். நான் இங்கு குறிப்பிட்ட ராஜிவ் காந்தி வழக்கு ஒரு உதாரணம் மட்டுமே. இப்படி பட்ட வழக்கு பெயர்தான் தோலா வழக்கு என்று ஆசிரியர் சொல்கிறார்.

ச‌ங்கதாரா புத்தகம் எந்த தோலா வழக்கை பற்றி பேசுகின்றது என்று பார்த்துவிடுவோம். தமிழ் வாசகர்களில் நிறைய பேர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் படித்திருப்போம். அதில் பொன்னியின் செல்வனுக்கு(ராஜராஜ சோழன்க்கு) ஒரு அண்ணன் இருப்பார். அவரோட பெயர் ஆதித்த கரிகாலன். இந்த ஆதித்த கரிகாலன் தான் பாண்டிய மன்னன் வீரபாண்டியனுடைய தலையை வெட்டி பந்தாடியது. வடதிசையில் எதிரிகளை ஓட ஓட விரட்டியது. அப்படிபட்ட வீரனுடைய அகால மரணம் சம்புவரையர் மாளிகையில் நடக்கின்றது. அதுவும் அரசியல் சூழ்ச்சியால். அவருடைய மரணத்துக்கு யார் காரணம் என்று எங்குமே சரியான குறிப்புகள் கிடையாது. ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வந்த பின்னர் ஆதித்த கரிகாலனின் கொலை சதியில் ஈடுபட்ட குற்றத்திற்காக சிலபேருக்கு தண்டனை கிடைக்கிறது. அதுவும் மரண தண்டனை கிடையாது, அவர்கள் சொத்துக்களை அரசாங்கம் எடுத்துக்கொண்டு அவர்களை நாட்டை விட்டு அனுப்பிவிடுகின்றார்கள். அதுவும் ஆதித்த கரிகாலன் இறந்து சுமார் 20 வருடங்கள் கழித்து(உத்தம சோழர் 14 ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னர் ராஜ ராஜ சோழன் ஆட்சிக்கு வருகிறார், ஆட்சிக்கு வந்து 5 வருடங்களுக்குள் இது நடந்ததாக கொண்டாலும் தோராயமாக‌ 20 வருடம்). அந்த செய்தி சோழர்கள் கால கல்வெட்டுகளில் /செப்பேடுகளில் இன்னமும் இருக்கின்றது.

பொன்னியின் செல்வனில் கல்கி இதனை ஒரு சஸ்பன்ஸாவே விட்டுவிடுவார். யாருடைய வாள் கரிகாலனை குத்தி கொலைசெய்தது என்பதை எங்குமே எழுதியிருக்க மாட்டார். கதை முடிவுரையில் ராஜ ராஜன் ஆட்சிக்கு வந்ததும் நந்தினியை தனியாக சந்தித்து கொலையாளி யார் என்று தெரிந்துகொண்டார் என்று கூறி விட்டுவிடுவார். இந்த கொலைக்கு இன்னொருவரும் தண்டனை அனுபவித்திருக்கிறார். உத்தமசோழரின் ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகள் வந்தியத்தேவன் இதே குற்றசாட்டுக்காக சிறையில் இருப்பார். (இந்த செய்தி கல்வெட்டில் இருக்கிறதா என்று தெரியவில்லை, ஆனால் நந்திபுரத்து நாயகி புத்தகத்தில் இந்த செய்தி வருகின்றது) இந்த வந்தியத்தேவன் தான் ராஜராஜ சோழனின் அன்பு தமக்கை குந்தவையின் கணவர்.

சரி மேலே உள்ள முன்கதையை தெரிந்து கொண்டு சங்கதாராவுக்குள் செல்வதே உத்தமம். பொன்னியின் செல்வன் ஒருமுறை படித்துவிட்டு இந்த புத்தகம் வாசித்தால் அதி உத்தமம். முன்னுரையில் ஆதித்த கரிகாலனே ஆவியாக வந்து தனது தரப்பு வாதத்தை கூறி வழக்கை துவங்கி வைக்கிறார். தான் பொன்னியின் செல்வனைவிட வீர தீரம் நிறைந்தவன். சரித்திர ஆசிரியர்கள் வேண்டும் என்றே தன்னுடைய கொலை வழக்கை சரியாக விசாரிக்காமல் எழுதிவிட்டார்கள். தன்னை கொலை செய்ததாக தண்டிக்கப்பட்ட பாண்டிய ஆபத்துதவி ரவிதாசன் உண்மையில் பாண்டியனே அல்ல.  யாரையோ காப்பாற்ற அவன் மேல் பழிசுமத்தி தண்டித்துவிட்டார்கள். நீங்களாவது உண்மையை ஊருக்கு சொல்லுங்கள் என்று தன்னுடைய வாதத்தை காலச்சக்கரம் நரசிம்மா அவர்களிடம் கூறி ஆரம்பித்துவைக்கிறார்.

இக்கதையும் கல்கியின் பொன்னியின் செல்வனை அடியொற்றியே நடக்கின்றது. அதாவது பொன்னியின் செல்வனில் வரும் காட்சிகளை வேறு மாதிரி விளக்குகிறார். அவரா இவரா என்று எல்லோரையும் சந்தேகப்படும் படியாக கதையை கொண்டு செல்கின்றார். ஆனால் கல்கி உபயோகித்த சில கற்பனை பாத்திரங்களை சரித்திரத்தில் வேறு பெயரில் இருந்தார்கள் என்று கூறுகின்றார். அதில் ஒன்று நந்தினி. நந்தினியை நந்தாவிளக்கு என்று வேறு பெயரில் காண்பிக்கிறார்.  எனக்கு தெரிந்து இன்னொன்று மந்தாகினி. அவரை தான் தேவியம்மான் என்று கூறுகிறார் என்று நினைக்கிறேன். கானாதகுறைக்கு ஸ்ரீவிஜயம் நாட்டிலிருந்தும் இரண்டுபேரை தன் கட்சியை வலுவூட்ட கொண்டு வருகின்றார். மற்ற வரலாற்று ஆசிரியர்கள் போல் பூசி மெழுகாமல் சந்தேகத்தின் பலனை குற்றவாளிக்கு பாதகமாக்கி(சாதகமாக‌ அல்ல பாதகமாக்கி என்றே எழுதியிருக்கிறேன்) இவர்தான் குற்றவாளி என்று சொல்லிவிடுகின்றார்.

இந்த நாவலுக்கான பெயருக்கும் இந்த வழக்குக்கும் ஒரு சம்பந்தமும் இருப்பது போன்று தெரியவில்லை. சங்கதாரா என்றால் ஒரு கட்டிடம் என்கின்றார். சோழர்கள் முடிசூடும் போது புரச இலை, புரச மர குச்சியை கையிலேந்த பாஞ்சசன்ய சங்கில்(இதற்கு பெயர் த‌லைச்சங்கு) நீர் எடுத்து  தலையில் ஊற்றுவார்களாம். கரிகால சோழன்(கல்லனை கட்டியவர்) ஏன் ஒவ்வொரு முறையும் உண்மையான இலையையும் குச்சியையும் தேடி ஓட வேண்டும். தங்கத்திலே செய்திடலாம் என்று தங்கத்தில் செய்து வைத்திருக்கிறார். அதனை வைத்திருக்கின்ற ஒரு இடத்திற்கு தலைசங்கம் என்று பெயர். இன்னொரு இடத்திற்கு சங்கதாரா என்று பெயர்.

ஆசிரியர் ரொம்ப சுவராஸ்யமாகவே இக்கதையை எழுதியிருக்கிறார். ஆனால் வரலாற்றை தனக்கு ஏற்றதாக திரித்து எழுதிவிட்டாரோ என்ற அய்யம் எனக்கு இருக்கின்றது.

1) புரசங்கநாடு என்ற ஒன்று மலேசியாவில் இருந்தது. அது ஆதி சோழர்களின் ஒரு பிரிவினரால் (கரிகாலச்சோழனின் பேரன்களால் ‍ பங்காளி சண்டையில் ஓடியவர்கள்) அரசாட்சி செய்யப்பட்டது என்று எழுதியிருக்கிறார். கூகுளில் தேடினால் அப்படி ஒரு நாடு 2ஆம் நூற்றாண்டில் இருந்து 11 ஆம் நூற்றாண்டுவரை இருந்ததாக தகவல் இருக்கிறது. அது எந்த அளவுக்கு சரித்திர உண்மை என்று தெரியவில்லை.

2) புரசங்க நாட்டை ராஜராஜ சோழன் படைஎடுத்து சென்று அழித்துவிட்டார் என்று கூறுகிறார். ராஜ ராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் தான் கங்கை, கடாரம், ஸ்ரீவிஜயம் போன்ற நாடுகளை எல்லாம் வென்றார் என்று படித்திருக்கிறேன். விக்கிபீடியாவும் அதைதான் சொல்கின்றது. ராஜராஜ சோழன் இந்த நாடுகளை எல்லாம் வென்றாரா என்று தெரியவில்லை.

3) சங்கதாரா கட்டிடம் புரஸநாட்டு மன்னர்களால்(மலேயா), கோடியக்கரைக்கு அருகில் உள்ள ஒரு தீவில் சோழர்களுக்கு தெரியாமலே கட்டியிருக்கிறார்கள் என்று அடித்து விடுகின்றார்.

இன்னும் முக்கியமான சில சந்தேகங்கள் எல்லாம் இருக்கின்றது. அதை பற்றி விவாதித்தால் இந்த புத்தகத்தை படிப்பவர்களுக்கு கதையோட சுவராஸ்யம்/சஸ்பன்ஸ் போய்விடும் என்பதால் இக்கட்டுரையை இத்தோடு முடிப்பதே உத்தமம்.