ஒரு சில நாட்களாக The pissing Tanker அப்படின்னு ஒரு யூடியூப் லிங் ஒன்று முகப்புத்தகத்தில் உலா வருகின்றது. ஒரு லாரி நிறைய தண்ணீர் நிரப்பிக்கொண்டு யாரவது பாதை ஓரத்தில் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தால் அவர்கள் மேல் தண்ணீரை பீச்சி அடித்து நனையவைத்துக் படமாக்கி யூடியூப்பிலும் பதிவேற்றியிருந்தார்கள். அதனை நிறைய பேர் முகப்புத்தகத்திலும் பகிர்ந்தார்கள். அவர்கள் என்ன நினைத்து லைக் அல்லது பகிர்ந்தார்கள் என்று எனக்கு புரியவில்லை. அதை பார்த்ததும் ஒரு சில விசயங்களை சொல்ல கை பரபரத்தது. அப்புறம் வேண்டாம் என்று முடிவுசெய்து தட்டச்சி செய்ததை அழித்தும் விட்டேன்.
ஆனால் இன்று அதனை மீண்டும் தட்டச்சு செய்யும் சூழ்நிலை வந்துவிட்டது. ஒரு சிறிய விசயத்திற்காக தைபேயில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். காத்திருக்கும் இடத்தில் ஒரு பெரிய டீவியில் TTV செய்தி ஓடிக்கொண்டிருந்தது. சரியா 9:35 ஆவது நிமிடத்தில் அந்த யூடிப்பை அப்படியே ஒளி பரப்பினார்கள். காத்திருக்கும் இடத்தில் ஒரு 20 பேராவது இருந்திருப்போம். அந்த யூடியூப் படம் முடியும் வரைக்கும் தலை கவிழ்ந்தே இருந்தேன். உண்மையாகவே சிறுநீர் கழித்து தண்ணீரால் அடிவாங்கியவனை நினைத்து மிகவும் வருத்தமாக இருந்தது. அதனை படம் எடுத்து யூடியூப்பில் வெளியிட்டவனை நினைத்து எரிச்சல்/கோபம் எல்லாம் வந்தது.
"க்லீன் இந்தியா" இதுதான் அவர்களோட கோசம். நீ ஒன்னுக்கு அடிச்சா, நான் தண்ணீர் அடிப்பேன். இது தான் அவர்களோட தாரக மந்திரம்.
ஒரு முறை திருநெல்வேலி வழியாக ஊருக்கு போகும் பொழுது சிறுநீர் முட்டிக்கொண்டுவந்தது. ஊர் போய் சேர்வதற்கு இன்னும் இரண்டு மணிநேரமாவது ஆகும். திருநெல்வேலியில் பஸ்டாண்ட் அப்பொழுது ஊருக்குள் இருந்தது. அந்த பஸ்டாண்டில் ஒரு கழிவறையை பார்த்ததும் இயற்கை உபாதையை சரிசெய்யலாம் என்று போனேன். வாசலிலே இருந்த ஒருவனிடம் 1 ரூபாய் கொடுத்துவிட்டு உள்ளே செல்ல காலை வைத்தேன். உண்மையாக செல்கிறேன், அங்கு இருந்த நிலவரத்தை பார்த்ததும் உள்ளே போக மனமே வரவில்லை. அங்கு அடித்த ஒரு வித வீச்சம் வேறு குடலை பிடுங்கி கொண்டு வாந்தி வருவது போலிருந்தது. இயற்கை உபாதையை கழிக்காமலே ஓடி வந்து பஸ்ஸில் உட்கார்ந்துகொண்ட்டேன். அடுத்த இரண்டு மணி நேரம் நான்பட்ட கஷ்டம் சொல்லிமாளாது. வெளியே வரும்பொழுது கழிவறைக்கு வெளியே ஒருத்தர் சுவர் பக்கமாக திரும்பி தன் உபாதையை கழித்துக்கொண்டிருந்தார். சுத்தி நிறைய சனங்கள் நடமாடிக்கொண்டிருந்தார்கள். ஆசை வெட்கமறியாது என்பார்கள். அவசரமும் வெட்கம் அறியாது.
சிறுநீர் கழிக்க 1 ரூபாய் கட்டணம் வாங்குகின்றாயே உன்னால் அதனை சுத்தமாக வைத்துக்கொள்ள தெரியாதா. நீ சுத்தமாக வைத்திருந்தால் அவன் ஏன் கழிவறை இருந்தும் வெளியில் சிறுநீர் கழிக்கிறான். நகராட்சியோ/ மாநகராட்சியோ இந்த மாதிரி கழிவரைகளை சில இடங்களில் கட்டிவைத்து ஏலம் விடுவதோடு தங்கள் பணி முடிந்துவிட்டதாக நினைத்து ஒதுங்கி விடுகின்றார்கள். அதனை அவர்கள் எப்படி பராமரிக்கிறார்கள் என்று பார்ப்பதில்லை. அவர்களுக்கு வரவேண்டிய கட்டிங் வந்ததும் அவர்களோட பணி முடிந்துவிட்டது.
வெளிநாடுகளில் அனைத்து பூங்காக்களிலும் கழிவறை வசதி இருக்கும். அதுவும் சுத்தமாக இருக்கும். தைவானில் அனைத்து கன்வீனியன்ஸ் ஸ்டோர்களிலும் (7/11, ஃபேமிலி மார்ட், ஹைலைஃப்) கழிவறை இருக்கும். அங்கு போய் நாம் கழிவறையை உபயோகிக்க வேண்டும் என்றால் உடனே எங்கு இருக்கிறது என்பதை காண்பிப்பார்கள். அப்படி அந்த கடையில் இல்லை என்றால் பக்கத்தில் எந்த கடைகளில் இருக்கிறது என்றாவது சொல்லுவார்கள். நாம் அந்த கடைகளில் எதுவும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. கழிவறையை உபயோகித்துவிட்டு ஒரு நன்றியை சொல்லிவிட்டு வந்து கொண்டே இருக்கலாம். அவர்கள் நன்றி கூட எதிர்பார்ப்பதில்லை என்பது வேறு விசயம். குறிப்பாக கழிவறையை உபயோகிப்பது முற்றிலும் இலவசம்.
எதற்கெடுத்தாலும் வெளிநாட்டோடு ஒப்பிட்டு பார்ப்பதில் எனக்கும் உடன்பாடில்லைதான். ஆனால் நீங்கள் "க்லீன் இந்தியா" வேண்டும் என்று கூப்பாடு போடும் பொழுது அதற்கு உரிய அடிப்படை வசதிகூட இல்லாத ஒரு விசயத்தை இப்படி தான் ஒப்பிட்டு பார்க்க வேண்டி இருக்கின்றது.
சென்னையையே எடுத்துக்கோங்க, சென்னையின் நீண்ட சாலைகளில் எத்தனை கழிவறைகள் இருக்கின்றன. அதில் எத்தனை சுத்தமாக இருக்கின்றது. சென்னையில் இருக்கின்ற சிறு கடைகளில் எல்லாம் கழிவறை வசதி இருக்கின்றதா?. அப்படி வசதியில்லாத போது அதில் வேலை செய்பவரக்ள் எல்லாம் எங்கு போய் இயற்கை உபதையை சரிசெய்வார்கள்?. சென்னையில் இருக்கின்ற பூங்காக்கள் அனைத்திலும் கழிவறை வசதியிருக்கின்றதா? ஆசியாவின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான சென்னை மெரினா கடற்கரையில் எத்தனை இடத்தில் கழிவறை வசதியிருக்கிறது?. அது அங்கு வருபவர்கள் அனைவருக்கும் போதுமானதாக இருக்கின்றதா? கோயம்பேடு கழிவறை சுத்தமாக இருக்கின்றதா? சென்ரல் ஸ்டேசன் கழிவறை சுத்தமாக இருக்குதா? இந்த யூடியூப் மும்பையில் எடுத்தது என்று செய்திகள் சொல்கின்றன. இவர்கள் தண்ணீர் அடித்த தெருக்களில் அல்லது பக்கத்து தெருக்களில் இலவச கழிவறை இருக்கின்றதா?. இப்படி எத்தனயோ இருக்கின்றதா? கேள்விகள். இப்படி எந்த வித வசதியும் இல்லாத போது, "க்லீன் இந்தியா" என்கின்ற உங்க கூப்பாடே சரியில்லேயே?
இந்தியாவில் பொதுக் கழிப்பிடம் நிறைய கட்டி வைத்துவிட்டு அதுக்கப்புறம் அவன் பொதுப்பாதையில் சிறுநீர் கழித்தால் தண்ணீர் அடிங்க அல்லது ஆசிட் அடிங்க. அத யூடியூப்பில் போட்டு மானத்தை வாங்குங்க. அப்போ எந்த பிரச்சனையும் இல்லை. அப்படி எந்த வசதியும் செய்துகொடுக்காமல், நீ சிறுநீர் கழித்தால் உன் மீது தண்ணீர் அடிப்பேன் அதை படம் பிடிப்பேன் என்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.
இந்த படம் எடுத்தவனை அல்லது அமைப்பினரை பிடித்துவந்த லிட்டர் கணக்குல தண்ணீர் குடிக்கவைத்து சிறுநீர் முட்டிக்கிட்டு வரும்பொழுது சென்னையில் மவுண்ட் ரோட்டிலோ அல்லது பெரிய நகரங்களின் மிக நீண்ட பதைகளிலோ கொண்டு போய் விட்டுட்டா அவனுக்கு அதன் வலி தெரியும்.
நீங்க லாரி நிறைய தண்ணீர் நிரப்பி, தெரு எல்லாம் ரோந்து வந்து தண்ணீர் அடிக்க செலவு செய்த காசில், ஒரு தெரு அல்லது ரோட்டை தத்து எடுத்து அந்த தெரு/ரோட்டில் ஒரே ஒரு இலவச கழிவறையாவது கட்டிவைத்து அதற்கு ஒரு ஆளை போட்டு பாராமரித்து, பாதை ஓரத்தில் சிறுநீர் கழிப்பவர்களிடம் அங்கு கழிவறை இருக்கு அங்கு போய் உங்கள் உபாதையை கழியுங்கள் என்று கூறி, அதனை யூடியூப்பாக்கி பதிவேற்றியிருந்தீர்கள் எனறால் பாராட்ட படவேண்டிய விசயம். அல்லது அரசாங்கத்திடம் போராடி தெருவுக்கு தெருவு இலவச சுத்தமான கழிவறை கட்ட வைத்திருந்தால் அதற்கு உங்களுக்கு பாராட்டு விழாவே நடத்தலாம்.
அதுவும் பண்ண மாட்டோம், இதுவும் பண்ணமாட்டோம், ஆனால் தண்ணீர் மட்டும் பீச்சி அடிப்போம், அதை படம் எடுத்து யூடியூப்பில் போட்டு மானத்தை தான் வாங்குவோம் என்றால் போங்கடே நீங்களும் உங்க "க்லீன் இந்தியாவும்".
Well said
ReplyDelete