அப்பொழுது ஒரு ஹோட்டலின் 13 வது மாடியில் தங்கி இருந்தேன். 2007-ஆம் ஆண்டு தைவான் வந்த புதிதில் வீடு கிடைக்காமல் ஹோட்டலில் தங்க வைத்திருந்தார்கள். ஜெட் லாக் இருந்த சமயம் அது. சென்னை நேரத்துக்குத் தான் தூக்கம் வரும். அன்று இரவும் 12 மணிக்கு மேல் தான் தூங்க சென்றேன். நல்ல தூக்கத்தில் கட்டிலானது தொட்டில் போல் அங்கேயும் இங்கேயும் ஊஞ்சல் ஆடியது. கண்ணைத் திறந்து பார்த்தால் கட்டிடமே ஆடிக்கொண்டிருந்தது. அதில் என்னுடைய கட்டில் ஆடிய ஆட்டத்தைப் பார்த்துப் பயத்தில் எழுந்து நின்றேன். என்னால் நிற்க முடியவில்லை. காணாத குறைக்கு ஒரு விதமான மயக்கம் வேறு. கட்டிலில் தொப்பென்று விழுந்தேன்.
தைவானில் உள்ள 101 மாடி கட்டிடத்தில் உள்ள அமைப்பு. கட்டிடம் ஆடும் பொழுது மையஈர்ப்பு விசயை விட்டு விலகாமல் இருக்க இப்படி ராட்ச குண்டுகள் சில மாடிகளில் வைத்திருக்கின்றார்கள். |
நிலநடுக்கம் வரும் பொழுது கட்டிலுக்கு அடியில் அல்லது மேஜைக்கு அடியில் போய்ப் பதுங்க சொல்லுவார்கள். ஏதாவது உடைந்து விழுந்தால் நம் மீது நேரடியாக விழாது. தைவானில் இருக்கும் கட்டிலில் எல்லாம் நம் ஊரில் உள்ள கட்டில் போன்று உயரமான கால்கள் இருக்காது. தரையோடு இருக்கும். அதன் இடைவெளியில் ஒரு எலி வேண்டுமானால் நுளையலாம். கட்டிலை விட்டுக் கொஞ்சம் தூரமாகச் சிறிய மேஜை இருந்தது. இந்த ஆட்டத்தில் அதனை நோக்கி போவது எல்லாம் குதிரை கொம்பு. கட்டிடத்தில் இருந்து கட கட என்று சத்தம் வேறு வந்து பயத்தை அதிகப்படுத்தியது. அப்பொழுது தான் ஒரு யோசனை வந்தது. ஏதாவது ஒரு லின்டல்(குறுக்காக வரும் கான்கிரீட் பில்லர்) க்கு கீழே போய் நின்று கொண்டால் ஏதாவது உடைந்தால் முதலில் அது கொஞ்சமேனும் தாங்கிக்கொள்ளும் என்று தோன்றியது. உடனே கட்டிலுக்குப் பக்கத்தில் லின்டல் இருக்கின்றதா என்று தேடினால், அறையையும், குளியல் அறையயும் பிரிக்கப் போட்டிருந்த லின்டல் இருந்தது. சுவர் போகக் கொஞ்சம் வெளிபக்கமாக நீட்டிக்கொண்டிருந்தது. சரி அதற்குக் கீழே(??) போய் நிற்கலாம் என்று கட்டிலை விட்டு எழுந்து இரண்டு கையையும் விரித்துச் சுவரை ஆவிகெட்டியாகப்(!) பிடித்துகொண்டு நின்றுகொண்டேன்.
கட்டிடம் ஆடுவதோ நின்ற பாடில்லை. பயம் வேறு ஆட்டிப்படைத்தது. "தரை பொத்துக்கொண்டு கீழே போயிட்டா" அப்படி என்று என்னும்பொழுதே பயம் பந்து போல அடிவயிற்றில் உருண்டு மேல வந்தது. தெரியாத ஊருல இப்படி அனாதையா வந்து மாட்டிக்கொண்டோமே. ஒன்னு கெடக்க ஒன்னு ஆச்சின்னா என்ன பன்னுறது என்ற எண்ணம் அலைமோதியது. வீட்டில் உள்ள அனைவரும் ஒவ்வொருவாரா கண்ணுக்குள் வந்து சென்றார்கள். ஆனால் இத்தனை களோபரத்திலும் வெளியே நிலநடுக்கம் வருகின்றது என்பது போன்ற ஒரு சத்தம் கூடக் கேட்க வில்லை. நாம் மட்டும் தான் இந்தத் தளத்தில் தங்கி இருக்கின்றோமோ என்ற எண்ணம் வேறு பயத்தை அதிகரித்தது. நம் ஊராக இருந்தால் போடுகின்ற கூச்சலிலே பாதிப் பயம் போய்டும்.
ஒரு வழியாகக் கட்டிட ஆட்டம் குறைந்து. சுவரை ஆவிகட்டி நிற்பதை விடுத்து மெதுவாகக் கட்டிலில் உட்கார்ந்தேன். கீழே தரைதளத்திற்கு சென்றுவிட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. ஒரு டி-ஷர்ட் எடுத்துப் போட்டுக்கொண்டு கதைவை திறந்து வெளியே எட்டிப்பார்த்தேன். காரிடாரில் ஒருவர் ஏணியைப் பிடித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஏணியின் மேலோ இன்னொருவர் நின்று ஆணி அடித்துக்கொண்டிருந்தார். நிலநடுக்கம் நின்று முழுவதுமாக 1 நிமிடம் கூட இருக்காது. அதற்குள் இவர்கள் எப்படி வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். ஓரு வேலை நாம் தான் கனவு எதாவது கண்டு பயந்துவிட்டோமா என்று தோன்றியது. எதற்கும் அவர்களைக் கேட்டுவிடலாம் என்று மெதுவாக நடந்து அருகில் சென்றேன்.
ஏணியைப் பிடித்துக் கோண்டிருந்தவர் ஏற்கெனவே தெரிந்தவர் தான். ஹோட்டலில் வரவேற்பரையில் சில நேரங்களில் இருப்பார். கொஞ்சம் ஆங்கிலம் வேறு பேசுவார். அவரிடம் நீங்கள் தற்பொழுது ஏதாவது உணர்ந்தீர்களா என்று கேட்டேன். ஆம், நிலநடுக்கம் வந்தது என்றார். மேலே இருப்பவர் மீண்டும் ஆணி அடித்துக்கொண்டிருந்தார்.
சரிதான், என்று திரும்பி வந்து கட்டிலில் படுத்து தூங்க ஆரம்பித்தேன்.
குறிப்பு: நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலின் படி கிட்டதட்ட 6.5 என்று நினைக்கிறேன். அடுத்த நாள் நண்பர்கள் அனைவரும் தாங்கள் அனைவரும் பயத்தில் ரோட்டிற்கு வந்துவிட்டதாகவும், கண நேரம் ரோட்டிலே இருந்ததாகவும் கூறினார்கள். உணமையாகவே மரணபயத்தை உண்டாக்கிய ஒரு நிகழ்வு அது.
No comments:
Post a Comment