Tuesday, December 23, 2014

கடலும் கிழவனும்



  எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய "The old man and the Sea” என்ற நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு “கடலும் கிழவனும்”. சிறிது நாட்களுக்கு முன்னர் ஒரு இருபது பக்கம் வாசித்தேன். கதையில் அப்படி ஒன்றும் ஈர்ப்பு இருப்பதாக தெரியவில்லை. தமிழ் கதைகள் போல் இல்லாமல வாசிக்கும் போதே மொழி பெயர்ப்பு நூல் என்பதை சொல்லாமல் சொல்லியது. அதனால் மூடிவைத்துவிட்டு வேறு வேலை பார்க்க போய்விட்டேன்.

   இன்று எதேச்சையாக கண்களில் மீண்டும் தட்டுப்பட்டது. சரி முயற்சித்து பார்க்கலாம் என்று மீண்டும் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பித்தேன். அடுத்து ஒரு பத்து பக்கங்கள் தாண்டியதும் கதை அப்படியே உள்ளே இழுத்துவிட்டது. வேறு வேலை எதுவும் செய்ய தூண்டாமல் ஒரே மூச்சில் வாசிக்க தூண்டியது.

  ஒரு கிழ மீனவன் இருக்கிறான். அந்த வயதிலும் கட்டுமரத்தில் போய் மீன்பிடிக்கிறான். சிறுவன் ஒருவன் சிறிதுநாட்கள் துனைக்கு இருக்கிறான். கிழவனும் சிறுவனும் ஒன்றாக மீன் பிடிக்க செல்கிறார்கள். கிழவனோ அதிர்ஷ்டக்கட்டை. சிறுவனின் பெற்றோர்கள் அவனை வேறு படகில் மீன்பிடிக்க சொல்கிறார்கள். அவனும் வேறு வழியில்லாமல் வேறு படகுக்கு சென்றாலும் அவ்வப்போது வந்து கிழவனை கவனித்துக்கொள்கிறான். கிழவனுக்கு மீன்கிடைத்து அன்றோடு எண்பத்தி நான்கு நாட்கள் ஆகின்றது. 

  எண்பத்தைந்தாம் நாள் கருக்கலிலே எழுந்து சிறுவனோடு கடற்கரைக்கு வரும் கிழவன் எப்படியும் இன்று பெரிய மீனை பிடித்துவருவேன் என்று கடலுக்குள் தனியாக செல்கிறான். ஆழ்கடலுக்கு சென்று தூண்டிலை போட்டு காத்திருக்கிறான்.  மதியத்திற்கு மேல் சுமார் 120 ஆள் ஆழத்துக்குள் போட்ட தூண்டில் லேசாக அசைகிறது. மீனோ இரையை கடிப்பதும் விடுவதுமாக இரண்டு மூன்று முறை போக்கு காட்டுகின்றது. அது முழுவதுமாக இரையை விழுங்க காத்திருக்கிறான். அது முழு இரையை விழுங்கி தூண்டிலில் மாட்டியதும் தான் புரிகிறது தான் எப்பேர் பட்ட ஆபத்தில் இருக்கிறோம் என்று. கிழவனுக்கும் அந்த மீனுக்கும் இடையில் நடக்கும் உயிர் போராட்டம் கதையாக விரிந்து நம்மையும் அப்படியே கட்டிப்போடுகின்றது. 

  மேலே சொன்ன கதை சுருக்கம் முதல் 30 பக்கத்துக்குறியது, மொத்தம் 130 பக்கம். மீதியை வாய்ப்பிருப்போர் புத்தகத்தில் படித்துவிடுங்கள்முடிவை வெண்திரையில், மன்னிக்கவும் புத்தகத்தை படித்து தெரிந்துகொள்ளுங்கள். 

1954 ஆம் வருடம் நோபல் பரிசு பெற்ற நாவல்.

Monday, December 15, 2014

திருகார்த்திகை தீபம்

  தென் தமிழகத்தில் திருகார்த்திகை என்றாலே இரண்டு விசயம் கண்டிப்பாக இருக்கும். முதலாவது கொழுக்கட்டை அதுவும் பனை ஓலையில் செய்த கொழுக்கட்டை. இரண்டாவது வீட்டை சுற்றி விளக்கு வைப்பது. கொஞ்சம் விடலை பசங்க இருந்தா மூன்றாவதாக சொக்க பனை.



  திருகார்த்திகை அன்று காலையில் எழுந்ததும் நமக்கு கொடுக்கிற முக்கியமான வேலையே எங்கேயாவது இரண்டு சருவை பனை ஓலை வாங்கிட்டு வந்துரு என்பது தான். ஒரு சருவை ஓலை என்பது ஒரு பனை மட்டையில் உள்ள ஓலையில் பாதிக்கும் கொஞ்சம் குறைவு. இரண்டு சருவை ஓலை என்றால் கிட்ட தட்ட முக்கால்வாசி ஓலை. ஆனால் ஒரே மட்டையில் இரண்டு சருவை ஓலையை வெட்டமாட்டார்கள். முத்தின ஓலையில் கொழுக்கட்டை செய்தால் கொழுக்கட்டையில் இலைவாசம் அதிகமாக இருக்கும். கொஞ்சம் குருத்தோலை அல்லது சமீபத்தில் வெளிவந்த ஓலை தான் வெட்ட வேண்டும். அப்படி பார்த்தால் அதிகபட்சமாம 4 ஓலை தான் தேரும். அதற்கு மேல் வெட்டினால் அது மரத்தை மொட்டை அடிப்பதற்கு சமம்

  எங்கள் ஊரில் அப்பாவும் பிள்ளையுமாக இரண்டு பேர்தான் பனையேருவார்கள். காத்தாலே அவங்க வீட்டுக்கு போய் அம்மா சருவை ஓலை கேட்டார்கள் என்று கேட்டால், தம்பி நீங்க சாயங்காலம் 3 மணிக்கு வாங்க அப்போ தான் ஓலை வெட்ட போவேன் என்று சொல்வார். எனக்கு இரண்டு சருவை ஓலை வேண்டும் என்று சொன்னால் எல்லோரும் கேக்கறாங்க, மரத்துல இருக்குறத தான் தரமுடியும். வாங்க பாப்போம் என்று பொடிமட்டையிலிருந்து கொஞ்சம் பொடியை எடுத்து பல்லில் தேய்த்தவாரே சொல்வார்.

  நான் படித்தது கிருஸ்தவ பள்ளிக்கூடம் என்றாலும் திருகார்த்திகைக்கு மதியத்துக்கு மேல் விடுமுறை விட்டுவிடுவார்கள். பள்ளியிலிருந்து சைக்கிளை மிதித்தால் நேரே அவரோட வீட்டில் தான் போய் நிற்கும். ஏற்கெனவே அங்கு பத்துக்கும் மேல் ஆட்கள் நிற்பார்கள். எங்க ஊரில் சர்கார் பனை மரங்கள் கொஞ்சம் உண்டு. அங்க போய் எந்த எந்த மரத்தில் வெட்டலாம் என்று முதலிலே கணக்கு பண்ணி ஒரு மரத்தில் ஏறுவார். நாங்கெல்லாம் பனை மரத்திலிருந்து கொஞ்சம் தள்ளி நின்று எப்போடா ஓலைய போடுவாரு என்று பாத்துக்கொண்டிருப்போம். அவர் மெதுவா மேலே ஏறி வாகா ஒரு மட்டைய புடிச்சி உச்சானிக்கு போய் நின்னுபார். அதுக்கப்புறம் எந்த ஓலைய அறுக்கலாம் என்று நோட்டம் விட்டு, காலை மற்றி மாற்றி ஒவ்வொரு மட்டையா தாண்டி ஓலை அறுக்கும் மட்டை கிட்ட வந்து எவ்வளவு வெட்டலாம் என்று பார்த்து தன்னிடம் இருக்கும் பாலை அரிவாளால் வாகா மேல வச்சி கீழ் நோக்கி லேசா ஒரு இழுப்பு இழுப்பார். ஒரு சருவை ஓலை சட்டுன்னு கீழ் நோக்கி வரும். அது கீழே விழுந்ததும் ஓடிப்போய் எடுத்துக்கிடனும். கொஞ்சம் பிந்தினாலும் அடுத்த ஆள் எடுத்துப்பாங்க. நானெல்லாம் எப்போ குருத்தோலைய வெட்டி போடுவாருன்னு பார்த்திக்கிட்டு நிப்பேன். அவர் குருத்தோலைய வெட்டுறது தெரிஞ்ச உடனே ஓடுறதுக்கு ரெடியா நின்னுப்பேன். அத மட்டும் கைல எடுத்து போடுவாரு. அண்ணா இந்த பக்கம் போடுங்க என்று சின்னதா ஒரு சத்தம் குடுத்தா சில நேரம் நம்மை நோக்கி வரும். நமக்கு வேண்டிய ஓலை கிடைத்ததும் அந்த இடத்தை காலிசெஞ்சிடனும்.

  ஓலைய கொடுத்தஉடனே நம்மள அத்தோட விடுவாங்களா என்றால் அது தான் கிடையாது. இதை கொஞ்சம் வெட்டி கொடுத்திட்டுபோ என்பார்கள். ஓலைய ஏடு பிரித்து (இரண்டு இலைகள் சேர்ந்து நீளமாக இருப்பது) முக்கால் அடி நீளத்துக்கு ஒரு தூண்டாக நறுக்கனும். நீளமான ஏட்டில் இரண்டு துண்டுகள் வரைக்கும் நறுக்கலாம். இல்லை என்றால் ஒன்று மட்டுமே. ஓலை கிழிந்துவிடாமல் கவனமாக வெட்டனும். மீதி இருக்குற கழிவு ஏட்டில் இருந்து கட்டுவதற்காக நூல் மாதிரி கிழித்து வைக்கனும்.

  பச்சரிசியை நனையவச்சி இடிச்சி பெருங்கண் சல்லடையாள் (மாவு பரபரன்னு இருக்கும்) சலிச்சி வச்சிக்கனும். கிராமங்களில் கொழுக்கட்டை முன்றுவித சுவைகளில் செய்வார்கள். சர்க்கரையில் (அச்சுவெல்லம்) செய்த கொழுக்கட்டை கொஞ்சம் வெளீரிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். சீனியில் செய்த கொழுக்கட்டை வெண்மையாக இருக்கும். கருப்பட்டியில் செய்தது கொஞ்சம் அடர் பிரவுன் நிறத்தில் இருக்கும். மூன்றின் சுவையும் வெவ்வேறானவை. இதற்கு மேலும் சுவைக்காக தேங்காய்பூ, சிறுபயத்தம் பருப்பு, ஏலக்காய் எல்லாம் சேர்துக்கலாம். இடித்தமாவோடு தேங்காய்ப்பூ, பயத்தம் பருப்பு, ஏலக்காய் சேர்த்து அதோடு சீனி, சர்க்கரை, கருப்பட்டியை தனித்தனியாக விரசி (கலந்து) கெட்டியா வச்சிப்பாங்க. கொஞ்சம் மாவு கலவையை எடுத்து நறுக்கி வைத்த பனை ஏட்டில் சரியாக மத்தியில் வைச்சி, இன்னொரு இலையால் மூடனும். மூடினதும் நூல் போல் கிழித்துவைத்திருந்த பனை இலக்கை (ஒலை) வைத்து கட்டி தனியாக வைக்கனும். இதுல கொஞ்சம் டெக்னிக்கல் விசயம் எல்லாம் இருக்கு. மாவுக்கலவையில் நிறைய நீர் விடக்கூடாது. அடுத்து ஓலையில் மாவும் நிறைய வைக்க கூடாது. கட்டிய ஓலையை நீராவியில் போட்டு வேக வைக்கும் பொழுது அதனுளிருக்கும் சர்க்கரை, சீனி, கருப்பட்டி மூன்றும் உருக ஆரம்பிக்கும் அப்பொழுது மாவோடு சேர்ந்து இரண்டு பக்கமும் சிறிது தூரம் ஓடும். அதிகமான மாவும், அதிகமான தண்ணீரும் மாவை ஓலையை விட்டு வெளியே தள்ளிவிடும். மாவு வைத்து கொடுக்கும் வேலைக்கு என்னைய கூப்பிட மாட்டாங்க. நமக்கு கையும் வாயும் சும்மா இருக்காது. வச்சிமுடிக்கிறதுக்குள்ள கால்வாசி மாவு காணாம போய்டும். எனக்கு கொடுக்குற டிபார்ட்மெண்ட், மாவு ஓலைய இன்னொரு ஒலைய வச்சி மூடி கட்டு போடறது தான். எல்லா ஓலையையும் வச்சி கட்டி முடிச்சதும் மீதி ஏதாவது மாவு இருந்தா அதில் மா(வு)விளக்கு வைப்பார்கள்.


  இரண்டடி  உயரம் உள்ள ஒரு பானைய எடுத்து அதுக்குள்ள வைக்கிற கொழுக்கட்டை ஓலை கீழே இறங்காம இருக்க கால்வாசி பானையில சிறிய கம்பு வைத்து ஊடுகட்டி, அதுக்குள்ள நறுக்கி உபயோகமில்லாமல் போன ஓலைய போட்டு பரப்பி, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, கொழுக்கட்டை ஓலைய அடுக்கி வச்சி துணிய வச்சி வண்டுகட்டி அதுக்கு மேல ஒரு மூடிய போட்டு அடுப்பில் வச்சிட்டா, நீராவியிலே வெந்துடும். வெந்ததும் ஓலைய பிரிச்சி கொழுக்கட்டைய உடைஞ்சிடாம தனியா எடுத்து ஒரு தட்டில் வச்சி முதல்ல சாமிக்கும், பிறகு முன்னோருக்கும் படச்சிட்டு, ஆசாமிகிட்ட நீட்டுனா உடனே காலியாயிடும். பொதுவா கொழுக்கட்டைய அடுத்தநாள் சாப்பிட்டா சுவை அதிகமா இருக்கும்.

 இந்த வேலை நடந்துக்கிட்டு இருக்குறப்பவே, இன்னொருபக்கமாக வீட்டை அலங்காரம் செய்யும் வேலையும் நடக்கும். வேற ஒன்னும் இல்ல வீட்டுக்குள்ள அங்க அங்க மாக்கோலம் போட்டு வைப்பாங்க. இந்த மாக்கோலம் போடுறது கூட ஒரு கலை தான். பச்சரிசிய ஊறவச்சி அம்மியில மை போல அரைக்கனும் கூடவே கொஞ்சம் மஞ்சளும், நிறத்திற்காக. மை போல அரச்ச அரிசியில நீர் சேர்த்து கொஞ்சம் கட்டியாவும் கட்டியா இல்லாத மாதிரியும் கலக்கி வச்சிக்குவாங்க. சிறிய வெள்ளை துணியை எடுத்து இந்த கலவையில முக்கி பெருவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் பிடித்து கோலம் போடனும். இந்த கோலம் ஒரு ரெண்டு வாரத்துக்கும் மேலே அழியாம இருக்கும். அதுக்கு அப்புறமும் கோலம் போட்ட தடம் அந்த இடத்தில் இருக்கும். அடுத்து பப்பாளி மரத்தில் இருந்து நல்ல இளம் பிச்சி இலையா ஒரு இலைய பறிச்சி இலையும் காம்பும் சேரும் இடத்துல சின்ன அளவு வட்டமா வெட்டிக்கிட்டு, நரம்பு தவிர உள்ள இருக்குற பச்சை இலையை வெட்டி எடுத்துக்கணும். இது எதுக்குன்னு கேக்கறியலா, இத அப்படியே அந்த கலைவையில தொட்டு கதவில் ஒரு அமுத்து அமுத்தி எடுத்தா கதவில் ஒரு நட்சத்திரம் இருக்குற மாதிரி தெரியும். அதுக்கு நடுவுல ஒரு குங்கும பொட்டு. இப்படி கதவுல நல்லா இடம் விட்டு வச்சா பார்க்க அழகா இருக்கும். எங்க வீட்டுல எல்லா கதவையும் இந்த மாதிரி அலங்காரம் செய்யவேண்டியது என்வேலை. கதவு நிலைக்கு எங்க அம்மா கையில மாவை எடுத்து ஒரு பட்டை போடுவாங்க அதுக்கு நடுவுல நான் ஒரு குங்கும பொட்டை வைக்கனும் அவளோ தான். இது முடிஞ்சதும் முன்வாசல், வராண்டா, தார்சா என்று எல்லா இடத்திலும் அகல் விளக்கு (மெழுகுவர்த்தி) பொருத்தி வச்சிட்டா கார்த்திகை தீப அலங்காரம் முடிஞ்சிது.

அடுத்தது சொக்கப்பனை. நல்லா இருட்டுனதும் ஊருல இருக்குற கோவிலுக்கு முன்னாடி சொக்க பனை ஏத்தனும். ஒரு 8 அடி நீளமான கம்பு அல்லது தென்னம்மட்டைய ஒலை இல்லாம எடுத்துக்கனும். காய்ந்த பனை ஓலைய கொய்து (சின்ன சின்னதா நீளவாக்கில்) வச்சிக்கனும். இப்போ பனை ஒலையை தென்னமட்டையில வச்சி கட்டணும். முதல் கட்டு உச்சியில வச்சி கட்டணும். அடுத்த கெட்டு அதுக்கு அடியில வச்சி கெட்டனும். கிட்ட தட்ட பூ இதழ் இருக்குமே அதுமாதிரி ஒரு ஒரு வட்டமா வச்சி கீழ ஒரு 2 அடி இடம் விட்டுட்டு கட்டணும். அப்படி கட்டும் போது நடு நடுவுல சில்லாட்டைய (பனை மட்டையின் கீழ் வலை போன்று மரத்தை கவ்வி பிடிக்க இருக்கும் ஒரு அமைப்பு) வச்சிக்கனும் கூடவே கொஞ்சம் உப்பு. இதை ரொம்ப இருக்கி கெட்ட கூடாது. கட்டுன மாதிரியும் இருக்கனும், கட்டாத மாதிரியும் இருக்கனும். இத எங்கூரு பிள்ளையார் கோவில் முன்னாடி சின்னதா குழி தோண்டி நிக்கவைக்சிர வேண்டியதுதான். 7 மணிக்கு கோவில் பூசை முடிஞ்சதும் பூசாரி ஒரு கற்பூரத்தை கொளுத்தி நீட்டுவார், அதுல இன்னொரு ஓலைய (கைப்பந்தம்) நீட்டி தீ வாங்கி அப்படியே நட்டு வச்சிருக்க சொக்க பனையின் மேல் பாகத்தில் (உச்சியில) நெருப்ப வச்சிடனும். மெதுவா எரிஞ்சிகிட்டே வரும். நாம் உப்பு போட்டு வச்சிருப்போமே அங்க வந்ததும் இந்த உப்பு  எல்லாம் வெடிக்க ஆரம்பிக்கும் அது வெடிக்கும் போது இதுவரைக்கும் எரிஞ்சி கனகனன்னு இருக்கும் ஒலை எல்லாம் நெருப்பு பொரியா பறக்கும். அடுத்து சில்லாட்டை வர்ர இடமும் அப்படி நெருப்பு பொரி பறக்கும். கும்மிருட்டுள சொக்கபனை மட்டும் எரியும் அப்போ அப்போ நெருப்பு பொரி (புஸ்வானம்) பறக்கும். பார்க்கறதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும். சின்ன பசங்க எல்லாம் கார்த்திகை மாசம் சிவ்வோடோ சிவ்வன்னு சத்தம் போடுவாங்க. இந்த சிவ்வக்கு என்ன அர்த்தமின்னு என்ன கேட்டுறாதீங்க. எனக்கும் இதுவரைக்கும் அர்த்தம் தெரியாது.


எங்க தாத்தா-பூட்டன் காலத்துல பாதி பனைமரத்த வெட்டி வச்சி எரிப்பாங்களாம், ராத்திரி பூரா நின்னு எரியுமாம். இப்படி பனைய வெட்டி எரிச்சதால இதற்கு பெயர் சொக்கபனை. சொக்கன் பனை என்பது மருவி சொக்கப்பனை ஆகியிருக்கவும் வாய்ப்பிருக்கு. என்னோட சின்ன வயசுல பனைக்கு பதிலா பனை ஓலை வச்சி கொளுத்துனோம். இப்போ ஒரு பனை இலைக்கை (ஓலையில் ஒரு இலை) கூட கொழுத்த முடியாது. ஏன்னா இப்போ பனைமரமே இல்லப்பா!



குறிப்பு : அடுத்தநாள் காலையிலே கொழுக்கட்டை பரிமாற்றங்கள் வேறு நடக்கும். சுற்றத்தார் வீட்டுக்கு கொடுக்குறதும் அவங்க நமக்கு கொடுக்கறதும், ஏன் இவங்க வீட்டுல கொலுக்கட்ட இவ்வளவு சின்னதா இருக்கு, ஏன் இனிப்பே இல்லை, ஏன் இவ்ளோ இனிப்பு போட்டுருக்காங்க, இந்த கொழுக்கட்டைய கடிக்க முடியலேயேபல்லு போய்டும் போல இருக்கு என்று எல்லார் வீட்டிலும் அங்கலாச்சிக்குவாங்க. அது ஒரு தனிக்கதை.

படங்கள் உதவி : கூகுளாண்டவர்

Monday, May 12, 2014

க்லீன் இந்தியா - The pissing Tanker

ஒரு சில நாட்களாக The pissing Tanker அப்படின்னு ஒரு யூடியூப் லிங் ஒன்று முகப்புத்தகத்தில் உலா வருகின்றது. ஒரு லாரி நிறைய தண்ணீர் நிரப்பிக்கொண்டு யாரவது பாதை ஓரத்தில் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தால் அவர்கள் மேல் தண்ணீரை பீச்சி அடித்து நனையவைத்துக் படமாக்கி யூடியூப்பிலும் பதிவேற்றியிருந்தார்கள். அதனை நிறைய பேர் முகப்புத்தகத்திலும் பகிர்ந்தார்கள். அவர்கள் என்ன நினைத்து லைக் அல்லது பகிர்ந்தார்கள் என்று எனக்கு புரியவில்லை. அதை பார்த்ததும் ஒரு சில விசயங்களை சொல்ல கை பரபரத்தது. அப்புறம் வேண்டாம் என்று முடிவுசெய்து தட்டச்சி செய்ததை அழித்தும் விட்டேன்.

ஆனால் இன்று அதனை மீண்டும் தட்டச்சு செய்யும் சூழ்நிலை வந்துவிட்டது. ஒரு சிறிய விசயத்திற்காக தைபேயில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். காத்திருக்கும் இடத்தில் ஒரு பெரிய டீவியில் TTV செய்தி ஓடிக்கொண்டிருந்தது. சரியா 9:35 ஆவது நிமிடத்தில் அந்த யூடிப்பை அப்படியே ஒளி பரப்பினார்கள். காத்திருக்கும் இடத்தில் ஒரு 20 பேராவது இருந்திருப்போம். அந்த யூடியூப் படம் முடியும் வரைக்கும் தலை கவிழ்ந்தே இருந்தேன். உண்மையாகவே சிறுநீர் கழித்து தண்ணீரால் அடிவாங்கியவனை நினைத்து மிகவும் வருத்தமாக இருந்தது. அதனை படம் எடுத்து யூடியூப்பில் வெளியிட்டவனை நினைத்து எரிச்சல்/கோபம் எல்லாம் வந்தது.

"க்லீன் இந்தியா" இதுதான் அவர்களோட கோசம். நீ ஒன்னுக்கு அடிச்சா, நான் தண்ணீர் அடிப்பேன். இது தான் அவர்களோட தாரக மந்திரம்.

ஒரு முறை திருநெல்வேலி வழியாக ஊருக்கு போகும் பொழுது சிறுநீர் முட்டிக்கொண்டுவந்தது. ஊர் போய் சேர்வதற்கு இன்னும் இரண்டு மணிநேரமாவது ஆகும். திருநெல்வேலியில் பஸ்டாண்ட் அப்பொழுது ஊருக்குள் இருந்தது. அந்த பஸ்டாண்டில் ஒரு கழிவறையை பார்த்ததும் இயற்கை உபாதையை சரிசெய்யலாம் என்று போனேன். வாசலிலே இருந்த ஒருவனிடம் 1 ரூபாய் கொடுத்துவிட்டு உள்ளே செல்ல காலை வைத்தேன். உண்மையாக செல்கிறேன், அங்கு இருந்த நிலவரத்தை பார்த்ததும் உள்ளே போக மனமே வரவில்லை. அங்கு அடித்த ஒரு வித வீச்சம் வேறு குடலை பிடுங்கி கொண்டு வாந்தி வருவது போலிருந்தது. இயற்கை உபாதையை கழிக்காமலே ஓடி வந்து பஸ்ஸில் உட்கார்ந்துகொண்ட்டேன். அடுத்த இரண்டு மணி நேரம் நான்பட்ட கஷ்டம் சொல்லிமாளாது. வெளியே வரும்பொழுது கழிவறைக்கு வெளியே ஒருத்தர் சுவர் பக்கமாக திரும்பி தன் உபாதையை கழித்துக்கொண்டிருந்தார். சுத்தி நிறைய சனங்கள் ந‌டமாடிக்கொண்டிருந்தார்கள். ஆசை வெட்கமறியாது என்பார்கள். அவசரமும் வெட்கம் அறியாது. 

சிறுநீர் கழிக்க 1 ரூபாய் கட்டணம் வாங்குகின்றாயே உன்னால் அதனை சுத்தமாக வைத்துக்கொள்ள தெரியாதா. நீ சுத்தமாக வைத்திருந்தால் அவன் ஏன் கழிவறை இருந்தும் வெளியில் சிறுநீர் கழிக்கிறான். நகராட்சியோ/ மாநகராட்சியோ இந்த மாதிரி கழிவரைகளை சில இடங்களில் கட்டிவைத்து ஏலம் விடுவதோடு தங்கள் பணி முடிந்துவிட்டதாக நினைத்து ஒதுங்கி விடுகின்றார்கள். அதனை அவர்கள் எப்படி பராமரிக்கிறார்கள் என்று பார்ப்பதில்லை. அவர்களுக்கு வரவேண்டிய கட்டிங் வந்ததும் அவர்களோட பணி முடிந்துவிட்டது.

வெளிநாடுகளில் அனைத்து பூங்காக்களிலும் கழிவறை வசதி இருக்கும். அதுவும் சுத்தமாக இருக்கும். தைவானில் அனைத்து கன்வீனியன்ஸ் ஸ்டோர்களிலும் (7/11, ஃபேமிலி மார்ட், ஹைலைஃப்) கழிவறை இருக்கும். அங்கு போய் நாம் கழிவறையை உபயோகிக்க வேண்டும் என்றால் உடனே எங்கு இருக்கிறது என்பதை காண்பிப்பார்கள். அப்படி அந்த கடையில் இல்லை என்றால் பக்கத்தில் எந்த கடைகளில் இருக்கிறது என்றாவது சொல்லுவார்கள். நாம் அந்த கடைகளில் எதுவும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. கழிவறையை உபயோகித்துவிட்டு ஒரு நன்றியை சொல்லிவிட்டு வந்து கொண்டே இருக்கலாம். அவர்கள் நன்றி கூட எதிர்பார்ப்பதில்லை என்பது வேறு விசயம். குறிப்பாக கழிவறையை உபயோகிப்பது முற்றிலும் இலவசம். 

எத‌ற்கெடுத்தாலும் வெளிநாட்டோடு ஒப்பிட்டு பார்ப்பதில் எனக்கும் உடன்பாடில்லைதான். ஆனால் நீங்கள் "க்லீன் இந்தியா" வேண்டும் என்று கூப்பாடு போடும் பொழுது அதற்கு உரிய அடிப்படை வசதிகூட இல்லாத ஒரு விசயத்தை இப்படி தான் ஒப்பிட்டு பார்க்க வேண்டி இருக்கின்றது.

சென்னையையே எடுத்துக்கோங்க, சென்னையின் நீண்ட சாலைகளில் எத்தனை கழிவறைகள் இருக்கின்றன. அதில் எத்தனை சுத்தமாக இருக்கின்றது. சென்னையில் இருக்கின்ற சிறு கடைகளில் எல்லாம் கழிவறை வசதி இருக்கின்றதா?. அப்படி வசதியில்லாத போது அதில் வேலை செய்பவரக்ள் எல்லாம் எங்கு போய் இயற்கை உபதையை சரிசெய்வார்கள்?. சென்னையில் இருக்கின்ற பூங்காக்கள் அனைத்திலும் கழிவறை வசதியிருக்கின்றதா? ஆசியாவின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான சென்னை மெரினா கடற்கரையில் எத்தனை இடத்தில் கழிவறை வசதியிருக்கிறது?. அது அங்கு வருபவர்கள் அனைவருக்கும் போதுமானதாக இருக்கின்றதா? கோயம்பேடு கழிவறை சுத்தமாக இருக்கின்றதா? சென்ரல் ஸ்டேசன் கழிவறை சுத்தமாக இருக்குதா? இந்த யூடியூப் மும்பையில் எடுத்தது என்று செய்திகள் சொல்கின்றன. இவர்கள் தண்ணீர் அடித்த தெருக்களில் அல்லது பக்கத்து தெருக்களில் இலவச கழிவறை இருக்கின்றதா?. இப்படி எத்தனயோ இருக்கின்றதா? கேள்விகள். இப்படி எந்த வித வசதியும் இல்லாத போது, "க்லீன் இந்தியா" என்கின்ற உங்க கூப்பாடே சரியில்லேயே? 

இந்தியாவில் பொதுக் கழிப்பிடம் நிறைய கட்டி வைத்துவிட்டு அதுக்கப்புறம் அவன் பொதுப்பாதையில் சிறுநீர் கழித்தால் தண்ணீர் அடிங்க அல்லது ஆசிட் அடிங்க. அத யூடியூப்பில் போட்டு மானத்தை வாங்குங்க. அப்போ எந்த பிரச்சனையும் இல்லை. அப்படி எந்த வசதியும் செய்துகொடுக்காமல், நீ சிறுநீர் கழித்தால் உன் மீது தண்ணீர் அடிப்பேன் அதை படம் பிடிப்பேன் என்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.

இந்த படம் எடுத்தவனை அல்லது அமைப்பினரை பிடித்துவந்த லிட்டர் கணக்குல தண்ணீர் குடிக்கவைத்து சிறுநீர் முட்டிக்கிட்டு வரும்பொழுது சென்னையில் மவுண்ட் ரோட்டிலோ அல்லது பெரிய நகரங்களின் மிக நீண்ட பதைகளிலோ கொண்டு போய் விட்டுட்டா அவனுக்கு அதன் வலி தெரியும்.

நீங்க லாரி நிறைய தண்ணீர் நிரப்பி, தெரு எல்லாம் ரோந்து வந்து தண்ணீர் அடிக்க செலவு செய்த காசில், ஒரு தெரு அல்லது ரோட்டை தத்து எடுத்து அந்த தெரு/ரோட்டில் ஒரே ஒரு இலவச கழிவறையாவது கட்டிவைத்து அதற்கு ஒரு ஆளை போட்டு பாராமரித்து, பாதை ஓரத்தில் சிறுநீர் கழிப்பவ‌ர்களிடம் அங்கு கழிவறை இருக்கு அங்கு போய் உங்கள் உபாதையை கழியுங்கள் என்று கூறி, அதனை யூடியூப்பாக்கி பதிவேற்றியிருந்தீர்கள் எனறால் பாராட்ட படவேண்டிய விசயம். அல்லது அரசாங்கத்திடம் போராடி தெருவுக்கு தெருவு இலவச சுத்தமான கழிவறை கட்ட வைத்திருந்தால் அதற்கு உங்களுக்கு பாராட்டு விழாவே நடத்தலாம். 

அதுவும் பண்ண மாட்டோம், இதுவும் பண்ணமாட்டோம், ஆனால் தண்ணீர் மட்டும் பீச்சி அடிப்போம், அதை படம் எடுத்து யூடியூப்பில் போட்டு மானத்தை தான் வாங்குவோம் என்றால் போங்கடே நீங்களும் உங்க "க்லீன் இந்தியாவும்".

Tuesday, January 21, 2014

காண்டா விளக்கு 2.2 - நடுக்கத்தின் சாட்சி (பயம்)

அப்பொழுது ஒரு ஹோட்டலின் 13 வது மாடியில் தங்கி இருந்தேன். 2007-ஆம் ஆண்டு தைவான் வந்த புதிதில் வீடு கிடைக்காமல் ஹோட்டலில் தங்க வைத்திருந்தார்கள். ஜெட் லாக் இருந்த சமயம் அது. சென்னை நேரத்துக்குத் தான் தூக்கம் வரும். அன்று இரவும் 12 மணிக்கு மேல் தான் தூங்க சென்றேன். நல்ல தூக்கத்தில் கட்டிலானது தொட்டில் போல் அங்கேயும் இங்கேயும் ஊஞ்சல் ஆடியது. கண்ணைத் திறந்து பார்த்தால் கட்டிடமே ஆடிக்கொண்டிருந்தது. அதில் என்னுடைய கட்டில் ஆடிய ஆட்டத்தைப் பார்த்துப் பயத்தில் எழுந்து நின்றேன். என்னால் நிற்க முடியவில்லை. காணாத குறைக்கு ஒரு விதமான மயக்கம் வேறு. கட்டிலில் தொப்பென்று விழுந்தேன்.
தைவானில் உள்ள 101 மாடி கட்டிடத்தில் உள்ள அமைப்பு. கட்டிடம் ஆடும் பொழுது மைய‌ஈர்ப்பு விசயை விட்டு விலகாமல் இருக்க இப்படி ராட்ச குண்டுகள் சில மாடிகளில் வைத்திருக்கின்றார்கள்.

நிலநடுக்கம் வரும் பொழுது கட்டிலுக்கு அடியில் அல்லது மேஜைக்கு அடியில் போய்ப் பதுங்க சொல்லுவார்கள். ஏதாவது உடைந்து விழுந்தால் நம் மீது நேரடியாக விழாது. தைவானில் இருக்கும் கட்டிலில் எல்லாம் நம் ஊரில் உள்ள கட்டில் போன்று உயரமான கால்கள் இருக்காது. தரையோடு இருக்கும். அதன் இடைவெளியில் ஒரு எலி வேண்டுமானால் நுளையலாம். கட்டிலை விட்டுக் கொஞ்சம் தூரமாகச் சிறிய மேஜை இருந்தது. இந்த ஆட்டத்தில் அதனை நோக்கி போவது எல்லாம் குதிரை கொம்பு. கட்டிடத்தில் இருந்து கட கட என்று சத்தம் வேறு வந்து பயத்தை அதிகப்படுத்தியது. அப்பொழுது தான் ஒரு யோசனை வந்தது. ஏதாவது ஒரு லின்டல்(குறுக்காக வரும் கான்கிரீட் பில்லர்) க்கு கீழே போய் நின்று கொண்டால் ஏதாவது உடைந்தால் முதலில் அது கொஞ்சமேனும் தாங்கிக்கொள்ளும் என்று தோன்றியது. உடனே கட்டிலுக்குப் பக்கத்தில் லின்டல் இருக்கின்றதா என்று தேடினால், அறையையும், குளியல் அறையயும் பிரிக்கப் போட்டிருந்த லின்டல் இருந்தது. சுவர் போகக் கொஞ்சம் வெளிபக்கமாக நீட்டிக்கொண்டிருந்தது. சரி அதற்குக் கீழே(??) போய் நிற்கலாம் என்று கட்டிலை விட்டு எழுந்து இரண்டு கையையும் விரித்துச் சுவரை ஆவிகெட்டியாகப்(!) பிடித்துகொண்டு நின்றுகொண்டேன்.

கட்டிடம் ஆடுவதோ நின்ற பாடில்லை. பயம் வேறு ஆட்டிப்படைத்தது. "தரை பொத்துக்கொண்டு கீழே போயிட்டா" அப்படி என்று என்னும்பொழுதே பயம் பந்து போல அடிவயிற்றில் உருண்டு மேல வந்தது. தெரியாத ஊருல இப்படி அனாதையா வந்து மாட்டிக்கொண்டோமே. ஒன்னு கெடக்க ஒன்னு ஆச்சின்னா என்ன பன்னுறது என்ற எண்ணம் அலைமோதியது. வீட்டில் உள்ள அனைவரும் ஒவ்வொருவாரா கண்ணுக்குள் வந்து சென்றார்கள். ஆனால் இத்தனை களோபரத்திலும் வெளியே நிலநடுக்கம் வருகின்றது என்பது போன்ற ஒரு சத்தம் கூடக் கேட்க வில்லை. நாம் மட்டும் தான் இந்தத் தளத்தில் தங்கி இருக்கின்றோமோ என்ற எண்ணம் வேறு பயத்தை அதிகரித்தது. நம் ஊராக இருந்தால் போடுகின்ற கூச்சலிலே பாதிப் பயம் போய்டும்.

ஒரு வழியாகக் கட்டிட ஆட்டம் குறைந்து. சுவரை ஆவிகட்டி நிற்பதை விடுத்து மெதுவாகக் கட்டிலில் உட்கார்ந்தேன். கீழே தரைதளத்திற்கு சென்றுவிட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. ஒரு டி-ஷர்ட் எடுத்துப் போட்டுக்கொண்டு கதைவை திறந்து வெளியே எட்டிப்பார்த்தேன். காரிடாரில் ஒருவர் ஏணியைப் பிடித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஏணியின் மேலோ இன்னொருவர் நின்று ஆணி அடித்துக்கொண்டிருந்தார். நிலநடுக்கம் நின்று முழுவதுமாக 1 நிமிடம் கூட இருக்காது. அதற்குள் இவர்கள் எப்படி வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். ஓரு வேலை நாம் தான் கனவு எதாவது கண்டு பயந்துவிட்டோமா என்று தோன்றியது. எதற்கும் அவர்களைக் கேட்டுவிடலாம் என்று மெதுவாக நடந்து அருகில் சென்றேன்.

ஏணியைப் பிடித்துக் கோண்டிருந்தவர் ஏற்கெனவே தெரிந்தவர் தான். ஹோட்டலில் வரவேற்பரையில் சில நேரங்களில் இருப்பார். கொஞ்சம் ஆங்கிலம் வேறு பேசுவார். அவரிடம் நீங்கள் தற்பொழுது ஏதாவது உணர்ந்தீர்களா என்று கேட்டேன். ஆம், நிலநடுக்கம் வந்தது என்றார். மேலே இருப்பவர் மீண்டும் ஆணி அடித்துக்கொண்டிருந்தார்.

சரிதான், என்று திரும்பி வந்து கட்டிலில் படுத்து தூங்க ஆரம்பித்தேன்.
 
 
குறிப்பு: நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலின் படி கிட்டதட்ட 6.5 என்று நினைக்கிறேன். அடுத்த நாள் நண்பர்கள் அனைவரும் தாங்கள் அனைவரும் பயத்தில் ரோட்டிற்கு வந்துவிட்டதாகவும், கண நேரம் ரோட்டிலே இருந்த‌தாகவும் கூறினார்கள். உணமையாகவே மரணபயத்தை உண்டாக்கிய ஒரு நிகழ்வு அது.