Monday, December 23, 2013

மார்கழி திங்கள்

"மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்நாளாம்" என்று பாட்டு பாடும் மார்கழி மாதம் ஆரம்பித்து விட்டது. எனது சிறுவயது மார்கழி மாத அனுபவம் பக்தி பரவசமாகவே கழிந்தது.

எனக்கு அப்பொழுது 10 வயது இருக்கும். எங்கள் ஊரில் முதன் முதலில் மார்கழி மாதத்து பஜனை ஆரம்பித்தார்கள். காலை 4:30 மணிக்கு பஜனை ஆரம்பிக்கும் என்று முதல் நாளே சொல்லிவிட்டார்கள். அப்பொழுது எங்கள் ஊர் அம்மன் கோவிலுக்கு சொந்தமாக மைக்-செட் கிடையாது. வாடகைதான். எங்கள் ஊர் சுடலைமணி அண்ணனோ அல்லது பாஸ்கர் அண்ணனோ தான் மைக் செட் கட்டி இருந்தார்கள். மார்கழி மாதத்தின் முதல் நாள் விடிய காலம் மூன்றரைக்கு ரேடியோ குழாய் "வினாயகனே வினை தீர்ப்பவனே" என்று சத்தமாக பாட ஆரம்பித்தது. திடுக்கிட்டு முழித்து அதன் பின்னர் பஜனையை நினைத்து மனமானது சமாதனமாகியது. கடும் குளிர். வீட்டில் வெண்ணீர் வைத்து கொடுத்தார்கள். அதிகாலை வெண்ணீர் குளியல் உடம்புக்கு இதமாக இருந்தாளும் குளித்து முடித்ததும் பற்கள் தன்னாலே தந்தி அடிக்க ஆரம்பித்தது.
 
எனக்கு முன்னரே கோவிலில் நிறைய பசங்க வந்து நெத்தியில் பட்டை போட்டு, சந்தணம், குங்குமம் வைத்து ரெடியாக இருந்தார்கள். பக்கத்து ஊரில் இருந்து அந்தோணி புலவர் வந்திருந்தார். அவர் ஒரு வில்லு பாட்டு கலைஞர், புலவர். அவர்தான் எங்களுக்கு பாடல் சொல்லிகொடுக்க போகிறார் என்று சொன்னார்கள். எங்கள் ஊரை சேர்ந்த ஒருவர் இரன்டு சிங்கி(ஜால்ரா) உபயம் செய்திருந்தார்கள். அதனை கொஞ்சம் பெரிய பசங்க எடுத்து கொண்டார்கள். ஒருவர் தாம்பாள தட்டு எடுத்துக்கொண்டார். அதில் நிறைய திருநீரும், சூடகமும் இருந்தது. அதில் ஒரு சூடகத்தை தட்டின் ஒரு ஓரத்தில் கொளுத்தி விட்டார்கள். ஒரு சிலரின் கைகளில் திருப்பாவை பாடல் அடங்கிய ஒரு புத்தகம் கொடுத்தார்கள். எனக்கும் ஒன்று கிடைத்தது.
 
எங்கள் ஊர் கோவிலில் ஒரு பெட்ரமாஸ் லைட் இருக்கும். கொஞ்சம் பழசு என்றாலும் இன்று வரைக்கும் நன்றாகவே எரிந்து கொண்டிருக்கிறது. அப்பொழுதெல்லாம் எங்கள் ஊரில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரிரு மின்சார விளக்குகள் தெருவில் எரிந்து கொண்டிருக்கும். நிறைய தெருக்கள் கும்மிருட்டாகவே இருக்கும். பெட்ரமாஸ் லைட் தான் துணை. அதனை ஒருவர் எடுத்துக்கொண்டார். என்னை அந்தோணி புலவரின் அருகே வரச்சொன்னார்கள்.
 
"மார்கழி திங்கள்" என்று முதல் வரியை அந்தோணி புலவர் பாட, பின்னாடி நாங்கள் அனைவரும் "மார்கழி திங்கள்" என்று பின் பாட்டு பாட ஆரம்பித்தோம். எங்கள் ஊர் மார்கழி மாதத்து பஜனை இப்படித்தான் ஆரம்பித்தது. 30 பாடலும் ஒரே ராகம், புலவர் பாட நாங்கள் பின் பாட்டு பாடவேண்டும். 10 நாட்கள் கழித்ததும், பசங்க எல்லாம் நன்றாக பாடுவதற்கு கத்துக்கொண்டார்கள்(!). இனிமேல் அவர்கள் தனியாகவே பாடுவார்கள் என்று கூறி வர மறுத்துவிட்டார். அவரொட ஊர் பஜனையும் அவர் தான் பார்த்துக்கொண்டார். அவரால் இரண்டு ஊரையும் சமாளிக்க முடியவில்லை.
 
அதன் பின்னர் வேறு ஒருவர் பாடல் சொல்லிகொடுத்தார். அதே வருடமே நானும் சொல்லிக்கொடுக்கும் படி ஆனது. அதன் பின்னர் நான் கல்லூரி செல்லும் வரை சொல்லிகொடுத்தேன். நண்பன் நந்தகுமார் தாம்பாள(திருநீரு)தட்டு இன்சார்ஜ் எடுத்துக்கொண்டான்.

முத்தாரம்மன் கோவில் வாசலில் அமிர்தன்
பொதுவாக ஜால்ரா தட்டுபவர்களை "ஜிங்-ஜக்" என்று கிண்டல் செய்வோம். அது தவறான தட்டுதல் முறை என்று எங்களை திருத்தி "ஜிங்-ஜிங்-ஜக்" என்று ஒலி வரும் படி மாற்றி ஜால்ரா அடிக்க சொல்லிக்கொடுத்தவர் அந்தோணி புலவர் தான். எத்தனை பேர் ஜால்ரா அடித்தாலும் ஒரே தாள கதியில் அந்த ஒலி வரும். பிசுறு தட்டாமல் கேட்கலாம். (இங்கு ஜால்ரா என்ற வாத்தியத்தை நேரடியாக சொல்கிறேன். வேறு அர்த்தம் எடுத்தால் கம்பெனி பொறுப்பல்ல.)
 
காலை 4:30 மணிக்கே பஜனை பாடி தெருக்களில் சென்றாலும், கிராமத்து பெண்கள் அதற்கு முன்னரே சாணி தெளித்து வீட்டு முற்றத்தில் அருமையான கோலம் போட்டிருப்பார்கள். மாக்கோலம், புள்ளி வைத்த கோலம், ரங்கோலி என்று வித விதமான கோலம் போட்டு அதன் நடுவில் ஒரு சாணி உருண்டை வைத்து அதன் மீது ஒரு பூவர்சம் பூ வைத்திருப்பார்கள். அந்த இருட்டிலும் அதனை அழித்துவிடாது பதனமாக போக வேண்டும். தப்பி தவறி அழித்துவிட்டால் அப்பொழுது ஒன்றும் சொல்ல மட்டார்கள். காலையில் தெருவில் பார்த்தால் சரியான மண்டக்கப்படி கிடைக்கும்.

சிலர் வீட்டில் பஜனை பாடி வருபவர்களுக்கு கருப்பட்டி காப்பி போட்டு தருவார்கள். கூடவே முறுக்கு, மிக்சர் என்றும் சிலர் வீட்டில் கொடுப்பார்கள். அதனை பஜனை பாடி வருபவர்களுக்கு ஒரு சேவையாக(?) செய்தார்கள். அடியார்க்கு அடியார் சேவை போன்று.
 
கோவிலில் தினமும் சர்கரை பொங்கல் போடுவார்கள். சில நாட்கள் யாராவது நேமிசம் செய்வார்கள். அப்பொழுது பொங்கல், சுண்டல், பழம், தேங்காய் என்று பிரமாண்டமாய் இருக்கும். சம பங்கீடு என்பதை நான் கற்றுக்கொண்ட இடம் எங்கள் ஊர் கோவில் தான். 10 வாழை பழத்தை 10 பேருக்கு பங்கு வைக்கவும், ஒரே ஒரு வாழை பழத்தை 10 பேருக்கு பங்கு வைக்கவும் கற்றுக்கொடுத்த இடம். இன்னும் சிலர் இருக்கின்றார்கள், ஒரே ஒரு வாழை பழத்தை 20 பேருக்கு கூட பங்கு வைப்பார்கள், சிப்ஸ்க்கு சீவுவதை விட மெலிதாக சீவுவார்கள். கோவில்லுக்கு வந்த யாரும் இல்லை என்று போகக்கூடாது என்ற பரந்த மன‌ப்பான்மை.
 
பஜனை ஆரம்பிதத 20 நாட்களுக்குள் வெளிச்சமில்லாமல் இருட்டில் கூட பஜனை பாடிக்கொண்டு செல்லும் அளவுக்கு எங்கள் அனைவருக்கும் திருப்பாவை மனப்பாடமாக தெரிந்திருந்தது. எங்கள் ஊர் ஒரு சிறிய கிராமம் என்பதால் 30 வது பாடல் சரியாக கோவிலில் முடியும் படி இருக்கும்.
 
மாலையானால் ஒரு மைக் வைத்து எல்லோரும் கோவிலிலே தனி ஆவர்தனமும் செய்ததுண்டு. யார் நன்றாக பாடுவது! யார் புதிய பாடல்களை எல்லாம் பாடுகின்றார்கள்! என்று போட்டியே கூட இருக்கும். எங்கள் ஊரிலே ராணி அக்காவுக்கு ஒருவருக்கு தான் அருணகிரி நாதரின் "முத்தை தரு பத்தி" பாடல் பாடத்தெரியும். அவர்கள் எப்பொழுதாவது பாட வந்தால் மைக்கை அவரிடம் கொடுத்துவிட்டு அந்த பாடலை பாட சொல்லி கேட்போம். முத்தம்மை பாட்டி நிறைய கும்மிபாட்டு சொல்லிகொடுப்பார்கள். பாட்டி பாடுவது ஒரு விதமான ராகத்தில் கேட்க இனிமையாக இருக்கும். பாட்டி நல்ல கதை சொல்லி கூட. எங்கள் வீட்டில் இரண்டு நோட்டு புத்தகம் நிறைய பக்தி பாடல்கள் இருந்தது. என்னுடைய சிறுவயதில் அனைத்து பாடல்களையும் பாடியிருக்கின்றேன்.
 
சரி இந்த பழங்கதை எல்லாம் இப்போ எதுக்கு என்கின்றீர்களா?
 
மார்கழி மாதம் ஆரம்பித்ததும் பழைய நினைவுகளின் தாக்கத்தால் "மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்நாளாம்" என்று பாட ஆரம்பித்தேன். "தயவு செஞ்சி நிறுத்துங்கள். கழுதை கூட கொஞ்சம் ராகமா கத்தும்" என்று பின்னாடி இருந்து ஒரு குரல் கேட்டது. "Daddy you scared me" என்று பின்னாடியே ஒரு எசப்பாட்டு வேறு.
 
வாயை மூடிக்கொண்டே யோசிக்க ஆரம்பித்தேன்.
 
நம்ம வாய்ஸ் அவ்ளோளோளோ மோசவா இருக்கு..................!!!!!?

 

2 comments:

  1. நன்றி அபிராமி. உங்கள் அனைவருடைய ஊக்கமும் தான் பழைய நினைவுகளை கிளரி எடுத்து எழுத தூண்டுகின்றது.

    ReplyDelete