Wednesday, December 25, 2013

காண்டா விளக்கு 2.1 - நடுக்கத்தின் சாட்சி (ஆழிப்பேரலை)

இன்றோடு சரியாக ஒன்பது வருடங்கள் ஓடிவிட்டது. அன்று நடந்ததை இன்று நினைத்தாலும் மனம் கனத்துவிடுகின்றது.

வருடம் 2004 மாதம் டிசம்பர் 26 ஆம் நாள். முந்தய நாள் கிருஸ்த்மஸ் கொண்டாட்டம் முடித்து பின் இரவில் தான் படுக்கைக்கு சென்றேன். அப்பொழுது சென்னையில் என்னுடைய சகோதரியின் வீட்டில் தங்கி இருந்து தான் வேலைக்கு சென்று கொண்டிருந்தேன். திருவல்லிக்கேனி நெடுஞ்சாலையில் ஸ்டார் தியேட்டருக்கு நேர் எதிராக இருக்கும் கட்டிடம். கீழே மூன்று தளங்களிலும் சிறிய அலுவலகங்கள் இருக்கும், நான்காம் மாடியில் நாங்கள் மட்டும் இருந்தோம். எனக்கு என்று தனியாக ஓர் அறை. அதில் ஒரு மடக்க கூடிய கயிற்று கட்டில். என்னுடைய சகோதரியின் குழந்தைகளுக்கு என்னோடு விளையாட பிடிக்கும். நான் தான் அதிகமாக விளையாடுவதில்லை. நான் என்னுடைய அறைக்கு வந்துவிட்டால், நான் என்ன செய்கிறேன் என்று ஒளிந்து வந்து பார்த்துவிட்டு செல்வார்கள். 26 ஆம் தேதி காலை சுமார் 6.30 மணியிருக்கும் என்னுடைய கட்டில் ஆடியது. நல்ல தூக்க கலக்கம். என்னுடைய சகோதரி மகள் தான் வந்து கட்டிலை ஆட்டிகொண்டிருக்கின்றாள் என்ற நினைப்பில் கண்களை திறவாமலே "மாமா தூங்கி கொண்டிருக்கின்றேன், நாம் அப்புறமா விளையாடலம், நீ போய் டிவி பார்" என்று சொல்லி முடிக்கவில்லை, மீண்டும் அதே போன்ற ஒரு ஆட்டம். கண்களை வலியக்க திறந்தால் அறையில் யாரும் இல்லை. பின்னர் யார் கட்டிலை ஆட்டியது என்று அப்படியே ஒருக்களித்து பார்த்தால், மீண்டும் கட்டில் ஆடத்தொடங்கியது. முதலில் என்னவோ எதோ என்று பயம் வந்தாலும், கதவை கவனிக்கும் போது அதில் ஒரு சிறு அதிர்வு தெரிந்தது. ஜன்னலை எட்டி பார்த்தால் அதன் கதவும் அன்றாக ஆடியது. இது நிலநடுக்கம் என்ற உணர்வு மூளையை தொட்ட உடனே படுக்கையில் இருந்து எழுந்து அடுத்த அறைக்கு ஓடினேன்.
 
நாங்கள் இருந்த கட்டிடம் கொஞசம் பழையது. எதுவேணும் நடக்கலாம். முதலில் வீட்டில் இருப்பவர்களை எழுப்பி கீழ் தளத்துக்கு அனுப்பவேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கியது. அடுத்த அறைக்கு சென்று நிலநடுக்கம் வந்து கொண்டிருக்கு எல்லோரும் கீழே ஓடுங்கள் என்றேன். அவர்கள் யாரும் நிலநடுக்கத்தை உணரவில்லை. எனக்கோ விளக்கம் சொல்ல நேரமில்லை. எல்லோரும் முதலில் கீழே இறங்குங்கள் என்று கூறி அனுப்பிவிட்டு நானும் கீழே இறங்கி சென்றேன். தரை தளத்தில் ஒரு டீ கடை இருந்தது. சில பேர் நின்று டீ குடித்து கொண்டிருந்தார்கள். டீ மாஸ்டர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். நன்றாக பேசுவார். நாங்கள் எல்லோரும் காத்தாலே கீழே இறங்கியதும் அவர் எங்கு போகின்றீர்கள் என்றார். நிலநடுக்கம் அதான் எல்லோரும் கீழே வருகின்றோம் என்றேன். அவர் நாங்கள் யாரும் உணரவில்லையே என்றார். பக்கத்தில் நின்றவர்களும் நாங்களும் உணரவில்லை என்று சொன்னார்கள். எங்கள் வீட்டை சேர்ந்தவர்கள் அனைவரும் என்னை குறை கூற ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு வேலை நாம் 4ஆம் மாடியில் இருந்ததால் உண்ர்ந்திருப்போம் இவர்கள் கீழே இருந்ததால் உணரவில்லை என்று சமாளித்தேன். ஆனால் யாரும் நம்பியது போல் தெரியவில்லை. மேலும் ஒரு 10 நிமிடம் கீழே நின்று கொண்டிருந்தோம். பக்கத்து தெருவில் இருந்து வந்த ஒருவர், நிலநடுக்கம் அதிகமாக இருந்தது என்று யாரிடமோ உரக்க சொன்னார். அப்பொழுதுதான் எங்கள் வீட்டிலிருந்தவர்களும் டீக்கடையில் நின்றவர்களும் என்னை நம்ப ஆரம்பித்திருந்தார்கள். சிறிது நேரம் கழித்து தொடர் நடுக்கம் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு மேலே வந்தோம்.
 
காலை 9:30 மணிக்கு குளித்துகொண்டிருந்தேன். கச்சா முச்சா என்று கூச்சல் கேட்க ஆரம்பித்தது. என்னுடிய அத்தானிடம் என்ன சத்தம் என்று கேட்டால் கடல் தண்ணீர் உள்ளே வருதாம் அதனால் பிளாட்பாரத்தில் இருப்பவர்கள் அனைவரும் மேலே ஏறி வந்துவிட்டார்கள், அதான் இந்த சத்தம் என்றார். எவனோ ஒருத்தன் நல்லா புரளியை கிளப்பி விட்டுருகான், கடல் தண்ணீர் எப்படி உள்ளே வரும் என்றேன். இல்லை கடல் தண்னீர் உள்ளே வருகின்றதாம், கண்ணகி சிலைய தாண்டி ஸ்டேடியம் பக்கம் வந்திருச்சாம். இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம வீட்டு பக்கம் வந்திடுமாம் என்று சொன்னார்.  டிவியை வச்சி பாருங்க என்றேன். எந்த சானலிலும் இதை பற்றி ஒன்றும் சொல்ல வில்லை என்றார். நாம் போய் என்ன ஏது என்று பார்த்துவிட்டு வருவோம் என்று அவரையும் அழைத்துக்கொண்டு படி இறங்கி கீழே செல்ல ஆரம்பித்தோம்.
 
பிளாட்பாரத்தில் குடியிருந்தவர்கள் அனைவரும் மூன்றாம் மாடிக்கு வந்து நின்றுகொன்டிருந்தார்கள். கூடவே அவர்களுக்கு வேண்டிய சாமான்களும் மூட்டையில் இருந்தது.  கீழே போய் வண்டியை எடுத்து புறப்படும் பொழுது, அவரோ ஒரு சந்துக்குள் போய் அப்படியே சேப்பாக்கம் வழியாக போய்விடலாம் என்றார். நானோ இது தவறான ஐடியா. ஆத்திர அவசரத்துல திரும்பி வரும் போது எதாவது முட்டு சந்துக்குள்ள மாட்டிக்க கூடாது அதனால் கண்ணகி சிலைக்கு எதிர் ரோட்டை பிடித்து(ராயப்பேட்டை ரோடு என்று நினைக்கிறேன்) போகலாம் என்று அந்த வழியாக போக ஆரம்பித்தோம். ரோட்டில் நெரிசலே இல்லை. திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் வந்து கண்ணகி சிலைக்கு போகும் ரோட்டில் திரும்பினோம். அங்கும் நெரிசலே இல்லை. அப்படியே மெதுவாக போய் ஸ்டேடியத்தை தாண்டினோம். ஒரு சொட்டு தண்ணீரும் தெரியவில்லை. பார்த்தீங்கலா எவனோ ஒருத்தன் ஸ்டேடியம் தாண்டி தண்ணீர் வந்துடுச்சி என்று புரளி கிளப்பிவிட்டுடான் என்று அவரிடம் கூறி சிரித்துக்கொண்டே, கண்ணகி சிலை வரைக்கும் போய் பார்த்துவிட்டு வரலாம் என்று மேலும் வண்டியை ஒட விட்டோம். வண்டி பறக்கும் ரயில் பாலத்தையும் தாண்டிவிட்டது, ஒரு சொட்டு தன்ணிர் கூட தெரியவில்லை. அப்படியே போய்கொண்டிருந்தோம். கண்ணகி சிலைக்கு முன்னாடி ஒரு சின்ன விளையாட்டு மைதானம் இருக்கும். அங்கு நிறைய பேர் கிரிக்கெட் விளையாடுவார்கள். அந்த இடம் வந்ததும் போலீஸ்கார்ர் ஒருவர் குறுக்கால ஓடி வந்து வண்டியை நிறுத்தினார்.
 
அங்கு வண்டி போகாது, நீ இங்க நிறுத்தி நடந்து போ என்றார். அப்பொழுதுதான் எதோ ஒன்று நடந்திருக்கு என்ற என்னம் லேசாக மனதிற்குள் தோன்றியது. ஆனால் மக்கள் சொன்ன மாதிரி அந்த இடத்தில் இருந்து பார்த்தால் தண்ணீரும் தெரியவில்லை வேறு விபரீதம் நடந்த அடையாளமும் தெரியவில்லை. ஒரே ஒரு வித்தியாசம். விடுமுறை நாட்கள் என்றால் காலை முதல் மாலை வரை ஜே ஜே என்று இருக்கும் அந்த விளையாட்டு மைதானம் ஈ ஓட்டிக்கொண்டிருந்தது. வண்டியை ஒரு ஒரமாக நிறுத்திவிட்டு கண்ணகி சிலை நோக்கி மெதுவாக நடக்க ஆரம்பித்தோம்.

கண்ணகி சிலைக்கு மிக அருகில் வரும்பொழுது ரோட்டின் இரு பக்கமும் நன்றாக பார்க்க முடிந்தது. முதன் முதலாக ரோட்டின் மத்தியில் ஒரு மோட்டார் வைத்து ஓடக்கூடிய கொன்சம் பெரிய மீன் படகு கவிழ்ந்து கிடந்தது. ஆனால் ரோட்டில் ஒரு துளி தண்ணீர் இல்லை. இது எப்படி இங்கு வந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டே மேலும் முன்னேறினோம்.
 
காமராஜர் சாலையானது கடற்கரை மணல் பரப்பிலிருந்து மூன்று, நான்கு அடிகள் உயரமாக இருக்கும். அதனால் ரோட்டின் இந்த கரையில் வந்து பார்த்தால் தான் நன்றாக தெரியும். இந்த கரையில் வந்து பார்த்தால் பீச் கன்னா பின்னா என்று என்று இருந்தது. படகுகள் ரோட்டின் ஓரமாக குவிந்து கிடந்தன. கார்கள் தலைகுப்பற உருண்டு கிடந்த்தன. இந்திய கடற்கரை பாதுகாப்பு கப்பல் ஒன்று மெரினா கடலின் கரைக்கு அருகே நின்று கொண்டிருந்தது. கடலுக்குள் இருந்து ஒரு ஹெலிகாப்டர் வெளியே வந்து கொண்டிருந்தது. அதில் கயிற்றில் எதோ தொங்கிகோன்டிருந்தது. அது சடலமாக இருக்க கூடும்(அடுதத நாள் செய்திகளில் ஹெலிகாப்டர் கொண்டு கடலுக்குள் இருந்து சடலம் எடுத்ததாக போட்டிருந்தார்கள்).
நான் செல்லும் பொழுது கடலானது அதன் வழக்கமான எல்லைக்குள்ளே இருந்தது. இத்தனை களோபரத்திலும் நம் மக்கள் கடற்கரையில் கடல் அலையில் நின்று கொண்டிருந்தார்கள். கடல் வழக்கம் போல் இல்லாமல் ஓங்கரித்துக்கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்தில் ஒரு பெருத்த அலை வருவது போன்றிருந்தது. கடற்கரையில் நின்ற மக்கள் ரோட்டை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தார்கள். நீங்கள் நம்புவீர்களா இல்லயா என்று எனக்கு தெரியவில்லை. கடற்கரைக்கும் - ரோட்டிற்கும் இடையில் குறைந்தது ஒரு 300 மீட்டர் இடைவெளி இருக்கும். அந்த இடைவெளியை கடல் அலை நிர‌ப்ப எடுத்துக்கொண்ட கால அளவு வெறும் 3 - 4 வினாடிகள் மட்டுமே. ரோடு உயரமாக இருந்ததால் அதனை தாண்டி வரவில்லை. நடுவில் கிடந்த படகு கார்கள் எல்லாம் அந்த அலையில் அடித்து வரப்பட்டு ரோட்டின் கரையில் மோதின. எவ்வளவு வேகத்தில் வந்ததோ அதே வேகத்தில் கடல் அலை மீண்டும் உள்வாங்கியது. உள்வாங்க ஒரு 30 வினாடிகள் எடுத்துக்கொண்டு மீண்டும் அதன் எல்லையில் போய் நின்று கொண்டது. நான் அங்கு ஒரு 30 நிமிடங்கள் நின்று கொண்டிருந்தேன். அதற்குள் நான்கு முறை ஆழிப்பேரலை வந்து ரோட்டை தொட்டு விட்டு சென்றது.


பின் அலையின் உக்கிரமே இப்படி இருக்கும் என்றால் முன் அலை(முதல் ஆழிப்பேரலை) எவ்வளவு வேகத்தில் வந்திருக்கும். அதன் தாக்கமே முகப்பெரிய படகு நடு ரோட்டில் கிடந்தது. நடைபயிற்சி சென்றவர்கள், கிரிக்கெட் விளையாடிய விடலை பசங்க என்று ஒட்டு மொத்தமாக சூறையாடியது. ஆனால் இது எதனையும் உணராமல் குறைந்தது ஒரு 50 பேர் பின் அலைகளில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அலை வரும் பொழுது வெளியே ஒடி வருவதும் அலை வடிந்ததும் மீண்டும் கடற்கரைக்கு செல்வதுமாக. அவர்களுக்கு எல்லாமே விளையாட்டு தான்.
 
பொய், யாரோ ஏமாற்றுகின்றார்கள் என்று திரும்ப திரும்ப கூறிக்கொண்டே வந்த நான் கனத்த இதயத்துடன் வீடு திரும்பினேன். திருப்பிய சானல் எல்லாம் இதனையே ஒளிபரப்பினார்கள். அடுத்து நாள் வந்த செய்தித்தாள்களை எல்லாம் மனம் கொண்டு படிக்க முடியவில்லை. சென்னை, கடலூர், நாகூர், வேளாங்கண்ணி, வேதாரண்யம் என்று கடற்கரைகள் அனைத்தும் சின்னாபின்னமாயின. வித விதமான காட்சிகள் செய்திகளாக பட்டிருந்தன. செய்திதாளை பார்துக்கொண்டிருந்த போது மாமல்லபுரத்தில் இருந்த தமிழ்நாடு டூரிசம் டெவெலப்மெண்ட் கார்பரேசனுக்கு செந்தமான ரிசாகட் முழுவதுமாக அழிந்தது என்று படத்தோடு போட்டிருந்தார்கள். பக் என்றது. சரியாக 7 நாட்கள் முன்னர் அதே ஞாயிறு அன்று சுமார் 250 பேர் அங்கு தங்கியிருந்தோம். நான் தங்கி இருந்த கட்டிடம் முழுவதுகாக கடலுக்கு இரையாகியிருந்தது.

நிறைய பேர் வீடு, வாசல், சொந்தம் என்று இழப்புகள் மிக மிக‌ அதிகம். மீட்புபணிகள் ஒரு வாரத்துக்கு சிறப்பாகவே நடந்தது என்று நினைக்கிறேன். அந்த சம்பவத்திற்கு பின்னர் இரண்டு முறை ஆட்சி மாற்றம் நடந்துவிட்டது. ஆனால் அவர்களுக்குறிய நிவாரணம் சரியாக சென்றடைந்ததா என்பது தான் தெரியவில்லை.

                                                                                                                        தொடரும்...
படங்கள் உதவி : கூகுளாண்டவர்
 

Monday, December 23, 2013

மார்கழி திங்கள்

"மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்நாளாம்" என்று பாட்டு பாடும் மார்கழி மாதம் ஆரம்பித்து விட்டது. எனது சிறுவயது மார்கழி மாத அனுபவம் பக்தி பரவசமாகவே கழிந்தது.

எனக்கு அப்பொழுது 10 வயது இருக்கும். எங்கள் ஊரில் முதன் முதலில் மார்கழி மாதத்து பஜனை ஆரம்பித்தார்கள். காலை 4:30 மணிக்கு பஜனை ஆரம்பிக்கும் என்று முதல் நாளே சொல்லிவிட்டார்கள். அப்பொழுது எங்கள் ஊர் அம்மன் கோவிலுக்கு சொந்தமாக மைக்-செட் கிடையாது. வாடகைதான். எங்கள் ஊர் சுடலைமணி அண்ணனோ அல்லது பாஸ்கர் அண்ணனோ தான் மைக் செட் கட்டி இருந்தார்கள். மார்கழி மாதத்தின் முதல் நாள் விடிய காலம் மூன்றரைக்கு ரேடியோ குழாய் "வினாயகனே வினை தீர்ப்பவனே" என்று சத்தமாக பாட ஆரம்பித்தது. திடுக்கிட்டு முழித்து அதன் பின்னர் பஜனையை நினைத்து மனமானது சமாதனமாகியது. கடும் குளிர். வீட்டில் வெண்ணீர் வைத்து கொடுத்தார்கள். அதிகாலை வெண்ணீர் குளியல் உடம்புக்கு இதமாக இருந்தாளும் குளித்து முடித்ததும் பற்கள் தன்னாலே தந்தி அடிக்க ஆரம்பித்தது.
 
எனக்கு முன்னரே கோவிலில் நிறைய பசங்க வந்து நெத்தியில் பட்டை போட்டு, சந்தணம், குங்குமம் வைத்து ரெடியாக இருந்தார்கள். பக்கத்து ஊரில் இருந்து அந்தோணி புலவர் வந்திருந்தார். அவர் ஒரு வில்லு பாட்டு கலைஞர், புலவர். அவர்தான் எங்களுக்கு பாடல் சொல்லிகொடுக்க போகிறார் என்று சொன்னார்கள். எங்கள் ஊரை சேர்ந்த ஒருவர் இரன்டு சிங்கி(ஜால்ரா) உபயம் செய்திருந்தார்கள். அதனை கொஞ்சம் பெரிய பசங்க எடுத்து கொண்டார்கள். ஒருவர் தாம்பாள தட்டு எடுத்துக்கொண்டார். அதில் நிறைய திருநீரும், சூடகமும் இருந்தது. அதில் ஒரு சூடகத்தை தட்டின் ஒரு ஓரத்தில் கொளுத்தி விட்டார்கள். ஒரு சிலரின் கைகளில் திருப்பாவை பாடல் அடங்கிய ஒரு புத்தகம் கொடுத்தார்கள். எனக்கும் ஒன்று கிடைத்தது.
 
எங்கள் ஊர் கோவிலில் ஒரு பெட்ரமாஸ் லைட் இருக்கும். கொஞ்சம் பழசு என்றாலும் இன்று வரைக்கும் நன்றாகவே எரிந்து கொண்டிருக்கிறது. அப்பொழுதெல்லாம் எங்கள் ஊரில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரிரு மின்சார விளக்குகள் தெருவில் எரிந்து கொண்டிருக்கும். நிறைய தெருக்கள் கும்மிருட்டாகவே இருக்கும். பெட்ரமாஸ் லைட் தான் துணை. அதனை ஒருவர் எடுத்துக்கொண்டார். என்னை அந்தோணி புலவரின் அருகே வரச்சொன்னார்கள்.
 
"மார்கழி திங்கள்" என்று முதல் வரியை அந்தோணி புலவர் பாட, பின்னாடி நாங்கள் அனைவரும் "மார்கழி திங்கள்" என்று பின் பாட்டு பாட ஆரம்பித்தோம். எங்கள் ஊர் மார்கழி மாதத்து பஜனை இப்படித்தான் ஆரம்பித்தது. 30 பாடலும் ஒரே ராகம், புலவர் பாட நாங்கள் பின் பாட்டு பாடவேண்டும். 10 நாட்கள் கழித்ததும், பசங்க எல்லாம் நன்றாக பாடுவதற்கு கத்துக்கொண்டார்கள்(!). இனிமேல் அவர்கள் தனியாகவே பாடுவார்கள் என்று கூறி வர மறுத்துவிட்டார். அவரொட ஊர் பஜனையும் அவர் தான் பார்த்துக்கொண்டார். அவரால் இரண்டு ஊரையும் சமாளிக்க முடியவில்லை.
 
அதன் பின்னர் வேறு ஒருவர் பாடல் சொல்லிகொடுத்தார். அதே வருடமே நானும் சொல்லிக்கொடுக்கும் படி ஆனது. அதன் பின்னர் நான் கல்லூரி செல்லும் வரை சொல்லிகொடுத்தேன். நண்பன் நந்தகுமார் தாம்பாள(திருநீரு)தட்டு இன்சார்ஜ் எடுத்துக்கொண்டான்.

முத்தாரம்மன் கோவில் வாசலில் அமிர்தன்
பொதுவாக ஜால்ரா தட்டுபவர்களை "ஜிங்-ஜக்" என்று கிண்டல் செய்வோம். அது தவறான தட்டுதல் முறை என்று எங்களை திருத்தி "ஜிங்-ஜிங்-ஜக்" என்று ஒலி வரும் படி மாற்றி ஜால்ரா அடிக்க சொல்லிக்கொடுத்தவர் அந்தோணி புலவர் தான். எத்தனை பேர் ஜால்ரா அடித்தாலும் ஒரே தாள கதியில் அந்த ஒலி வரும். பிசுறு தட்டாமல் கேட்கலாம். (இங்கு ஜால்ரா என்ற வாத்தியத்தை நேரடியாக சொல்கிறேன். வேறு அர்த்தம் எடுத்தால் கம்பெனி பொறுப்பல்ல.)
 
காலை 4:30 மணிக்கே பஜனை பாடி தெருக்களில் சென்றாலும், கிராமத்து பெண்கள் அதற்கு முன்னரே சாணி தெளித்து வீட்டு முற்றத்தில் அருமையான கோலம் போட்டிருப்பார்கள். மாக்கோலம், புள்ளி வைத்த கோலம், ரங்கோலி என்று வித விதமான கோலம் போட்டு அதன் நடுவில் ஒரு சாணி உருண்டை வைத்து அதன் மீது ஒரு பூவர்சம் பூ வைத்திருப்பார்கள். அந்த இருட்டிலும் அதனை அழித்துவிடாது பதனமாக போக வேண்டும். தப்பி தவறி அழித்துவிட்டால் அப்பொழுது ஒன்றும் சொல்ல மட்டார்கள். காலையில் தெருவில் பார்த்தால் சரியான மண்டக்கப்படி கிடைக்கும்.

சிலர் வீட்டில் பஜனை பாடி வருபவர்களுக்கு கருப்பட்டி காப்பி போட்டு தருவார்கள். கூடவே முறுக்கு, மிக்சர் என்றும் சிலர் வீட்டில் கொடுப்பார்கள். அதனை பஜனை பாடி வருபவர்களுக்கு ஒரு சேவையாக(?) செய்தார்கள். அடியார்க்கு அடியார் சேவை போன்று.
 
கோவிலில் தினமும் சர்கரை பொங்கல் போடுவார்கள். சில நாட்கள் யாராவது நேமிசம் செய்வார்கள். அப்பொழுது பொங்கல், சுண்டல், பழம், தேங்காய் என்று பிரமாண்டமாய் இருக்கும். சம பங்கீடு என்பதை நான் கற்றுக்கொண்ட இடம் எங்கள் ஊர் கோவில் தான். 10 வாழை பழத்தை 10 பேருக்கு பங்கு வைக்கவும், ஒரே ஒரு வாழை பழத்தை 10 பேருக்கு பங்கு வைக்கவும் கற்றுக்கொடுத்த இடம். இன்னும் சிலர் இருக்கின்றார்கள், ஒரே ஒரு வாழை பழத்தை 20 பேருக்கு கூட பங்கு வைப்பார்கள், சிப்ஸ்க்கு சீவுவதை விட மெலிதாக சீவுவார்கள். கோவில்லுக்கு வந்த யாரும் இல்லை என்று போகக்கூடாது என்ற பரந்த மன‌ப்பான்மை.
 
பஜனை ஆரம்பிதத 20 நாட்களுக்குள் வெளிச்சமில்லாமல் இருட்டில் கூட பஜனை பாடிக்கொண்டு செல்லும் அளவுக்கு எங்கள் அனைவருக்கும் திருப்பாவை மனப்பாடமாக தெரிந்திருந்தது. எங்கள் ஊர் ஒரு சிறிய கிராமம் என்பதால் 30 வது பாடல் சரியாக கோவிலில் முடியும் படி இருக்கும்.
 
மாலையானால் ஒரு மைக் வைத்து எல்லோரும் கோவிலிலே தனி ஆவர்தனமும் செய்ததுண்டு. யார் நன்றாக பாடுவது! யார் புதிய பாடல்களை எல்லாம் பாடுகின்றார்கள்! என்று போட்டியே கூட இருக்கும். எங்கள் ஊரிலே ராணி அக்காவுக்கு ஒருவருக்கு தான் அருணகிரி நாதரின் "முத்தை தரு பத்தி" பாடல் பாடத்தெரியும். அவர்கள் எப்பொழுதாவது பாட வந்தால் மைக்கை அவரிடம் கொடுத்துவிட்டு அந்த பாடலை பாட சொல்லி கேட்போம். முத்தம்மை பாட்டி நிறைய கும்மிபாட்டு சொல்லிகொடுப்பார்கள். பாட்டி பாடுவது ஒரு விதமான ராகத்தில் கேட்க இனிமையாக இருக்கும். பாட்டி நல்ல கதை சொல்லி கூட. எங்கள் வீட்டில் இரண்டு நோட்டு புத்தகம் நிறைய பக்தி பாடல்கள் இருந்தது. என்னுடைய சிறுவயதில் அனைத்து பாடல்களையும் பாடியிருக்கின்றேன்.
 
சரி இந்த பழங்கதை எல்லாம் இப்போ எதுக்கு என்கின்றீர்களா?
 
மார்கழி மாதம் ஆரம்பித்ததும் பழைய நினைவுகளின் தாக்கத்தால் "மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்நாளாம்" என்று பாட ஆரம்பித்தேன். "தயவு செஞ்சி நிறுத்துங்கள். கழுதை கூட கொஞ்சம் ராகமா கத்தும்" என்று பின்னாடி இருந்து ஒரு குரல் கேட்டது. "Daddy you scared me" என்று பின்னாடியே ஒரு எசப்பாட்டு வேறு.
 
வாயை மூடிக்கொண்டே யோசிக்க ஆரம்பித்தேன்.
 
நம்ம வாய்ஸ் அவ்ளோளோளோ மோசவா இருக்கு..................!!!!!?

 

Friday, December 20, 2013

கர்ணனின் கவசம்

கர்ணனின் கவசம் என்று ஒரு தொடர் குங்குமத்தில் வந்து இப்பொழுது புத்தகமாக வருகின்றது. தொடரின் ஏதோ ஒரு அத்தியாயம் படித்தேன். நன்றாக இருந்தது. தொடர்ந்து படிக்க முடியவில்லை. புத்தகமாக படிக்க வேண்டும். ஆனால் இந்த பதிவு அந்த தொடர்/புத்தகம் பற்றியதல்ல. அப்படி என்றால் ஏன் இந்த பதிவு என்று கேட்கின்றீர்களா? கர்ணனுக்கு கவசம் எப்படி வந்திருக்கும் என்று என்னுடைய அனுமானத்தை இங்கு எழுத போகின்றேன்.
 
உபயம் : வலைத்தளம்
 
மாகாபாரதம் என்பதானது நிறைய கிளை கதைகள், கிளை கிளை கதைகளால் ஆன ஒரு பெரிய கதை. மகாபாரதத்தில் சொல்லபடாத எதுவும் புதியதாக நடந்துவிடாது என்று பொதுவாக சொல்லுவார்கள் . ஏனெனில் மகாபாரதம் அத்தனை கிளை கதைகள் கொண்டது. ஆனால் இந்த கவசத்தோட பிறந்த கர்ணனின் கதை போன்று ஒரு நிகழ்வு அதன் பின்னர் நடக்கவே இல்லை. அதற்கு பின்னர் கவசத்தோடு ஒரு குழந்தை கூட இது வரை பிறக்கவே இல்லையா?. இல்லை அப்படி பிறப்பவர்களை நம்மால் அடையாளம் காண முடியவில்லையா?
 
கர்ணனின் கவசத்தை அப்படியே விட்டு விட்டு, கொஞ்சம் கிராமத்து பக்கம் வருவோம். கிராமங்களில், சிறு நகரங்களில் சிலரோட பெயர்கள் பட்டு என்று ஆரம்பிக்கும். பட்டுராஜ், பட்டுகுமார், பட்டுசெல்வி, பட்டுராணி... என்று. ஏன் இவர்களுடைய பெயர் எல்லாம் பட்டு என்று ஆரம்பிக்கின்றது? இந்த பட்டு என்பது தெய்வத்தின் பெயரும் இல்லை. சரி குடும்ப பெயரா என்றால், அதுவும் இல்லை. பின்னர் ஏன் பட்டு என்ற பெயர் வைக்கின்றார்கள். அங்கு தான் ஒரு விசயம் இருக்கின்றது.
 
பொதுவாக குழந்தைகள் பிறந்ததும், அதன் மீது இருக்கும் செடி,கொடிகள் அனைத்தையும் சுத்தம் செய்துவிட்டு பார்த்தால் குழந்தை பளிச்சென்று தெரியும். ஆனால் மிகவும் அரிதாக‌ ஒரு சில குழந்தைகள் மீது பட்டு போன்ற இன்னொரு தோல் மூடியிருக்கும். அதன் உடலின் மீது ஒரு சட்டை கவசம் போன்று ஒட்டி இருக்கும். கிராமங்களில் இதனை சொல்லும் பொழுது குழந்தை பட்டு போட்டு பிறந்திருக்கின்றது என்று சொல்வார்கள். இப்படி பிறக்கும் குழந்தையை மிகவும் அதிர்ஷ்டமாக பார்ப்பார்கள். டாக்டரோ அல்லது செவிலியோ குழந்தையையும்,இந்த மெல்லிய பட்டு போன்ற தோலையும் பிரித்தெடுத்து அந்த பட்டு போன்ற தோலை பாடம் செய்து தாயிடம் தனியாக கொடுத்துவிடுவார்கள். அந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் பொழுது இதனையும் நினைவு கூறும் வகையில் பட்டு என்று ஆரம்பித்து எதோ ஒரு பின் பெயரையும் சேர்த்து வைத்துவிடுவார்கள். இப்படி பட்டு என்று பெயர்வருபவர்களின் வீட்டு பரனியை தேடிபார்தால் இன்றும் அந்த பட்டு தோலை பத்திரமாக பாதுகாத்து வைத்திருப்பதை பார்க்களாம்.
 
இது மனிதனிடம் மட்டுமே அபூர்வமாக நடக்கின்ற விசயமா என்றால் இல்லை. மற்ற விலங்கினங்களிலும் அரிதாக நடக்க கூடிய ஒரு விசயம். எங்கள் வீட்டில் ஒரு மாடு இது போன்ற ஒரு கன்னுகுட்டி போட்டிருந்தது. அதனை எங்கள் வீட்டில் ஒரு டிரேசிங் பேப்பரில்(நகல் எடுக்கும் தாள்) சுற்றி பத்திரமாக பாதுகாத்தோம். அந்த மாட்டை மட்டும் பட்டு என்று செல்ல பெயரிட்டு அழைப்போம். அந்த மாட்டை விற்க்கும் வரைக்கும் எங்கள் வீட்டு பீரோவில் அந்த பட்டை பத்திரமாக வைத்திருந்தார்கள்.
 
இப்பொழுது கர்ணனின் கவசத்துக்கு வருவோம். குந்தி மிக சிறிய வயதில் பெற்ற குழந்தை இந்த கர்ணன். அதுவும் வீட்டு பெரியவர்கள் யாருக்கும் தெரியாது. இந்த குழந்தை கூட பட்டு போட்டு பிறந்திருக்க வேண்டும். சிறிய வயது குந்தியால் அதனை சரியாக பிரித்தெடுக்க முடியாமல் குழந்தையின் உடலோடு விட்டிருக்கலாம். அது பின்னர் உடலோடு ஒட்டி கவசமாக மாறியிருக்க வேண்டும் என்பது என்னுடைய அனுமானம். அதுவே பின்னாலில் கர்ணனின் கவசம் ஆகியிருக்க வேண்டும்.
இக்காலத்தில் அப்படி பிறக்கும் குழந்தையை பிரித்தெடுக்காமல் விட்டால் அதற்கும் கவசம் வர வாய்ப்பிருக்கலாம்.
 
குறிப்பு: இப்படி பட்டு போட்டு பிறப்பதற்கான காரணம் மருத்துவரிதியாக எனக்கு தெரியவில்லை. மேலும் அதை அப்படியே விட்டால் உடலோடு சேர்ந்து வளருமா என்றும் தெரியவில்லை. யாரவது மருத்துவரை கேட்டால் தான் தெரியும்.

Sunday, December 15, 2013

பனிக் காலம்

Old picture from Internet

கூட்டை அடைந்த பறவை போல,
வளைக்குள் ஒளிந்த எலியை போல,
நத்தை ஓட்டுக்குள் சுருண்ட வாழ்கை
வரும் மூன்று திங்களுக்கு!

உள்ளொன்று புறமொன்று அணிந்து,
மேலொரு அங்கி அணிந்து,
கழுத்திலே ஸ்கார்ப் அணிந்து,...
காது மறைக்க குல்லாய் அணிந்து,
கைக்கு விதவிதமாய் கையுறை அணிந்து,
காலுக்கு கம்பளி சாக்ஸ் அணிந்து,
அதன் மேலே ஷு அணிந்து,
இத்தனை அணிந்தும்
உள்ளுடல் சுருக்கி
வெளி செல்ல வேண்டும் கிளியே!
பனிக்காலம் வந்ததடி கிளியே!
வாழ்கை சோம்பல் ஆனதடி கிளியே!


                      Winter 2013 Start already!