Thursday, November 28, 2013

காண்டா விளக்கு 2.0 - நடுக்கத்தின் சாட்சி

சென்னை-அடையாறு சிக்னல் பக்கத்தில் விமானம் இடித்துகொண்டு நிற்பது போன்று ஒரு கட்டடம் இருக்கும். அது தான் பிஸா கார்னர். அதற்குப் பின்புறம் இருக்கும் தெருவில் சென்னையின் புகழ்பெற்ற "சிஸ்யா" பள்ளிக்கூடம் இருக்கின்றது. அதே தெருவில் ஒரு சிறிய வீட்டின் மாடியில் நான் வேலை பார்த்த அலுவலகம் இருந்தது. அந்த வீடு எங்கள் முதலாளியுடையது. அதை அலுவலகமாக மாற்றி வைத்திருந்தார். மொத்தமாக 20 பேர் வேலை பார்க்கக்கூடிய சிறிய அலுவலகம்.

 2001 அல்லது 2002 தொடக்கம் என்று நினைக்கிறேன். சரியான வருடம் நினைவில் இல்லை. ஒரு முக்கியமான வேலையை முடிக்க வேண்டி அனைவரும் இரவு 7 மணிக்கு மேலும் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றோம். எங்களுடிய மேனேஜர் செல்லையா கனிணியில் எதோ பிரச்சனை என்று பார்த்துக் கொண்டிருந்தார். அவர் என்ன செய்கிறார் என்று பார்த்துகொண்டே அவருடன் பேசிக்கொன்டிருந்தேன். திடீரென ஒரு விதமான மயக்கம் வருவது போன்ற ஓர் உணர்வு. அந்த உணர்ச்சி ஒரு நொடி பொழுது என்றாலும் எனக்கு நன்றாகத் தெரிந்தது. உடனே செல்லையாவை திரும்பி பார்த்தேன். அவருக்கும் அதே உணர்வு இருந்திருக்க வேண்டும், என்னைத் திரும்பி பார்தார். சில வினாடிகளில் மீண்டும் ஒரு சிறிய அதிர்வு. இது தான் நிலநடுக்கம் என்று எங்களுக்குப் புரிய ஆரம்பித்ததும் "நிலநடுக்கம் வருகின்றது எல்லோரும் கீழே ஓடுங்கள்" என்று மெலிதான ஒரு கூச்சலிட்டோம் . எங்கள் அலுவலகம் மாடியில் இருந்தது. அங்கிருந்த எல்லோரையும் போட்டது போட்ட படி வெளியேறுங்கள் என்று அனுப்பிவிட்டுக் கடைசியாக டாய்லட்டில் யாரவது இருக்கின்றார்களா என்று பார்த்துவிட்டு நானும் அவரும் கீழே செல்ல ஆரம்பித்தோம்.
 
இது எல்லாம் கிட்ட தட்ட ஒரு 30 விநாடிகளில் நடந்துவிட்ட ஒன்று. நான் முன்னாடி அரை ஓட்டமாகச் செல்கின்றேன். எனக்குப் பின்னர் அவர் கொஞ்சம் வேகமாக நடந்து வந்து கொண்டிருக்கின்றார். மாடிப்படி இறங்கிவந்தால் யாரோ ஒரு புண்ணியவான் இந்தக் களோபரத்திலும் கேட்டை பூட்டிவிட்டு ரோட்டில் போய் நின்று கொண்டிருந்தான். அரைகுறை வேகத்தில் ஓடி வந்த எனக்குக் கேட்டோட கொண்டியை எடுத்து திறந்து விட்டு வெளியே செல்வோம் என்று தோன்றவில்லை. கேட்டில் இரு கைகளையும் ஊன்றி ஒரே குதி, ரோட்டிற்கு வந்து செல்லையா வந்துவிட்டாரா என்று எட்டி பார்த்தேன். அவர் என்னிடம் "ஏன் இப்படி எகிறி குதிச்சி வெளியே போற, கேட் ஏற்கெனவே திறந்து தானே இருக்குது" என்று சொல்லி கொண்டே, கேட்டை இழுத்து திறந்து வெளியே வந்தார். நான் தான் பதட்டத்தில் சரியாகக் கவனிக்காமல் சர்க்கஸ் காட்டியிருக்கிறேன். அந்தத் தெருவில் வசித்த ஒட்டு மொத்த பேரும் ரோட்டில் நின்று கொண்டிருந்தனர். சென்னையில் பல இடங்களுக்கு மின்சார வினியோகம் தற்காலிகமாக நிற்தி வைக்கப்படிருந்தது. அன்றும் அடுத்த நாளும் சென்னை முழுவதும் இதே பேச்சு தான். இது தான் நான் உணர்ந்த முதல் நில நடுக்கம்.

  
                                                  நடுக்கம் தொடரும்....