தைவான் தமிழ் சங்கத்தின் துவக்க தின அன்று வாசிப்பதற்காக ஒரு கட்டுரை தயாரித்த போது தேர்ந்தெடுத்த தலைப்பே "தமிழும் சித்தமருத்துவமும்" தைவானில் நிறைய ஆராய்ச்சி மாணவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் என்றாவது ஒரு நாள் தமிழ் சித்த மருத்துவ ஆராய்ச்சியில் இறங்க மாட்டார்களா என்ற ஆசையே இந்த தலைப்பை தேர்ந்தெடுக்க தூண்டியது. ஆனால் நேரமின்மை காரணமாக அதனை பேச முடியாமல் போய்விட்டது. அதனை கொஞ்சம் செப்பனிட்டு அகத்தொகையில் பதிவு செய்கின்றேன். இக்கட்டுரை என்னுடைய நண்பரும் சித்த மருத்துவருமான திரு. பாபு அவர்களால் எனக்கு சொல்லப்பட்டது. அதனை கட்டுரைவடிவமாக மாற்றியிருக்கின்றேன். இதில் ஏதாவது தவறு இருந்தால் அது என்னுடைய தவறாகவே இருக்கும் என்பதை இங்கு பதிவு செய்கின்றேன்.
தமிழும் சித்தமருத்துவமும்
இந்தியாவில் பழமையான மருத்துவம் என்றால் இரண்டு மருத்துவ முறைகளை சொல்லலாம். முதலாவது சித்தமருத்துவம் அடுத்தது ஆயுர்வேதம். இரண்டிலுமே மூலிகை பயன்பாட்டில் உள்ளது. இதில் சித்த மருத்துவத்தை பற்றி தமிழகம் தவிர்த்து, இந்தியாவில் எங்கு கேட்டாலும் அவர்களுக்கு அதனை பற்றிய புரிதல் குறைவாகவே இருக்கும். ஏனெனில் இது தமிழர்களிடம் மட்டுமே பயன்பாட்டில் உள்ள ஒரு மருத்துவம். அதனால் தான் பல ஆயிரம் வருடங்கள் பழமையான, அகஸ்தியர், நந்தீசர், போகர் என்று சித்தர் பெருமக்களால் போற்றப்பட்ட சித்த மருத்துவமானது ஒரு தமிழ் மருத்துவம் என்று நாம் பெருமை கொள்ளலாம்.
சித்த மருத்துவத்தில் எல்லா விதமான நோயையும் வாதம், பித்தம் மற்றும் கபம் என்ற மூன்று விசயங்களை கொண்டு வைகைப்படுத்திவிடலாம். இந்த மூன்றுக்குள் அடங்காத நோய்களே இல்லை எனாலாம். இதன் கூட்டல் அல்லது குறைதலே நோய். ஒருவருடைய கையை பிடித்து நாடி பார்த்தாலே இந்த மூன்றின் கூட்டல், குறைத்தலை உணர்ந்து கொள்ளலாம்.ஆரோக்கியமான ஒருவனுக்கு காலை, பின்பகல், மாலை வேலைகளில் எந்த எந்த நாடி எப்படி இருக்கும் என்று நம் சித்தர் பெருமக்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள்.
தமிழ் எண் கணிதம்:
உங்களுக்கு எல்லாம் எண் கணிதம் (நியூமராலஜி) பற்றி தெரிந்திருக்கும். தமிழ் எண் கணித வாய்ப்பாட்டு என்ற ஒன்று சித்த மருத்துவத்தில் உள்ளது. இதன் பயன் என்ன என்பதை பற்றி தெரிந்தால் நமக்கு பெரும் வியப்பாக இருக்கும்.ஒரு வியாதியின் பெயர் இருக்கின்றது. அந்த வியாதிக்கு என்ன என்ன மருந்துகளை கொடுக்கலாம் என்று எப்படி தெரிந்தது கொள்வது?. ஒரு மருந்தின் பெயர் இருக்கின்றது. உதாரணமாக பவள பற்பம் என்ற மருந்து இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். இந்த மருந்தை எந்த எந்த நோய்களுக்கு, யார் யாருக்கு எல்லாம் கொடுக்கலாம் என்று எப்படி தெரிந்து கொள்வது?. ஒரு வியாதியஸ்தரின் பெயர் இருக்கின்றது. இதனை வைத்து இவருக்கு இன்ன இன்ன வியாதிகள் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்பதை எப்படி கண்டறிவது? ஒரு வியாதிக்கு ஒரு மருந்து செய்யவேண்டும். என்ன என்ன மூலிகைகளை அதில் சேர்த்தால் அந்த மருந்து வரும் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?.
இவை எல்லாவற்றிகும் பதில் ஒன்றே ஒன்று தான். அது தான் தமிழ் எண் கணிதம். இதனை தெரிந்து கொண்டால் எந்த நோய்க்கும் மருத்துவம் செய்துவிடலாம். ஆனால் இதனை முறையான ஆசானை கொண்டுதான் கற்றுக்கொள்ள முடியும். அதாவது குரு-சிஸ்யன் பாராம்பரியம் போல்.
பரிபாசை :
பரிபாசை என்ற உடன் நமக்கு ஒரு சந்தேகம் வரும். அது என்ன புதியதாக ஒரு பாசை, பரிபாசை? எல்லோருக்கும் தெரிந்த ஒன்றை இன்னொரு பெயரால் குறிப்பிடுவதே பரிபாசை. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் பத்து பேர் ஒரு இடத்தில் இருக்கின்றார்கள். அதில் இரண்டு அல்லது மூன்று பேர் தங்களுக்குள் சில சங்கேத வார்த்தைகள் கொண்டு பேசிக்கொள்வார்கள். அது அவர்களுக்கு மட்டுமே புரியும். சுத்தி நிற்கின்ற மற்றவர்களுக்கு புரியவே புரியாது. கிட்டத்தட்ட மெடிசல் டெர்ம், இஞ்சினியரிங் டெர்ம் என்று சொல்கின்றோமே அது போல, நம் முன்னோர்கள் சொல்லி சென்ற அறுபத்தி நான்கு கலைகளுக்கும் தனி தனியாக சங்கேத மொழி இருக்கின்றது.
சித்த மருத்துவத்துக்கான சங்கேத வார்த்தைகளை பரிபாசை என்று சொல்கின்றார்கள். இது சித்த மருத்துவத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே புரியும். பரிபாசை தெரியாமல் உங்களால் சித்த மருத்துவத்தை ஒரு சதவிகிதம் கூட கற்றுக்கொள்ள முடியாது.அகஸ்தியர் பாடல்களையோ அல்லது போகர் பாடல்களையோ படித்துவிட்டு அவர்கள் சொன்னது ஒன்றும் புரியவில்லை என்று புத்தகத்தை மூடி வைத்துவிட்டு செல்பவர்கள் தான் ஏராளம். இதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு பரிபாசயை பற்றிய விளக்கம் அல்லது புரிதல் இல்லாததே. சித்த மருத்துவத்திற்கான பரிபாசைக்கு நிறைய பேர் அகராதி எழுதியிருக்கின்றார்கள். அதனை முதலில் படித்துவிட்டு சித்த மருத்துவத்துக்குள் சென்றால் சுலபமாக புரியும்.
சித்தர்கள் மூலிகைகள், உடல் உறுப்புகள், வியாதிகள், செயல்கள் அனைத்துக்கும் வேறு பெயர்கள் (பரிபாசை) வைத்திருக்கின்றார்கள். வேலிபருத்தி என்று ஒரு மூலிகை செடி இருக்கின்றது. இது கிராமங்களில் முள் வேலி ஓரங்களில் வளரக்கூடாது. இதன் பரிபாசை பெயர் உத்தா மணி. உங்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒரு செடி கற்றாலை(ஆளு வேரா). இதன் சித்த மருத்துவ பெயர் குமரி. இது போன்று ஒவ்வொரு மூலிகைக்கும் ஒரு மாற்று பெயர் இருக்கின்றது.
பொதுவாக உடல் உறுப்புகளை நாம் ஆங்கிலத்தில் சொல்லி பழகிவிட்டோம். எல்லா உறுப்புகளுக்கும் தமிழில் பெயர் இருக்கின்றது. அதற்கு மாற்று பெயர் சித்த மருத்துவத்தில் இருக்கின்றது.கணையம் என்றவுடன் உங்கள் அனைவருக்கும் நினைவுக்கு வருவது pancreas. இதன் அமைப்பை உற்று பார்த்தால் அது நாயின் வாக்கு போன்ற ஒரு தோற்றத்தை கொடுக்கும். அதனால் நம் சித்தர் பெருமக்கள் அதனை பல இடங்களில் நாய் நாக்கு என்று குறிப்பிட்டிருப்பார்கள். கிட்னி என்றவுடன் சிறுநீரகம் என்று சொல்லிவிடுவோம். ஆனால் அதற்கு மருத்துவபெயர் குண்டிக்காய். சித்தர்கள் அப்படித்தான் எழுதியிருக்கின்றார்கள். நுரையீரல் இதனை காத்தாடி, ஊதுகுழல் என்று குறிப்பிட்டிருப்பார்கள். தண்டுவடத்தின் ஒரு பரிபாசை பெயர் புலி ஏறும் குகை. முடி, மயிர், ரோமம் என்று ஒரு பொருளுக்கு மூன்று வார்த்தைகள் வைத்திருக்கின்றோம். இதில் ஒன்று தமிழ் பெயர். ஒன்று கலோக்கியல் பெயர். ஒன்று பரிபாசை.
மூலிகைக்கும், உடல் உறுப்புகளுக்கு மட்டும் அல்லாமல் ஒரு செயலுக்கு கூட வேறு வேறு பெயர்கள் இருக்கின்றன. உதாரணமாக தொந்தம் என்ற ஒரு வார்த்தை இருக்கின்றது. இதற்கு ஒன்று சேர், இரண்டற கலப்பது என்று பொருள். தணிப்பது என்ற வார்த்தை சித்தர் பாடலில் கூறியிருப்பார்கள். இதற்கும் இரண்டற கலப்பது என்று பொருள். அதாவது செயல் ஒன்று பெயர்கள் வேறு. இரண்டற கலப்பது என்ற செயலுக்கு ஒன்று சேர், தொந்தம், தணிப்பது என்று வேறு வெறு வார்த்தைகள் நம் சித்த மருத்துவத்தில் இருக்கின்றது. இது புரியாமல் சித்த மருத்துவத்தை நம்மால் கற்றுக்கொள்ள இயலாது.
தொடரும்...
No comments:
Post a Comment