Sunday, September 22, 2013

காண்டா விளக்கு 1.1

முதல் பாகம் படிக்காதவர்கள் காண்டா விளக்கு 1.0 வாசித்துவிட்டு இதனை படிக்கவும்.
 
இந்த பணத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். முதலில் எவ்வளவு கட்டவேண்டும் என்று பார்த்துவிட்டு அதற்கு பின்னர் முடிவு செய்வோம் என்று கூறினேன். எனக்கு தெரியும் அந்த 100 ரூபாயை வைத்து டிரான்சிட்டில் போடப்படும் சார்ஜிக்கு சோளப்பொரி வாங்கி கூட போட முடியாது. 100 ரூபாயை தவிர அவரிடம் வேறு எதுவும் இருப்பது போன்றும் தெரியவில்லை.
 
எனக்கு பசிப்பது போன்று இருந்தது. அவரிடம் ஏதாவது சாப்பிடுகின்றீர்களா என்று கேட்டேன். அவர் தான் நோன்பில் இருப்பதாக சொன்னார். அவர் முஸ்லீம் என்பதற்கு இது ஒன்று தான் சாட்சி. இருக்கப்பட்டவன் சாப்பிடாமல் இருந்தால் நோன்பு. இல்லாதவனுக்கு எப்பவுமே நோன்புதான் என்பது எனோ நினைவில் வந்தது. இங்கேயே இருங்கள் கொஞ்ச நேரத்தில் வருகின்றேன் என்று கூறிவிட்டு அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு ஏதாவது சைவம் கிடைக்கின்றதா என்று தேட ஆரம்பித்தேன். சைவத்துக்கு மாறி சில மாதங்களே ஆகின்றது. அதனால் கடை கடையாக விசாரிக்க வேண்டியிருந்தது. எதோ ஒரு சந்துக்குள் இருந்த கடையில் சாண்ட்விச் கிடைத்தது. அதில் இரண்டு வாங்கி கொண்டு ஒரு தண்ணிர் பாட்டலும் வாங்கி கொண்டு மீண்டும் பழைய இடத்திற்கே வந்தேன். அவரிடம் ஒன்று கொடுத்து நானும் ஒன்றை சாப்பிட ஆரம்பித்தேன்.
 
இன்னும் ஒரு மணிநேரம் இருந்தது. அவரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன்.
 
"உங்க சொந்த ஊர் எது" இது நான்.
"சீர்காழி பக்கமுங்க" இது நண்பர்.
"அங்க என்ன வேலை செஞ்சிங்க"
"டீக்கடைங்க"
" டீக்கடையில என்ன வேலை பார்த்திங்க, டீ மாஸ்டரா?"
"சொந்த கடைங்க, டீ மாஸ்டரும் நாந்தாங்க "
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சொந்த கடைய உட்டு போட்டு எதுக்கு வெளிநாட்டுக்கு வேலைக்கு போகின்றார் என்று.
"புருனேலே என்ன வேலை?" இது நான்.
"தெரிஞ்சவுங்க டீக்கடை வச்சிருக்காங்க அங்க வேலைக்கு போறேங்க"
"அங்க போயும் டீக்கடைதான? "ஏன் சொந்த கடையவிட்டுட்டு வெளிநாட்டுக்கு போறிங்க"
"ஊருல  வியாபாரம் கொஞ்சம் சுமார்தாங்க. மூணு பொண்ணுங்க வேற. அதான் என்னோட மாமியார் வெளிநாட்டுல வேலைக்கு அனுப்பரா!"
"வெளிநாட்டுக்கு போறதுக்கு எவ்வளவு செலவு செஞ்சிங்க"
"80 ஆயிரம்ங்க. அதுவும் மாமியார் தான் வட்டிக்கு வாங்கி அனுப்பி வைக்கறாங்க"
"இந்த 80 ஆயிரத்தை வைத்து நிங்க சீர்காழியிலே ஒரு சப்பாடுகடை போட்டுருக்கலாமே"
மாமியா விருப்பபட்டுட்டா! அதனால வெளிநாட்டுக்கு போறேன்.
"புருனேல உங்களுக்கு எவ்வளவு சம்பளம்"
"15 ஆயிரம், தங்கற செலவு நம்மோடது"
"புர்னே ஏர்போட்டிற்கு யாராவது உங்களை கூப்பிட வருவார்களா?"
"எங்க கடை ஓனர் வருவார்"
"அவருக்கு நீங்க விமானத்தை தவற விட்டது தெரியாதே. அவருக்கு தகவல் சொல்ல வேண்டும். அவருடைய போன் நம்பர் இருக்குதா?"
 
ஒரு டைரியில் இருந்த நம்பரை காண்பித்தார். பக்கத்தில ஒரு தகவல் நிலையம் இருந்தது. அங்கு போய் புருனேக்கு ஒரு போன் செய்யவேண்டும். பக்கத்தில் எங்காவது போன் செய்யகூடிய இடம் இருக்கின்றதா என்று கேட்டேன். பக்கத்திலே கால் அண்ட் பெய்டு சிஸ்டம்(நம்ம ஊர் டெலிபோன் பூத்) இருக்கின்றது என்றார்கள். அங்கு சென்று காலியாக இருந்த ஒரு பூத்தில் நுளைந்து புருனேக்கு டயல் செய்தேன். எதிர் பக்கமிருந்து  ஹலோ என்ற குரல் கேட்டது. சிங்கப்பூர் ஏர்போட்டில் இருந்து பேசுகின்றேன். உங்க ஊர்காரர் விமானத்தை தவற விட்டுவிட்டார் என்றேன். அவர் எப்படி தவற விடலாம் என்று கேட்டார். சுரீர் என்று கோபம் வந்தது. அவர் தவற விட்டுவிடார். அடுத்த விமானத்தில் வருவார். ஏர்போர்ட் போய் கூட்டி செல்லுங்கள் என்று விமான நேரம் சொல்லிவிட்டு, ரிசிவரை நண்பரிடம் கொடுத்துவிட்டு பூத்தை விட்டு வெளியே வந்தேன்.
 
எப்படி தவற விட்டான் என்று கேட்டால் பதில் சொல்லலாம். எப்படி தவற விடாலாம் என்பவனிடம் என்ன பேசுவது. உள்ளே அவர் போனில் விளக்கம் சொல்வது தெளிவாக வெளியே கேட்டது. போன் செய்து முடிந்ததும் அங்கிருந்த பெண்ணிடம் என்னிடம் இருந்த அமெரிக்கன் டாலரை கொடுத்து போன் பில் கட்டிய பிறகு மீதி பணத்தை சிங்கப்பூர் டாலராக கொடுத்தாள். அதனை வாங்கி நண்பரின் மேல் சட்டை பையில் வைத்தேன். ஒரு வேளை உங்கள் ஓனர் வரவில்லை என்றால் இந்த பணம் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று கூறிவிட்டு மீண்டும் பழைய இடத்திற்கே வந்து உடகார்ந்தோம்.
 
என்ன நினைத்துக்கொண்டு வந்தாரோ தெரியவில்லை திடீரென்று கேவி கேவி அழ ஆரம்பித்துவிடார். ஊர் பேர் தெரியாத இடத்தில் வந்து பாசை தெரியாம மாட்டிக்கிட்டோமே என்றா அல்லது வீடு வாசல் எல்லாம் விட்டு அநாதை போல் வேறு நாட்டுக்கு போகின்றோமே என்றா தெரியவில்லை. அவர் அழ ஆரம்பித்தது எனக்கு தர்ம சங்கடமாக  இருந்தது. அவரை சமாதான படுத்துவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.
 
மணி 11 . மீண்டும் கவுண்டருக்கு போனோம். அங்கு இருந்தவன் சீட் இருக்கின்றது. ஆனால் பணம் கட்டவேண்டும் என்றான். அவரிடம் பணம் ஏதும் இல்லை. நான் கூட அவருக்கு உதவி செய்ய தான் வந்திருக்கின்றேன். என்னிடமும் பணம் இல்லை. அதனால் பணம் கட்ட இயலாது. தயவு செய்து பணம் இல்லாமல் அவருக்கு ஏற்பாடு செய்து கொடு என்று அவனிடம் நிலைமையை விளக்கி சொன்னேன். அவன் போய் அவனுடைய அதிகாரியிடம் பேசிவிட்டு வந்தது சரி பணம் கட்ட தேவையில்ல என்று சொல்லி சீட் போட்டு கொடுத்தான்.
போர்டிங் பாஸ் வாங்கி கொண்டு அவருடைய கேட்டுக்கு எப்படி போக வேண்டும் என்று வழி சொல்லிவிட்டு போய்விடுவீர்களா என்று கேட்டேன். போய்விடுவேன் என்று சொல்லி அரைகுறையாக தலையை அசைத்தார். எனக்கு இன்னும் அரை மணி நேரம் இருந்தது. சரி நானே கொண்டு போய் விடுகின்றேன் என்று கூறி அழைத்துக்கொண்டு அவருடைய கேட் வாசலில் கொண்டு விட்டேன். கைகளை பிடுத்துக் கொண்டு மறக்க மாட்டேன் என்றார். எனக்கு நேரம் ஆகின்றது நான் வருகின்றேன் என்று மீண்டும் அதற்கு எதிர் திசையில் தொலைவில் இருந்த என்னுடைய கேட்டுக்கு அறைகுறை ஓட்டமாக வந்தேன்.
 
கேட் மூட இன்னும் 15 நிமிடம் இருந்தது. எப்பொழுதும் கேட்டிற்குள் செல்வதற்கு முன்னர் நான் ஏறுவதற்கு உரிய விமானம் தான் இங்கு இருக்கின்றதா என்று பார்த்துவிடுவது வழக்கம். அப்படி பார்த்தால்... திடுக் என்றது ... வேறு ஊருக்கு செல்லும் விமானத்திற்கு உரிய கேட் இது. எங்கயோ தப்பு நடந்திடுச்சி... சென்னையில இருந்து இறங்கியதும் பார்த்தேன். அதற்கு பின்னர் அவர் முதன் முதலில் டிரான்சிட் கவுண்டருக்கு கூட்டிக்கொண்டு சொல்லும் பொழுதும் பார்த்தேன். இந்த கேட் தான் போட்டிருந்தது. நடுவில் அவரோட பேசி கொண்டிருந்த நேரத்துல கேட் மாறியதை கவனிக்கவில்லை. விமான அட்டவணை போட்டிருக்கும் டிஸ்பிலே தேடி புயல் வேகத்துல ஓடினேன். ஒருத்தருக்கு உதவ போய் நாம மாட்டிக்கிட்டோமே என்று மனம் யோசிக்க ஆரம்பித்தது. டிஸ்பிலேயில் போய் பார்த்தல் நண்பரை எங்கு கொண்டு போய் விட்டானோ அதற்கு அடுத்த கேட் என்று போட்டிருந்தது.  அது ஒரு வாங்கல் தூரம் இருந்தது.
 
இன்னும் கேட் மூட 10 நிமிடங்கள் இருந்தது. அங்கிருந்து எடுத்த ஓட்டம் தான். ஆள் இல்லாத இடத்தில் முழு ஓட்டமாகவும் ஆள் இருக்கும் இடத்தில் முக்கால் ஓட்டமுமாக சென்றேன். போகும் வழியில் பல வித நினைவுகள் மனதில் வந்தது. உடம்புக்கு ஒரு வேலையை கொடுத்துவிடால் மனது என்ன வேண்டும் என்றாலும் அதுபாட்டுக்கு யோசிக்க ஆரம்பிக்கும். அது போலதான் அன்றும். உடம்பு அறைகுறை ஓட்டத்திலே இருந்தது,மனம் பலவற்றையும் யோசிக்க ஆரம்பித்தது. விமானத்தை தவற விடால் என்ன செய்வது. அந்த டிரான்சிட்காரன் முகத்துல போய் முழிக்க கூட முடியாதே. லேட் ஆச்சின்னா 10 நிமிடம் தாமதிப்பான் அதுக்கப்புறம் ஏற்றிய பொட்டிய எடுத்து கடாசிட்டு பறந்திடுவான்.
 
 
வழியில் நண்பருடைய கேட்டை தாண்டி செல்லும்பொழுது அந்த வேகத்திலும் உள்ளே பார்த்துக்கொண்டு சென்றேன். கேட் முடியிருந்தது. அவர் பத்திரமாக புறப்பட்டிருப்பார் என்ற எண்ணம் அந்த ஓட்டத்திலும் வந்தது. என்னுடைய விமானத்திற்கான கேட் இன்னும் திறந்திருந்தது. உள்ளே சோதனை செய்பவர்களை தவிர  யாரும் இல்லை. அவசர அவசரமாக  சோதனை முடித்து விமானத்தின் வாயிலுக்கு நடந்ததேன். வாயில் காப்போன் மாதிரி இரண்டு பேர் நின்று வெல்கம் என்றார்கள் அவர்கள் முகமோ உனக்காக காத்திருக்கின்றோம் என்பது போன்றிருந்தது. எந்த பக்கமாக என்னுடைய இருக்கைக்கு செல்ல வேண்டும் என்று வழிகாட்டினார்கள். அந்த பக்கமாக நடக்க ஆரம்பிக்கும் பொழுதே விமானத்தின் கதவை அடைக்கும் சத்தங்க்கள் கேட்க ஆரம்பித்தது. நான் தான் கடைசி பயணி போலும். என்னுடைய இருக்கையில் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.
 
விமானம் கேட்டில் இருந்து புறப்பட ஆரம்பித்தது. அப்பொழுது தான் அவரோட புருனே தொலைபேசி என்னை குறித்து வைக்காமல் போனது நினைவுக்கு வந்தது. அவர் ஓனர் கூப்பிட வருவாரோ மாட்டாரா என்ற எண்ணம் வந்தது. 80 ஆயிரம் செலவு செய்து வெளிநாட்டுக்கு போகின்றவர் உள்ளூரிலே அதனை வைத்து கொஞ்சம் பெரிய கடையாக போட்டிருந்தால் இப்படி கஸ்டப்பட வேண்டிய வேலை இருக்காதே என்ற எண்ணமும் வந்தது. மாசம் 15 ஆயிரம் சம்பளம் வாங்கி, தங்குகின்ற செலவு போக இவர் அனுப்புகின்ற காசை வைத்து கடனை அடைக்க வேண்டும். எப்படியும் கடன் அடைய 1 வருடத்திற்கும் மேல் ஆகும். அதற்கு பின்னர் தான் அவர் சேர்க்க வேண்டும். ஊருக்கு திரும்ப எப்படியும் 2 அல்லது மூன்று வருடங்கள் ஆகிவிடும் என்று நினைவு ஓடி ஆயாசப்படுத்தியது. பிஸினஸ் கிளாசில் சீட் போட்டாவது அனுப்புங்கள் என்று சொல்லியும் எக்கனாமிக் கிளாசில் சீட் போட்டு 6 மணி நேரம் சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்தது இப்படி ஒருவருக்கு உதவி செய்யதான் போலும் என்ற எண்ணம் தோன்றியது. விமானம் ரன்வேயில் ஓடி மூக்கை தூக்கி பறக்க ஆரம்பித்தது.

Thursday, September 19, 2013

காண்டா விளக்கு 1.0

எல்லோருக்குமே நிறைய அனுபவங்கள் இருக்கும். நிறைய மனிதர்களை சந்தித்திருப்பார்கள்.  ஆனால் காலப்போக்கில் அந்த அனுபவங்களையோ அல்லது நாம் சந்தித்த மனிதர்களையோ மறந்து விடுவோம். சில அனுபவங்கள் மறக்கப்படுவதே சிறந்தது. சில அனுபவங்கள் நினைத்து பார்க்கும்பொழுதே நம்முள் ஒரு மகிழ்ச்சியை அல்லது நெகிழ்ச்சியை கொடுக்கும். சில அனுபவங்கள் நமக்கு நல்ல ஒரு பாடத்தை கற்றுகொடுத்திருக்கும். அப்படிபட்ட சிலவற்றை காண்டா விளக்கு என்ற தலைப்பில் இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.
        
 
2006 ஆம் ஆண்டில் இதே அலுவலகத்தின் சென்னை கிளையில் வேலை பார்த்து கொண்டிருந்தேன். அப்பொழுது சில உதவிகளுக்காக ஆண்டின் தொடக்கத்திலும் மத்தியிலும் தைவான் வந்து சென்றேன். ஒருநாள் என்னுடைய துறை தலைவர், உன்னை மறுபடியும் தைவானுக்கு ஒரு வாரம் கூப்பிடுகின்றார்கள். அதுவும் இன்றே அனுப்ப முடியுமா என்று கேட்கின்றார்கள் என்று சொன்னார். அப்பொழுது என்னிடம் பல்நுழைவு கடவு சீட்டு இருந்ததால் எப்போ சொல்கின்றீர்களோ அப்பொழுது புறப்படுகின்றேன் என்றேன். அவரும் நாளைக்கு இரவு கிளப்புவதற்கு உன்னை தயார் செய்து கொள் என்று கூறினார்.
 
சென்னை டு சிங்கப்பூர். சிங்கப்பூர் டு தைவான் செல்லவேண்டும். எப்பொழுதுமே சிங்கப்பூரில் 2 மணி நேரத்திலே அடுத்த விமானம் ஏறுவது போன்று பயணச்சீட்டு கொடுப்பார்கள். இந்த முறை அவசரமாக புறப்பட்டதால் காலை சிங்கப்பூர் டு தைவான் விமானத்தில் இருக்கை கிடைக்கவில்லை. மதியம் 12:20 மணிக்கு புறப்படுகின்ற விமானத்தில் தான் இருக்கை கிடைத்தது. அலுவலக நண்பர்கள் நீ வந்து சில வேலைகள் செய்த பின்னர் தான் கிளையண்டின் வெள்ளிகிழமை பேக்எண்டு வேலையை முடிப்பதாக முடிவு செய்திருக்கின்றோம் என்று சொல்லிவிட்டார்கள். சனிகிழமை தைவான் வந்ததும் வேலை முடியும் வரை எனக்கு ஒய்வு எடுக்க கூட நேரம் இருக்காது. அதனால் சிங்கப்பூரில் ஒய்வு எடுக்க ஏதேனும் ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டதற்கு சிங்கப்பூரில் லவுஞ்சில் சென்று கேள் கொடுப்பார்கள் என்று கூறிவிட்டார்கள். நானும் வழக்கம் போல் தலையாட்டிவிட்டு சென்னையிலிருந்த்து விமானம் ஏறி சிங்கப்பூர் வந்தாகிவிட்டது.
 
 
சிங்கப்பூரில் லவுஞ்சில் சென்று தங்க இடம் கேட்டாள்  அங்கிருந்த பெண்மணி முதலில் உன்னுடைய பயணச்சீட்டை காண்பி என்றார்.  பயணச்சீட்டை பார்த்ததும் இது எக்கானாமிக் வகுப்பு பயணச்சீட்டு இங்கு அனுமதி கிடையாது என்று கூறி விட்டார். இரவு முழுவதும் விமானத்தில் அரை குறையான தூக்கம். தூக்க சடவு வேறு கண்களை அழுத்த ஆரம்பித்தது. இனி இந்த அம்மிணியிடம்  பேசி பயனில்லை என்று லவுஞ்சை விட்டு கீழே வந்தால் நிறைய பயனிகள் சேரில் உட்கார்ந்து மற்றும் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். அதில் காலியாக இருந்த ஒரு இருக்கையில் உடகார்ந்து எதிர்த்தாப்போல் கை பெட்டியை வைத்து அதன் மீது கால்களை தூக்கி வைத்து துங்க ஆரம்பித்தேன்.
 
 
ஏதோ ஒரு உள்வுணர்வு என்று தான் சொல்லவேண்டும். திடீரென்று முளிப்பு வந்தது. தலை சேரின் முதுகு தாங்கியின் விளிம்பில் வைத்து வானம் பார்த்து இருந்தது. கண்களை திறந்தால் அருகில் என்னையே பார்த்துக்கொண்டு சுமார் 40 வயது மதிக்க தக்க ஒருவர் நின்று கொண்டிருந்தார். ஒல்லியான தேகம். ஒட்டி இடுக்கிய கன்னங்கள். கொஞ்சமாக குழி விழுந்த கண்கள். வெள்ளை நிறத்தில் வேட்டி சட்டை அணிந்திருந்தார். கைகளில் ஒரு சிறிய கவர். அதில அவருடைய பயணத்துக்கான ஆவணங்கள் இருக்க வேண்டும்.
கண்களை திறந்ததும் என்னைபார்த்து நீங்கள் தமிழா என்று கேட்டார். ஆமாம் என்றதும். நான் விமானம் தவறவிட்டுவிட்டேன் இங்கு என்ன பேசுகின்றார்கள் என்று எனக்கு புரியவில்லை. கொஞ்சம் உதவி செய்யுங்கள் என்று சொன்னார். முதலில் இது ஏதடா வம்பாய் போய்விட்டது என்று மனம் நினைத்தது. யாரு என்னன்னு தெரியாம உதவி செய்ய போய் மாட்டிக்கிட்டா என்ன செய்வது என்றும் நினைப்பில் ஓடியது. இருந்தாலும் என்ன நடந்தது என்று கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்  என்றேன்.
 
அவர் சொன்னதன் சாராம்சம் இது தான். "நான் புரூனே செல்வதற்காக நேற்று இரவு சென்னையில் விமானம் ஏறினேன். விமானம் முதலில் கொழும்பு சென்றது. அங்கு வேறு ஒரு விமானம் ஏற்றி விட்டார்கள். நான் விமானத்தில் துங்கி விட்டேன். என்னை விமான பணிப்பெண் எழுப்பி நீங்கள் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது இறங்குங்கள் என்று இறக்கிவிட்டு விட்டார்கள். இடம் தெரியாமல் அலைந்ததில் புருனே செல்லும் விமானத்தை விட்டுவிட்டேன். கொஞ்சம் கேட்டு  சொல்லுங்கள் என்றார்". மேலும் சில கேள்விகள் கேட்டும் அவருடைய பயனச் சீட்டை வாங்கி பார்த்தும் நான் புரிந்து கொண்டது சென்னை டு கொழும்பு - ஸ்ரீலங்கா விமானம், கொழும்பு டு மலேசியா வழி சிங்கப்பூர் - ஸ்ரீலங்கா விமானம், சிங்கபூர் டு புருனே சிங்கப்பூர் விமானம். அதில்  நண்பர்(பெயர் நினைவில் இல்லை அதனால் இனி அவரை நண்பர் என்றே அழைக்கலாம்) நன்றாக தூங்கிவிட்டாதால் சிங்கப்பூரில் இறங்க தாமதமாகிவிட்டது. இறங்கிய பின்னரும் எப்படி அடுத்த கேட் செல்வது என்பதில் எற்பட்ட தாமதம் வேறு. அதனால் விமானம் புறப்பட்ட சிறிது நேரம் கழித்தே கேட்டுக்கு சென்றிருக்கின்றார்.
 
சரி என்னுடன் வாங்க என்று அவரை அழைத்துக்கொண்டு மாற்றுபதிவு (Transit counter) கவுண்டர் சென்று விசாரித்தேன். அங்கிருந்தவரோ தான் ஏற்கெனவே அவரிடம் எல்லாம் கூறிவிட்டேனே  என்று சொன்னார். அவருக்கு ஆங்கிலம் புரியாது. மீண்டும் ஒரு முறை சொல்லுங்கள் என்று சொன்னேன். அடுத்த விமானம் காலை 11:45 மணிக்கு. 11 மணிக்கு இங்கு மீண்டும் வந்தால் ஏதாவது இருக்கை காலியாக இருந்தால் அவருக்கு ஏற்பாடு செய்கின்றேன் என்றார். தேவைபட்டால் பணம் கட்ட வேண்டியது இருக்கும் என்றார். மணியை பார்த்தால் காலை சுமார் 9 மணி 45 நிமிடம் இருக்கும். மீண்டும் முதலில் இருந்த இருக்கை பகுதிக்கே வந்து உட்கார்ந்தோம். நண்பரிடம் 11 மணிக்கு நம்மை வரச்சொல்கின்றார், வேறு விமானம் மாற வேண்டியது இருப்பதால் அதுவும் தவறு உங்கள் மீது இருப்பதால் கூடுதலாக கொஞ்சம் பணம் கட்ட வேண்டும் என்று சொல்கின்றார். எவ்வளவு கட்ட வேண்டும் என்று தெரியவில்லை. பணம் ஏதும் வைத்திருக்கின்றீர்களா என்று கேட்டேன். இதனை வைத்துகொண்டு எப்படியாவது உதவி செய்யுங்கள் என்று அவருடைய வலது கையை விரித்தார். 100 ரூபாய் காந்தி நோட்டு ஒன்று அவர் கைகளில் சுருண்டு இருந்தது.
 
                                                                                                                   ....தொடரும்....

Monday, September 16, 2013

மினி நயாகரா அருவி, தாய்வான்


Shifen waterfalls
Shifen waterfalls 

இந்த சீனப்  புத்தாண்டு விடுமுறையில் சென்று வந்த முக்கியமான ஒரு இடம் தைவானின் நயாகரா என்று சொல்லக்கூடிய ஷிபென் நீர்விழ்ச்சி(Shifen waterfalls). ஷிபென்  என்ற இடத்திற்கு சென்று அங்கு இருந்து ஒரு 15-20 நிமிடம் நடந்து சென்றால் ஷிபேன் நீர்வீழ்ச்சியை பார்க்கலாம். வழியில் கூட பார்க்க கூடிய சில இடங்கள் இருக்கின்றது.

ஷிபெனிற்கு தைபேயில் இருந்து நேரடியாக பேருந்து வசதி கிடையாது.  ரயிலில் செல்ல வேண்டும். அதுவும் ரெய்பெங் (rueifang) என்ற நிலையத்தில் அடுத்த ரயில் மாறவேண்டும்.

கட்டுச்சோறு கட்டிக்கொண்டு நண்பர்கள் அனைவரும் குடும்பத்துடன் தைபே ரயில் நிலையத்தில் கூடினோம். நண்பர் பினேஸ் மற்றும் அருண் தங்களுடைய சீன மொழிப்புலமையை வைத்து ஷிபென் வரைக்கும் பயணச்சீட்டு(தைபே - ரெய்பெங், ரெய்பெங் -  ஷிபென்) வாங்கி வந்தார்கள் . காலை 11:30 மணிக்கு ரயில் வந்தது. நிற்க கூட முடியாத அளவிற்கு கூட்டம். தைவானில் இது ஒரு பிரச்சனை. சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் பொழுது எங்கு பார்த்தாலும் கூட்டமாக இருக்கும். பேருந்து மற்றும் ரயிலுக்கு பயண சீட்டு கிடைப்பது கடினம். கிடைத்தாலும் உட்கார இடம் கிடைக்காது. மகிழுந்தில்(car) சென்றாலும் டிராபிக் ஜாம் ஆக இருக்கும்.
இரண்டு பெட்டிகளை இணைக்கும் இடத்திற்கு அருகில் தான் எனக்கு நிற்க இடம் கிடைத்தது.  பெட்டிக்கு உள்ளே மாட்டிகொண்ட நண்பர்கள் நெரிசலில் பிதுங்கிவிட்டார்கள். அமிர்தனுடைய பேபி ஸ்ட்ரோலரை இரண்டு பெட்டிக்கு நடுவே விரித்து அவனை அதிலே உட்காரவைத்தேன். அதன் பின்னர் எனக்கு கொஞ்சம் உடலை அசைக்க கூடிய அளவிற்கு இடம் கிடைத்தது. சரியான நேரத்திற்கு ரெய்பெங் ரயில் நிலையம் சென்றோம்.
ரெய்பெங்க் என்பது ஒரு சிறிய ஆனால் முக்கியமான ரயில் சந்திப்பு. இந்த இடத்தை சுற்றி நிறைய சுற்றுலா இடங்கள் இருக்கின்றன. அதனால் எப்பொழுதுமே பரபரப்பாக இருக்க கூடிய ஒரு ரயில்  நிலையம். நாங்கள் சென்று இறங்கிய பொழுது லேசான மழை சாரல் அடிக்க ஆரம்பித்து. ரயில் மேடையை விட்டு வெளியேறும் இடத்தில் கூட்டம் அதிகம். வழக்கம் போல் வரிசை வேறு. மெதுவாக நகர்ந்து அருகில் போனபிறகு தான் தெரிந்தது இந்த ரயில் நிலையத்தில் தானியங்கி பயணசீட்டு சோதனை இல்லை என்று. ஒரு பெண்மணி நின்று ஒவ்வொருவரிடமாக சீட்டை வாங்கி அனுப்பிக் கொண்டிருந்தார். டிக்கெட் பரிசோதனை முடிந்து அடுத்த நடைபாதைக்கு வந்தால் அங்கும் கூட்டம். நாங்கள் செல்லும் பொழுது ஒரு ரயில் புறப்பட ஆயத்தமாக இருந்தது. ஆனால் நிற்க கூட இடம் இல்லை. அதனால் மேலும் 45 நிமிடங்கள் வரிசையில் நின்று அடுத்த ரயிலை பிடித்தோம்.
Reifang - Shifen train
Reifang - Shifen train

இந்த ரயிலானது மூன்று சிறிய பெட்டிகளுடன்  கூடிய டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டது. அதிலும் நிற்க இடம் இல்லாத அளவிற்கு கூட்டம். அமிர்தனுக்கு மட்டும் ஒரு அம்மா இருக்க இடம் கொடுத்தார்கள். அவன் அதில் நின்று கொண்டே வெளியே பார்த்துக்கொண்டு வந்தான்.
ரெய்பெங் - ஷிபேன் ரயில் பாதையானது ஒரு மலையின் ஓரமாக ஆற்றின் அருகிலே செல்கின்றது. சில இடங்களில் ரயில் பாலங்கள் அமைத்திருக்கின்றார்கள். ரயில் மிதமான வேகத்துடனே சென்றது. அதனால் வெளியே இயற்கை அழகை ரசித்துக்கொண்டே செல்லலாம். கூட்ட நெரிசலில் ரசிக்க முடியவில்லை. மீண்டும் ஒருமுறை சாதாரண நாளில் இங்கு வரவேண்டும் என்று நினைத்து கொண்டேன்.
Shifen Train Station
Shifen Train Station

சரியான நேரத்திற்கு ஷிபென்  சென்று சேர்ந்தோம் . தைவான் மக்கள் ஷிபென் ரயில் நிலையத்திற்கு சிறிது முன்னர் தண்டவாளத்தில் நின்று பறக்கும் விளக்கு(Lantern) விட்டுக் கொண்டிருந்தார்கள். ரயில் வரும் பொழுது விலகி வழிவிட்டு அது சென்றதும் மீண்டும் தண்டவாளத்தில் இறங்கி விளக்கை பறக்க விட்டுக்கொண்டிருந்தார்கள். அருமையான காட்சி. பறக்கும் விளக்கு ஒவ்வொன்றும் கிட்டதட்ட ஒரு மீட்டர் உயரம் இருந்து. அதில் தங்கள் வேண்டுதல்களை எழுதி கீழே பணம் வைத்து(முன்னோர்களுக்கு கொடுக்க அச்சடித்த பொய்யான தாள்) அதனை எரிக்கும் பொழுது ஏற்படும் சூட்டில் இந்த விளக்கானது பறக்கின்றது. ரயில் தண்டவாளத்தின் ஓரமாக கடைகள் இருக்கின்றன். பொதுவாக அசைவம் கிடைக்கின்றது.
இவை எல்லாவற்றையும் கடந்து மெதுவாக நீர்வீழ்ச்சி நோக்கி மழை சாரலின் ஊடாக நடக்க ஆரம்பித்தோம். இந்த வழித்தடத்தில் முதலில் வருவது பயணிகள் தகவல் நிலையம். அதில் கீழ் மாடி(Basement) முழுவதும் பயனிகள் உட்கார்ந்து  சாப்பிட இட வசதி செய்து கொடுத்திருக்கின்றார்கள். மேல் மாடியில் ஒரு காபி கடை இருக்கின்றது. பக்கத்திலே ஒரு உணவகமும் இருக்கின்றது. எதுவும் எடுத்து வரவில்லை என்றால் அங்கு வாங்கிக்கொள்ளலாம். சைவம் கிடையாது. இந்த தகவல் நிலையத்தை ஒட்டி ஒரு ஆறு ஓடுகின்றது. அந்த பக்கம் இன்னொரு மலை.  இரண்டையும் இணைத்து ஆற்றுக்கு நடுவே ஒரு தொங்கு பாலம் கட்டியிருக்கின்றார்கள். இந்த தொங்கு பாலத்தின் வழியாக ஒரு முனையில் இருந்து அடுத்த முனை வரைக்கும் சென்று வரலாம். நடுவே நின்று ஆறு ஓடும் அழகை கூட ரசிக்கலாம்.
Hanging Bridge near Visitor center
Hanging Bridge near Visitor center

எங்கள் அனைவருக்கும் சரியான பசி. சாப்பிடலாம் என்று உள்ளே சென்றோம். அங்கு ஏற்கெனவே ஒரு தைவான் குடும்பத்தினர் ஒரு மேஜையை சுற்றி உட்கார்ந்து மாமிசத்தை நெருப்பில் வாட்டிக்கொண்டிருந்தனர். நாங்கள் போய் ஒரு மேசையை ஆக்கிரமித்து கட்டுசோற்றை பிரித்து சாப்பிட ஆரம்பித்தோம். ரயிலில் எங்களுக்கு உதவி செய்த ஒரு குடும்பம் வந்து சேர்ந்தது. விருந்தோம்பல் தமிழனின் கூடப்பிறந்த ஒரு சொத்து. அவர்களுக்கு ஒரு பேப்பர் தட்டில் கொஞ்சம் புளிசாதம் வைத்து கொடுத்தோம். அதனை ஆளுக்கு ஒரு ஸ்பூன் சாப்பிட்டு விட்டு ஆ.. ஊ... என்று ஒரே சத்தம். அவ்வளவு காரமாம் :). அவர்கள் புறப்படும் பொழுது மறக்காமல் "வெரி டெலிசியஸ்" என்று சொல்லிவிட்டு சென்றார்கள். :) ஒரு பக்கமாக மலை மற்றும் ஆறு ஓடும் இயற்கை அழகை ரசித்தபடி எங்களுடைய மதிய உணவு முடிந்தது. அதன் பின் சிறிது நேரம் தொங்கு பாலத்தில் நின்று ஆற்றின் அழகை அனைவரும் படம் எடுத்தார்கள்.
இந்த இடத்தை விட்டு கொஞ்ச தூரம் நடந்தால் ரோட்டில் இருந்து ஒரு மரப் பாதையானது படிகளோடு கீழ் நோக்கி செல்கின்றது. அதன் வழியாக சென்றால் அதன் நுனிபகுதியில் அருவிக்கான நுளைவு வாயில் இருக்கின்றது. ஒருவருக்கு 80 தைவான் டாலர் கட்டணம். மாணவர்களுக்கு 70 டாலர். குழந்தைக்கு 20 டாலர் (இன்சூரன்ஸ் மட்டும்).
Shifen waterfalls
Shifen waterfalls

அந்த இடம் செல்லும்வரை அப்படி ஒரு அருவி இருப்பதே நமக்கு தெரியாது. நான் மேலே சொன்ன ஆறானது இந்த இடத்தில் கிட்ட தட்ட நயாகரா போன்று சிறிது வளைந்த இடத்தில் அருவியாக கொட்டுகின்றது. அருவி தொடங்கும் இடத்தை சுற்றி பாதுகாப்பு வளையம் போட்டிருக்கின்றார்கள். அதனால் நம் ஊர் போன்று நெருங்கி சென்று பார்க்கவோ குளிக்கவோ முடியாது. நின்று ரசிக்கலாம். போட்டோ எடுக்கலாம். சாரல் அடித்துக்கொண்டே இருந்தது. அதனால் நின்று புகைப்படம் எடுக்கும் மனநிலை இல்லை. அங்கு இருந்த ஊழியர் ஒருவர் நன்றாக ஆங்கிலம் பேசினார். அவரிடம் பேச்சு கொடுத்ததில் வருடத்தில் 200 நாட்களுக்கு அங்கு மழை பெய்யுமாம். மழை இல்லை என்றால் அருவியில் தண்ணீர் இருக்காது என்றார்.
Shifen waterfalls
Shifen waterfalls

இருள் கவிழ  ஆரம்பித்தது. அருவியை விட்டு வெளியே வந்தால் இறங்கி வந்த நடை பாதை மூடிகிடந்தது. அங்கிருந்த ஊழியர் மாலை 5 மணிக்குமேல் யாருக்கும் அனுமதி கிடையாது என்று சொன்னார். ரயில் தண்டவாளம் வழியாக போனால்  ரயில் நிலையம் வந்துவிடும் என்றார். தண்டவாளத்தை ஒட்டி ஒரு நடை பாதை போட்டு வைத்திருக்கின்றார்கள். நன்றாகவே இருந்தது. வழியில் மேலும் ஒரு தொங்கு பாலம் இருந்த்தது. அதில் நின்று கொண்டு பார்த்தால் பக்கத்து பாலத்தில் ரயில் செல்வதை பார்த்து ரசிக்கலாம்.
Hanging Bridge and Train Bridge
Hanging Bridge and Train Bridge

இருள் சூழ்ந்த நேரத்தில் ரயில் நிலையம் வந்தோம். எனக்கு ஒரு பறக்கும் விளக்கு விடலாம் என்று தோன்றியது. சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் ஒரு விளக்கு வாங்கிவிட்டோம். ஆனால் என்ன எழுதுவது என்று தெரியவில்லை. அதனால் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சீன புத்தாண்டு வாழ்த்துக்கள் எழுதி பறக்க விட்டோம். அமிர்தன் அவன் பங்குக்கு ஒரு சூரியன் படம் வரைந்தான்.
Lentern
Lentern

Lentern
Lentern

ரயில் நிலையத்தில் காலையில் வரும்போது இருந்த அளவுக்கு கூட்டம் இல்லை. ஆனால் வருகின்ற ரயில் அனைத்தும் ஏறமுடியாத அளவுக்கு கூட்டம். ரயில் நிலைய போலீஸ் அதிகாரியிடம் இங்கு பஸ் வசதி இல்லையா என்று கேட்டோம். 45 நிமிடங்களுக்கு ஒரு பஸ் ஆற்றுக்கு அந்த பக்கம் வரும் என்றார். மீண்டும் ஒரு தொங்கு பாலத்தை கடந்து(ஊரை சுற்றி தொங்குபாலமாக இருக்கின்றது) ஆற்றுக்கு அந்த பக்கம் போனால் அங்கே பேருந்துக்கு கூட்டம். வேறு வழியில்லாமல் அந்த கூட்டத்தில் எங்களையும் இனைத்துக்கொண்டோம். கொஞ்ச நேரத்தில் ஒரு பஸ் வந்தது. நிற்க கூட இடம் இல்லை. எங்களுக்கு முன்னர் நின்றவர்கள் அனைவரும் மற்றும் எங்கள் குழுவில் 5 பேர் ஏறிவிட்டார்கள். நான் அந்த கூட்டத்தில் எற முடியாது என்று சொல்லிவிட்டேன். வேறு வழியில்லாமல் எல்லோரும் இறங்கி அடுத்த வண்டிக்காக காத்திருந்தோம். பனிக்காலத்து மலையின் குளிர் தேகத்தை நடுக்க ஆரம்பித்தது. 40 நிமிடம் கழித்து ஒரு பஸ் வந்தது. வண்டியில் ஒருவர் கூட இல்லை. பேருந்தை நிறுத்தி தைபே போகவேண்டும் என்று சொன்னோம். வண்டி ஓட்டுனர் கையை சுற்றி சுற்றி காண்பித்து எதோ சொல்லிவிட்டு கதைவை மூடிவிடு சென்று விட்டார். எங்களுக்கு அவர் என்ன சொன்னார் என்று புரியவில்லை. ஒரு வேளை சுற்றி கொண்டு வருவார் போல என்று எங்களுக்கு நாங்களே சமாதானம் சொல்லிக்கொண்டோம்.
கொஞ்ச நேரத்தில் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு ரயில் கிளம்பியது. ரயிலில் நின்று கொண்டாவது சென்றிருக்கலாம் என்று என் அபிப்பிராயத்தை சொன்னேன். வேறு வழியில்லை. அடுத்த பஸ் அல்லது ரயிலுக்கு இன்னும் 40 நிமிடம் காத்திருக்க வேண்டும். சிறிது நேரத்தில்  தைவானிஸ் ஒருவர் தொங்கு பாலம் வழியாக வந்தார். தற்பொழுது புறப்பட்ட ரயிலில் கூட்டமாக இருந்தது, எங்களால் ஏறமுடியவில்லை. இங்கு பஸ் ஏதாவது இருக்கின்றதா என்று பார்க்கலாம் என்று வந்தேன் என்றார். அவருடன் குழுவில் மொத்தம் 20 பேர். அனைவரும் ரயில் நிலையத்தில் நிற்கின்றார்கள் என்றார். நாங்கள் பஸ்ஸுக்கு தான் நிற்கின்றோம் என்று சொன்னதும் அவருடன் வந்தவர்களை  போன் போட்டு அழைத்தார். அதற்குள் அடுத்த பஸ் வந்துவிட்டது. இதுவும் முந்தையா வண்டியை போல் டிரைவரை தவிர வேறு  யாரும் இல்லை. வழக்கம் போல வண்டியை நிறுத்தி தைபே என்று சொன்னோம். அவரும் வழக்கம் போல ஏதோ சொல்லிவிட்டு கையை  எதிர்பக்கம் காண்பித்துவிட்டு வழக்கம் போல கதவை மூடிவிட்டார். நான் கிட்ட தட்ட வண்டிக்கு முன்னர் போய் நின்றுகொண்டேன். தயவு செஞ்சி எங்களை ஏற்றிக்கொண்டு போ என்று கெஞ்சாத குறைதான். ஆனால் ஓட்டுனர் வழக்கம் போல் எதோ சொல்லிவிட்டு கதைவை மூடுவதிலே குறிக்கோளாக  இருந்தார். தைவானிஸை எங்கே என்று தேடினால் அவர் கொஞ்சம் தள்ளி நின்று அவருடைய கூட்டத்தை சேர்ந்தவர்களுக்கு பஸ் நிறுத்தம் வரச்சொல்லி தொலை பேசிக்கொண்டிருந்தார். அவரை அழைத்து டிரைவரிடம் பேசச் சொன்னோம். அவர் பேசினதும் வழக்கம் போல் பஸ் கிளம்பி போயே போய்விட்டது.
தைவானிஸிடம் ஏன் பஸ் போய்விட்டது என்று கேட்டோம். இவ்வளவு நேரமாக நீங்கள் நின்று கொண்டிருப்பது தவறான பக்கத்தில். தைபே போகின்ற பஸ் எதிர் பக்கமாக நிற்குமாம் என்று சொன்னார். கிட்டதட்ட் 1:30 மணி நேரம் தவறான பக்கத்தில் நின்று கொண்டு போகின்ற பஸ்ஸை எல்லாம் மறித்து கொண்டிருந்திருக்கின்றோம். நல்ல வேலை ஒரு பஸ்ஸில் ஏறிவிட்டு இறங்கிவிட்டோம். இல்லை என்றால் திக்கு திசை தெரியாத ஏதோ ஒரு ஊருக்கு போயிருப்போம். எதிர்பக்கம் போன சிறிது நேரத்திலே ஒரு பேருந்து வந்தது. ஏறி ஒரு இடத்தில் உட்கார்ந்ததும் அக்கடா என்றிருந்தது. நேரம் இரவு 8 மணி. அமிர்தன் தூங்க ஆரம்பித்திருந்தான். பேருந்தானது மலையின் கனத்த இருளை கிழித்துக்கொண்டு வளைந்து வளைந்து இறங்க ஆரம்பித்தது.