இன்றோடு சரியாக ஒன்பது வருடங்கள் ஓடிவிட்டது. அன்று நடந்ததை இன்று நினைத்தாலும் மனம் கனத்துவிடுகின்றது.
வருடம் 2004 மாதம் டிசம்பர் 26 ஆம் நாள். முந்தய நாள் கிருஸ்த்மஸ் கொண்டாட்டம் முடித்து பின் இரவில் தான் படுக்கைக்கு சென்றேன். அப்பொழுது சென்னையில் என்னுடைய சகோதரியின் வீட்டில் தங்கி இருந்து தான் வேலைக்கு சென்று கொண்டிருந்தேன். திருவல்லிக்கேனி நெடுஞ்சாலையில் ஸ்டார் தியேட்டருக்கு நேர் எதிராக இருக்கும் கட்டிடம். கீழே மூன்று தளங்களிலும் சிறிய அலுவலகங்கள் இருக்கும், நான்காம் மாடியில் நாங்கள் மட்டும் இருந்தோம். எனக்கு என்று தனியாக ஓர் அறை. அதில் ஒரு மடக்க கூடிய கயிற்று கட்டில். என்னுடைய சகோதரியின் குழந்தைகளுக்கு என்னோடு விளையாட பிடிக்கும். நான் தான் அதிகமாக விளையாடுவதில்லை. நான் என்னுடைய அறைக்கு வந்துவிட்டால், நான் என்ன செய்கிறேன் என்று ஒளிந்து வந்து பார்த்துவிட்டு செல்வார்கள். 26 ஆம் தேதி காலை சுமார் 6.30 மணியிருக்கும் என்னுடைய கட்டில் ஆடியது. நல்ல தூக்க கலக்கம். என்னுடைய சகோதரி மகள் தான் வந்து கட்டிலை ஆட்டிகொண்டிருக்கின்றாள் என்ற நினைப்பில் கண்களை திறவாமலே "மாமா தூங்கி கொண்டிருக்கின்றேன், நாம் அப்புறமா விளையாடலம், நீ போய் டிவி பார்" என்று சொல்லி முடிக்கவில்லை, மீண்டும் அதே போன்ற ஒரு ஆட்டம். கண்களை வலியக்க திறந்தால் அறையில் யாரும் இல்லை. பின்னர் யார் கட்டிலை ஆட்டியது என்று அப்படியே ஒருக்களித்து பார்த்தால், மீண்டும் கட்டில் ஆடத்தொடங்கியது. முதலில் என்னவோ எதோ என்று பயம் வந்தாலும், கதவை கவனிக்கும் போது அதில் ஒரு சிறு அதிர்வு தெரிந்தது. ஜன்னலை எட்டி பார்த்தால் அதன் கதவும் அன்றாக ஆடியது. இது நிலநடுக்கம் என்ற உணர்வு மூளையை தொட்ட உடனே படுக்கையில் இருந்து எழுந்து அடுத்த அறைக்கு ஓடினேன்.
நாங்கள் இருந்த கட்டிடம் கொஞசம் பழையது. எதுவேணும் நடக்கலாம். முதலில் வீட்டில் இருப்பவர்களை எழுப்பி கீழ் தளத்துக்கு அனுப்பவேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கியது. அடுத்த அறைக்கு சென்று நிலநடுக்கம் வந்து கொண்டிருக்கு எல்லோரும் கீழே ஓடுங்கள் என்றேன். அவர்கள் யாரும் நிலநடுக்கத்தை உணரவில்லை. எனக்கோ விளக்கம் சொல்ல நேரமில்லை. எல்லோரும் முதலில் கீழே இறங்குங்கள் என்று கூறி அனுப்பிவிட்டு நானும் கீழே இறங்கி சென்றேன். தரை தளத்தில் ஒரு டீ கடை இருந்தது. சில பேர் நின்று டீ குடித்து கொண்டிருந்தார்கள். டீ மாஸ்டர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். நன்றாக பேசுவார். நாங்கள் எல்லோரும் காத்தாலே கீழே இறங்கியதும் அவர் எங்கு போகின்றீர்கள் என்றார். நிலநடுக்கம் அதான் எல்லோரும் கீழே வருகின்றோம் என்றேன். அவர் நாங்கள் யாரும் உணரவில்லையே என்றார். பக்கத்தில் நின்றவர்களும் நாங்களும் உணரவில்லை என்று சொன்னார்கள். எங்கள் வீட்டை சேர்ந்தவர்கள் அனைவரும் என்னை குறை கூற ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு வேலை நாம் 4ஆம் மாடியில் இருந்ததால் உண்ர்ந்திருப்போம் இவர்கள் கீழே இருந்ததால் உணரவில்லை என்று சமாளித்தேன். ஆனால் யாரும் நம்பியது போல் தெரியவில்லை. மேலும் ஒரு 10 நிமிடம் கீழே நின்று கொண்டிருந்தோம். பக்கத்து தெருவில் இருந்து வந்த ஒருவர், நிலநடுக்கம் அதிகமாக இருந்தது என்று யாரிடமோ உரக்க சொன்னார். அப்பொழுதுதான் எங்கள் வீட்டிலிருந்தவர்களும் டீக்கடையில் நின்றவர்களும் என்னை நம்ப ஆரம்பித்திருந்தார்கள். சிறிது நேரம் கழித்து தொடர் நடுக்கம் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு மேலே வந்தோம்.
காலை 9:30 மணிக்கு குளித்துகொண்டிருந்தேன். கச்சா முச்சா என்று கூச்சல் கேட்க ஆரம்பித்தது. என்னுடிய அத்தானிடம் என்ன சத்தம் என்று கேட்டால் கடல் தண்ணீர் உள்ளே வருதாம் அதனால் பிளாட்பாரத்தில் இருப்பவர்கள் அனைவரும் மேலே ஏறி வந்துவிட்டார்கள், அதான் இந்த சத்தம் என்றார். எவனோ ஒருத்தன் நல்லா புரளியை கிளப்பி விட்டுருகான், கடல் தண்ணீர் எப்படி உள்ளே வரும் என்றேன். இல்லை கடல் தண்னீர் உள்ளே வருகின்றதாம், கண்ணகி சிலைய தாண்டி ஸ்டேடியம் பக்கம் வந்திருச்சாம். இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம வீட்டு பக்கம் வந்திடுமாம் என்று சொன்னார். டிவியை வச்சி பாருங்க என்றேன். எந்த சானலிலும் இதை பற்றி ஒன்றும் சொல்ல வில்லை என்றார். நாம் போய் என்ன ஏது என்று பார்த்துவிட்டு வருவோம் என்று அவரையும் அழைத்துக்கொண்டு படி இறங்கி கீழே செல்ல ஆரம்பித்தோம்.
பிளாட்பாரத்தில் குடியிருந்தவர்கள் அனைவரும் மூன்றாம் மாடிக்கு வந்து நின்றுகொன்டிருந்தார்கள். கூடவே அவர்களுக்கு வேண்டிய சாமான்களும் மூட்டையில் இருந்தது. கீழே போய் வண்டியை எடுத்து புறப்படும் பொழுது, அவரோ ஒரு சந்துக்குள் போய் அப்படியே சேப்பாக்கம் வழியாக போய்விடலாம் என்றார். நானோ இது தவறான ஐடியா. ஆத்திர அவசரத்துல திரும்பி வரும் போது எதாவது முட்டு சந்துக்குள்ள மாட்டிக்க கூடாது அதனால் கண்ணகி சிலைக்கு எதிர் ரோட்டை பிடித்து(ராயப்பேட்டை ரோடு என்று நினைக்கிறேன்) போகலாம் என்று அந்த வழியாக போக ஆரம்பித்தோம். ரோட்டில் நெரிசலே இல்லை. திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் வந்து கண்ணகி சிலைக்கு போகும் ரோட்டில் திரும்பினோம். அங்கும் நெரிசலே இல்லை. அப்படியே மெதுவாக போய் ஸ்டேடியத்தை தாண்டினோம். ஒரு சொட்டு தண்ணீரும் தெரியவில்லை. பார்த்தீங்கலா எவனோ ஒருத்தன் ஸ்டேடியம் தாண்டி தண்ணீர் வந்துடுச்சி என்று புரளி கிளப்பிவிட்டுடான் என்று அவரிடம் கூறி சிரித்துக்கொண்டே, கண்ணகி சிலை வரைக்கும் போய் பார்த்துவிட்டு வரலாம் என்று மேலும் வண்டியை ஒட விட்டோம். வண்டி பறக்கும் ரயில் பாலத்தையும் தாண்டிவிட்டது, ஒரு சொட்டு தன்ணிர் கூட தெரியவில்லை. அப்படியே போய்கொண்டிருந்தோம். கண்ணகி சிலைக்கு முன்னாடி ஒரு சின்ன விளையாட்டு மைதானம் இருக்கும். அங்கு நிறைய பேர் கிரிக்கெட் விளையாடுவார்கள். அந்த இடம் வந்ததும் போலீஸ்கார்ர் ஒருவர் குறுக்கால ஓடி வந்து வண்டியை நிறுத்தினார்.
அங்கு வண்டி போகாது, நீ இங்க நிறுத்தி நடந்து போ என்றார். அப்பொழுதுதான் எதோ ஒன்று நடந்திருக்கு என்ற என்னம் லேசாக மனதிற்குள் தோன்றியது. ஆனால் மக்கள் சொன்ன மாதிரி அந்த இடத்தில் இருந்து பார்த்தால் தண்ணீரும் தெரியவில்லை வேறு விபரீதம் நடந்த அடையாளமும் தெரியவில்லை. ஒரே ஒரு வித்தியாசம். விடுமுறை நாட்கள் என்றால் காலை முதல் மாலை வரை ஜே ஜே என்று இருக்கும் அந்த விளையாட்டு மைதானம் ஈ ஓட்டிக்கொண்டிருந்தது. வண்டியை ஒரு ஒரமாக நிறுத்திவிட்டு கண்ணகி சிலை நோக்கி மெதுவாக நடக்க ஆரம்பித்தோம்.
கண்ணகி சிலைக்கு மிக அருகில் வரும்பொழுது ரோட்டின் இரு பக்கமும் நன்றாக பார்க்க முடிந்தது. முதன் முதலாக ரோட்டின் மத்தியில் ஒரு மோட்டார் வைத்து ஓடக்கூடிய கொன்சம் பெரிய மீன் படகு கவிழ்ந்து கிடந்தது. ஆனால் ரோட்டில் ஒரு துளி தண்ணீர் இல்லை. இது எப்படி இங்கு வந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டே மேலும் முன்னேறினோம்.
காமராஜர் சாலையானது கடற்கரை மணல் பரப்பிலிருந்து மூன்று, நான்கு அடிகள் உயரமாக இருக்கும். அதனால் ரோட்டின் இந்த கரையில் வந்து பார்த்தால் தான் நன்றாக தெரியும். இந்த கரையில் வந்து பார்த்தால் பீச் கன்னா பின்னா என்று என்று இருந்தது. படகுகள் ரோட்டின் ஓரமாக குவிந்து கிடந்தன. கார்கள் தலைகுப்பற உருண்டு கிடந்த்தன. இந்திய கடற்கரை பாதுகாப்பு கப்பல் ஒன்று மெரினா கடலின் கரைக்கு அருகே நின்று கொண்டிருந்தது. கடலுக்குள் இருந்து ஒரு ஹெலிகாப்டர் வெளியே வந்து கொண்டிருந்தது. அதில் கயிற்றில் எதோ தொங்கிகோன்டிருந்தது. அது சடலமாக இருக்க கூடும்(அடுதத நாள் செய்திகளில் ஹெலிகாப்டர் கொண்டு கடலுக்குள் இருந்து சடலம் எடுத்ததாக போட்டிருந்தார்கள்).
நான் செல்லும் பொழுது கடலானது அதன் வழக்கமான எல்லைக்குள்ளே இருந்தது. இத்தனை களோபரத்திலும் நம் மக்கள் கடற்கரையில் கடல் அலையில் நின்று கொண்டிருந்தார்கள். கடல் வழக்கம் போல் இல்லாமல் ஓங்கரித்துக்கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்தில் ஒரு பெருத்த அலை வருவது போன்றிருந்தது. கடற்கரையில் நின்ற மக்கள் ரோட்டை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தார்கள். நீங்கள் நம்புவீர்களா இல்லயா என்று எனக்கு தெரியவில்லை. கடற்கரைக்கும் - ரோட்டிற்கும் இடையில் குறைந்தது ஒரு 300 மீட்டர் இடைவெளி இருக்கும். அந்த இடைவெளியை கடல் அலை நிரப்ப எடுத்துக்கொண்ட கால அளவு வெறும் 3 - 4 வினாடிகள் மட்டுமே. ரோடு உயரமாக இருந்ததால் அதனை தாண்டி வரவில்லை. நடுவில் கிடந்த படகு கார்கள் எல்லாம் அந்த அலையில் அடித்து வரப்பட்டு ரோட்டின் கரையில் மோதின. எவ்வளவு வேகத்தில் வந்ததோ அதே வேகத்தில் கடல் அலை மீண்டும் உள்வாங்கியது. உள்வாங்க ஒரு 30 வினாடிகள் எடுத்துக்கொண்டு மீண்டும் அதன் எல்லையில் போய் நின்று கொண்டது. நான் அங்கு ஒரு 30 நிமிடங்கள் நின்று கொண்டிருந்தேன். அதற்குள் நான்கு முறை ஆழிப்பேரலை வந்து ரோட்டை தொட்டு விட்டு சென்றது.
பின் அலையின் உக்கிரமே இப்படி இருக்கும் என்றால் முன் அலை(முதல் ஆழிப்பேரலை) எவ்வளவு வேகத்தில் வந்திருக்கும். அதன் தாக்கமே முகப்பெரிய படகு நடு ரோட்டில் கிடந்தது. நடைபயிற்சி சென்றவர்கள், கிரிக்கெட் விளையாடிய விடலை பசங்க என்று ஒட்டு மொத்தமாக சூறையாடியது. ஆனால் இது எதனையும் உணராமல் குறைந்தது ஒரு 50 பேர் பின் அலைகளில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அலை வரும் பொழுது வெளியே ஒடி வருவதும் அலை வடிந்ததும் மீண்டும் கடற்கரைக்கு செல்வதுமாக. அவர்களுக்கு எல்லாமே விளையாட்டு தான்.
பொய், யாரோ ஏமாற்றுகின்றார்கள் என்று திரும்ப திரும்ப கூறிக்கொண்டே வந்த நான் கனத்த இதயத்துடன் வீடு திரும்பினேன். திருப்பிய சானல் எல்லாம் இதனையே ஒளிபரப்பினார்கள். அடுத்து நாள் வந்த செய்தித்தாள்களை எல்லாம் மனம் கொண்டு படிக்க முடியவில்லை. சென்னை, கடலூர், நாகூர், வேளாங்கண்ணி, வேதாரண்யம் என்று கடற்கரைகள் அனைத்தும் சின்னாபின்னமாயின. வித விதமான காட்சிகள் செய்திகளாக பட்டிருந்தன. செய்திதாளை பார்துக்கொண்டிருந்த போது மாமல்லபுரத்தில் இருந்த தமிழ்நாடு டூரிசம் டெவெலப்மெண்ட் கார்பரேசனுக்கு செந்தமான ரிசாகட் முழுவதுமாக அழிந்தது என்று படத்தோடு போட்டிருந்தார்கள். பக் என்றது. சரியாக 7 நாட்கள் முன்னர் அதே ஞாயிறு அன்று சுமார் 250 பேர் அங்கு தங்கியிருந்தோம். நான் தங்கி இருந்த கட்டிடம் முழுவதுகாக கடலுக்கு இரையாகியிருந்தது.
நிறைய பேர் வீடு, வாசல், சொந்தம் என்று இழப்புகள் மிக மிக அதிகம். மீட்புபணிகள் ஒரு வாரத்துக்கு சிறப்பாகவே நடந்தது என்று நினைக்கிறேன். அந்த சம்பவத்திற்கு பின்னர் இரண்டு முறை ஆட்சி மாற்றம் நடந்துவிட்டது. ஆனால் அவர்களுக்குறிய நிவாரணம் சரியாக சென்றடைந்ததா என்பது தான் தெரியவில்லை.
தொடரும்...
படங்கள் உதவி : கூகுளாண்டவர்
தொடரும்...
படங்கள் உதவி : கூகுளாண்டவர்