Sunday, October 27, 2024

கொழும்பு புறக்கோட்டை சம்மான் கோட்டு பள்ளிவாசல் / Colombo Red Mosque

        கொழும்பு நகரத்தின் புறக்கோட்டை(Pettah- பெட்டா) பகுதி நம்ம சென்னை தி.நகர் மாதிரி. தெருவின் இரண்டு பக்கமும் வியாபாரக்கடைகளும், தெருவோர வியாபாரிகளுமாக‌ ஜே, ஜே என்று இருக்கிறது. அந்த தெருவின் மத்தியில் சிவப்பும், வெள்ளையுமாக ஒரு பள்ளிவாசல் இருக்கிறது. இன்று நாம் அதனை சுற்றிப் பார்க்கலாம் என்று நண்பர்கள் அழைத்தார்கள். அந்த பள்ளிவாசலின் பெயர் சம்மான் கோட்டு பள்ளிவாசல்(தற்பொழுது மறுவி சம்மாங் கோடு பள்ளி), சிவப்பு நிறத்தில் இருப்பதால் சிவப்பு பள்ளிவாசல் மற்றும் உருது மொழியில் மஸ்ஜிதுல் ஜாமிஉல் அஃபார். இந்த பள்ளிவாசல் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு திறந்து விடப்படுகிறது.

 


        நண்பர்களுடன் பள்ளிவாசலுக்கு மதியம் சுமார் 2 மணிக்கு சென்றோம். முக்கியமான கதவுகள் மூடப்பட்டிருந்தது. பக்கத்தில் ஒரு கதவு திறந்திருந்தது. அங்கிருந்தவரிடம் பள்ளிவாசலை பார்வையிட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தோம். உடனே கதவை திறந்து எங்களை உள்ளே அனுமதித்தார்கள். உள்ளே சென்றதும் கதவை ஒட்டிய ஒரு அறையில் எங்களை அமரவைத்தார்கள். சிறிது நேரத்தில் ஒருவர் வந்தார். அவர்தான் எங்களுடைய சுற்றுலா வழிகாட்டி. நாங்கள் தமிழர்கள் என்ற தெரிந்ததும் எங்களிடம் தமிழிலே பேசினார்.

 

பள்ளிவாசலின் மாடிப்பகுதி
        நண்பர்களில் நானும் இன்னொரு நண்பரும் அரைக்கால் சட்டை அணிந்திருந்தோம். இந்த பள்ளிவாசலில் அரைக்கால் சட்டை அணிந்தவர்களுக்கு அனுமதி கிடையாது. அதனால் எங்களிடம் ஒரு அங்கியை கொடுத்து அணிந்து கொள்ளச் சொன்னார்கள். அதற்காகவே ஒரு சில அங்கிகளை வைத்திருக்கிறார்கள். நாங்கள் அங்கி அணிந்ததை பார்த்ததும் மற்ற நண்பர்களும் இது நல்லா இருக்கிறது. நாங்களும் அணிந்துகொள்கிறோம் என்று அவர்களும் அங்கியை அணிந்து கொண்டார்கள். அதன் பின்னர் நீங்கள் விரும்பினால் உங்கள் பயணப் பொதிகளை பாதுகாப்பான அறையில் வைக்க உதவுகிறார்கள். அதன் பின்னர் சுற்றிபார்க்கும் படலம் ஆரம்பிக்கிறது.

 

தொழுகை நடைபெறும் முக்கியமான‌ கூடம்

        பொதுவாக மசூதிகள் அனைத்தும் பச்சை-வெள்ளை நிறத்தில் இருக்கும் ஆனால் இந்த மசூதி மட்டும் சிவப்பு நிறத்தில் இருக்கும். ஏன்? என்று தெரியுமா என்று எங்கள் வழிகாட்டி  கேட்டார். எங்களில் ஒவ்வொருவரும் வேறு வேறு பதிலகளை சொன்னோம். அதன் பின்னர் அவர் இந்த நிறமானது ஒரு பழத்தின் நிறம் என்றார், அப்படியும் எங்களால்  கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பின்னர் கைபேசியில் ஒரு பழத்தின் புகைப்படத்தை காண்பித்தார். அட நம்ம மாதுளை பழம்.  மாதுளை முத்துக்கள் வருசையாக அடுக்கிவைத்திருப்பது போன்று இந்த பள்ளிவாசல் கட்டிடமும் கட்டியிருக்கிறார்கள். சிவப்பு நிறம் மற்றும் அதனை சுற்றி வெள்ளைநிறம் என்று மாறி மாறி வண்ணம் பூசியிருக்கிறார்கள்.  மற்ற மசூதிகள் கூம்புவடிவத்தினை கவுத்திவைத்தது போன்று இருக்கும். ஆனால் இந்த மசூதியானது மாதுளை பழத்தின் மேற்பாகம் போன்று இதழ்கள் விரிந்து கட்டப்பட்டுள்ளது.  
மாதுளை பழ வடிவம்

    தமிழகத்தின் தென்பகுதியான காயல்பட்டிணம் பகுதியில் இருந்து வியாபார நிமித்தமாக கொழும்பு வந்த காயல்பட்டிணம் முஸ்லீம் வணிகர்களால் 1908 ஆம் ஆண்டு இந்த பள்ளிவாசல் கட்டப்பட்டது. முழுக்க இந்திய-பிரிட்டீஸ் கட்டடக்கலையினை போன்று கட்டப்பட்டது. இதனை வடிவமைத்து கட்டியவர் ஹபீபு லெப்பை.  தற்பொழுது இந்த கட்டிடடத்தில் ஒரே நேரத்தில் 10000 பேர் வரை தொழுகை நடத்த முடியும்.

 


    கட்டிடத்தை சுற்றி பார்த்து வந்துகொண்டிருக்கும் போது ஒரு மண்டபத்தின் வாசலில் வைத்து எங்களுடைய வழிகாட்டி விளக்கி கூறிக்கொண்டிருந்தார். நாங்கள் புகைப்படம் எடுக்க உள்ளே செல்ல எத்தனித்தோம். அப்பொழுது வழிகாட்டி இது தொழுகை மண்டபம். இங்கே தொழுகை செய்பவர்களை தவிர சுற்றுலா பயனிகளுக்கு அனுமதியில்லை. நீங்கள் வெளியிலிருந்தே புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். அந்த தொழுகை மண்டபத்தை தவிர மற்ற பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டோம். மொட்டை மாடிப்பகுதியிலிருந்து பார்த்தால் கொழும்பு நகரம் மற்றும் அருகிலே இருக்கும் துறைமுகம் தெரிகிறது. அனைத்து பகுதியினையும் பார்த்துவிட்டு வழிகாட்டிக்கு நன்றி கூறி விடைபெற்று வந்தோம்.

Thursday, March 3, 2022

குபந்தி (Physalis minima)

குபந்தி, எத்தனை பேர் இந்த பெயரை கேள்விபட்டிருக்கின்றீர்கள். நான் இன்று தான் இந்த பெயரை கேள்விபடுக்கிறேன். இது ஒரு செடியின் பெயர். இந்த பெயரைத்தான் இப்போ கேள்விப்படுகிறேனே தவிர, எனக்கு இந்த செடி சிறுவயது முதல் பரிச்சயமானது.

எங்கள் பகுதியில் இதனை சொடக்கு தக்காளி என்று தான் சொல்வோம். இதன் காய்/பழத்தை சுற்றி ஒரு பேப்பர் போன்ற அமைப்பு இருக்கும். அதன் கீழ் பகுதி திறந்திருக்கும். அதனை இருக்கமாக மூடினால் பலூனில் காத்து அடைத்திருப்பது போன்று இருக்கும். அதனை நெற்றியில்/தலையில் அடித்தால் பட் என்று சொடக்கு அடிப்பது போன்று சத்தம் வரும். அதனால் தான் இதன் காரணப் பெயர் சொடக்கு தக்காளி. இதன் உள்ளிருக்கும் பழம் ஒரு இலந்தை பழம் அளவுக்கு சிறியதாக தான் இருக்கும். ஆனால் தக்காளி போன்று சாறுடன் விதைகள் நிரம்பி இருக்கும். இதனை சாப்பிடலாம்.

என்னுடைய கிராமத்தில் வீட்டை சுற்றி இந்த செடி நிறைய வளர்ந்திருக்கும். இதன் பழத்தை சுற்றி பேப்பர் போன்று பச்சை நிறத்தில் ஒரு அமைப்பு இருக்கும் என்றேன் அல்லவா? அது சிறிது கடினமாக இருக்கும். ஆனால் இதனை பறித்து கைகள்/விரல்களுக்குள் வைத்து மென்மையாக கசக்கினால்(உள்ளிருக்கும் பழத்திற்கு பங்கம் வராமல்) அந்த சுற்றியிருக்கும் பகுதி மிருதுவாக மாறிவிடும். அதன் பின்னர் அந்த பகுதியை பிரட்டி போட்டால் அதாவது உள்ளிருக்கும் பழத்தை மெதுவாக வெளியே தள்ளி எடுத்துவிடலாம். அப்படி எடுத்தால் அந்த பழம் தலையாகவும், பேப்பர் பகுதி உடல் போன்றும் இருக்கும். அதற்கு கை/கால்கள் ஒட்டவைத்து விளையாடியதாக நினைவிருக்கிறது.

இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் சமீபத்தில் தைவானில் இருக்கும் மிகப்பெரிய காஸ்கோ கடைக்கு (costco) சென்றால் அங்கு பூக்கள் இருக்கும் பகுதியில் இந்த சொடக்கு தக்காளியையும் வைத்திருந்தார்கள்ஆனால் அதன் பழத்தின் அளவானது நம்ம ஊரைல் இருப்பதைவிட 2 அல்லது 3 மடங்கு அளவில் பெரியதாக‌ இருக்கிறது. இங்கு அல‌ங்காரத்திற்கு வாங்குகிறார்கள். விலையோ நம் ஊர் மதிப்பில்சுமார் ரூ500/‍.

அடடா சின்ன வயசில தேவையில்லாமல் இதனை கசக்கி கசக்கி சொடக்கு போட்டுட்டமே என்று யோசிச்சேன்.